தி. இரா. சுந்தரம்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(டி. ஆர். சுந்தரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார், பரவலாக டி. ஆர். சுந்தரம் அல்லது டி.ஆர்.எஸ் (சூலை 16, 1907 - ஆகத்து 30, 1963) என்பவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து வசதிகளையும் கூடிய சேலத்தை மையமாகக் கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை குறுகிய காலத்தில் தயாரித்து அதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தென்னிந்திய சினிமாத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம், இரட்டைவேட படம், பெரிய பொருட் செலவில் எடுத்த படம் என பல எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார்.[1][2]

டி. ஆர். சுந்தரம்
பிறப்புதிருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்
(1907-07-16)சூலை 16, 1907
கோயம்புத்தூர், இந்தியா
இறப்புஆகத்து 30, 1963(1963-08-30) (அகவை 56)
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

இளமை வாழ்க்கை

தொகு

அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்னும் ஊரில்[3] வசதி வாய்ந்த செங்குந்த கைக்கோளர் மரபு, புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள் சேர்ந்த ஜவுளி வணிகர் வி. வி. சி. இராமலிங்க முதலியார், கணபதி அம்மாள் இணையருக்கு ஐந்தாவது மகனாக 1907 சூலை 16 ஆம் நாள் பிறந்தார். இவரின் அண்ணன் கந்தப்ப முதலியார் திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர். மற்றொரு அண்ணன் வையாபுரி முதலியார். மற்றொரு அண்ணன் வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களைப் புனரமைத்தவர்.[4]

இவர் தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் துணித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். லண்டனில் கிளாடிஸ் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இவரை மணந்து கொள்ள இவர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டிய போது இவர் அண்ணன் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் குடும்பத்தினரை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ராமசுந்தரம், கந்தசுந்தரம் என இரண்டு மகன்கள்.[5]

சினிமாத் துறையில்

தொகு

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய சுந்தரம் தனது குடும்பத் தொழிலில் ஆர்வம் கொள்ளாமல், திரைப்படத்துறை மீது ஆர்வம் கொண்டார். இலண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது 1933 சேலத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம், சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து டி. ஆர். சுந்தரம் பல திரைப்படங்கள் தயாரித்தார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான திரௌபதி வஸ்திராபரணம் (1934), துருவன் (1935), நல்ல தங்காள் (1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சுந்தரத்தின் குழு கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்

தொகு

சுந்தரம் சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணி சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகளான படப்பிடிப்புத் தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். நகைச்சுவை நடிகர்கள் காளி என். ரத்தினம், டி. எஸ். துரைராஜ், வி. எம். ஏழுமலை, ஏ. கருணாநிதி ஆகியோர் இங்கு இவர் நிறுவனத்தில் மாத சம்பளத்துக்குப் பணியாற்றினர். இவர் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். இவர் நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினார். இவர் நிறுவனத்தில் சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கராவ், அஞ்சலி தேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர் படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். செருமனியில் இருந்து வாக்கர், பேய்ஸ் என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களை வரவழைத்தார். இவரிடம் பயிற்சி பெற்ற டபிள்யு ஆர். சுப்பாராவ், ஜே.ஜி. விஜயம் ஆகியோர் பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாக இருந்தனர்.

இவர் இரண்டு முறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக பணியாற்றினார்.[6]

இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

தொகு
  • மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே தமிழ்த் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
  • மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான (பாலன் 1938) என்ற படத்தை உருவாக்கினார்.
  • முதல் சிங்களப் படத்தை எடுத்தது இவரே.
  • தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.
  • 1940 இல் முதல் தமிழ் இரட்டை வேடம் திரைப்படமான உத்தம புத்திரன் என்ற படத்தை இயக்கித் தயாரித்தார்.
  • அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படத்தை 1956-இல் இயக்கித் தயாரித்தார். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” (1961) என்ற பெயரிலும் தயாரித்தார்.
  • எம். என். நம்பியார் பத்து வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் படத்தை இயக்கி, தயாரித்தார்.
  • சுந்தரம் தயாரித்த நாம தேவர் என்ற படம் தமிழில் வெளியான 100ஆவது படம் என்ற பெருமையைப் பெற்றது.
  • இந்தியாவில் வெளிவந்த முதல் அறிவியல் புனைகதை தொடர்புடைய படமான Trip To Moon என்ற படத்தை இவர் இயக்கினார்.[2][7]

மறைவு மற்றும் நினைவுகள்

தொகு

டி. ஆர். சுந்தரம் தனது 56வது வயதில் ஆகஸ்ட் 30, 1963 இல் திடீர் மாரடைப்பால் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது. 2000ஆவது ஆண்டில் வன்னியிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் டி. ஆர். சுந்தரத்திற்கு ஓர் சிலை அமைக்கப்பட்டது. சேலம் டி. ஆர். சுந்தரம் கல்யாண மண்டபத்தில் இவருக்கு முழு உருவ சிலை உள்ளது. 2013 ஆண்டில் இந்திய அரசு இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.[8]

இவர் பற்றிய புத்தகங்கள்

தொகு
  • முதலாளி: 'மார்டன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு(2003) - ரா. வேங்கடசாமி[9][10]
  • மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்(2020) - அறந்தை மணியன்[11]
  • முதலாளி 2013 தினமலர்[12]

மேற்கோள்கள்

தொகு
  1. THROWBACK THURSDAY - T.R, SUNDARAM - FIRST INNOVATIVE PRODUCER OF SOUTH CINEMA
  2. 2.0 2.1 தினமலர். முதலாளி. p. 3 - 70.
  3. Kavitai añcali
  4. "முதலாளி" (in தமிழ்). தினமலர். 2013. https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1. 
  5. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம்
  6. தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவில் ஒரு சிற்றரசர்!
  7. டபுள் ஆக்ட்’ படங்களுக்கு தாத்தா ‘உத்தமபுத்திரன்’; பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்!  80 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை
  8. "தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!" (in தமிழ்). விகடன். 2015. https://www.vikatan.com/government-and-politics/politics/52064-. 
  9. கூகுள் புத்தகம்
  10. புத்தகம்
  11. கூகுள் மின் புத்தகம்
  12. இலவச மின் நூல்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._இரா._சுந்தரம்&oldid=4159264" இலிருந்து மீள்விக்கப்பட்டது