மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை (Jaundice) தோல், நகங்கள், மற்றும் கண்களின் வெள்ளை பகுதி ஆகியவற்றில் மஞ்சள் அல்லது பச்சை நிறமேற்றம் நிகழும் ஒரு சுகாதார நிலையாகும். இரத்தத்தில் பிலிரூபின் எனப்படும் பித்த நிறமி அளவு அதிகரிக்கும் போது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.[1][2] பெரியவர்களில் மஞ்சள் காமாலை பொதுவாக அசாதாரண குருதி வளர்சிதை மாற்றம், கல்லீரல் செயலிழப்பு அல்லது பித்தநீர் பாதை அடைப்பு போன்ற அடிப்படை நோய்கள் இருப்பதைக் குறிக்கும் அறிகுறியாகும்..[3] பெரியவர்களில் மஞ்சள் காமாலையின் பரவலானது அரிதானதாகும். அதே சமயம் குழந்தைகளில் மஞ்சள் காமாலை பொதுவாகத் தோன்றுகிறது. குழந்தைகளின் வாழ்க்கையின் முதல் வாரத்தில் 80% பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4] மஞ்சள் காமாலையின் அறிகுறிகளில் வயிற்று வலி, காய்ச்சல் , குளிர், வெளிர் மலம்[5] மற்றும் மஞ்சள் சிறுநீர் ஆகியவை அடங்கும்.[6]

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
மஞ்சள் காமாலை
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட மஞ்சள்காமாலையில் மஞ்சள் நிறத்தோல்
ஐ.சி.டி.-10 R17.
ஐ.சி.டி.-9 782.4
நோய்த் தரவுத்தளம் 7038
MedlinePlus 003243
MeSH D007565

இரத்தத்தில் சாதாரண பித்த நிறமியின் அளவு 1மில்லிகிராம்/டெசிலிட்டர் என்ற அளவுக்கும் குறைவாக உள்ளது. இரத்தத்தில் பித்த நிறமியின் அளவு 3மில்லிகிராம்/டெசிலிட்டர் என்ற அளவுக்கு அதிகரிப்பது மஞ்சள் காமாலையைக் குறிக்கிறது. குழந்தைகளில், பித்த நிறமியின் அளவு 5மில்லிகிராம்/டெசிலிட்டர் என்ற அளவை எட்டினால், மஞ்சள் காமாலை கண்டறியப்படுகிறது.

மஞ்சள் காமாலைக்கான காரணங்கள் ஒப்பீட்டளவில் தீங்கற்றவையிலிருந்து ஆபத்தானவை வரை வேறுபடுகின்றன. உயர் இரத்த சிவப்பணுக்கள் முறிவு, பெரிய காயங்கள், கில்பெர்ட்சு நோய்க்குறி போன்ற மரபணு நிலைமைகள், நீண்ட காலத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, புதிதாகத் தோன்றிய மஞ்சள் காமாலை அல்லது தைராய்டு பிரச்சனைகள் ஆகியவற்றின் காரணமாக பித்த நிறமிகள் அளவு அதிகரிக்கலாம்.[6][7]

சிரோசிசு எனப்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது கல்லீரல் அழற்சி, நோய்த்தொற்றுகள், மருந்துகள் அல்லது பித்த நாளத்தின் அடைப்பு போன்ற கல்லீரல் நோய்கள் காரணமாக பித்த நிறமிகள் தோன்றலாம்.[6] பித்தப்பைக் கற்கள், புற்றுநோய், அல்லது கணைய அழற்சி உள்ளிட்ட காரணிகளால் மஞ்சள் நிறம் தோன்றும். மற்ற சில நிலைகளாலும் கூட மஞ்சள் நிற சருமம் ஏற்படலாம். ஆனால் கரோட்டின் கொண்ட உணவுகளை அல்லது ரிஃபாம்பின் போன்ற மருந்துகளை அதிக அளவில் சாப்பிடுவதால் உருவாகும் குருதி மஞ்சள் மிகைப்பு உட்பட்ட பிற நிலைமைகள் மஞ்சள் காமாலை நோயல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[6]

மஞ்சள் காமாலைக்கான சிகிச்சையானது பொதுவாக அடிப்படை காரணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.[8] ஒருவேளை பித்தநீர் குழாய் அடைப்பு இருந்தால், பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது; இல்லையெனில், மருத்துவ மேலாண்மை மருத்துவம் அவசியமாகும்.[8] மருத்துவ மேலாண்மை என்பது தொற்று காரணங்களுக்கு சிகிச்சையளிப்பதும் மஞ்சள் காமாலைக்கு பங்களிக்கும் மருந்துகளை நிறுத்துவதும் ஆகிய சிகிச்சைகளை உள்ளடக்கியது ஆகும்.[8] புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பித்த நிறமி உற்பத்தி பெரியவர்களை விட அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையின் முதல் இரண்டு நாட்களில் இரத்த சிவப்பணுவின் விரைவான முறிவு ஏற்படுகிறது. பொதுவாக, கல்லீரல் பித்த நிறமியை இரத்தத்தில் இருந்து நீக்கி செரிமான அமைப்புக்கு நகர்த்துகிறது. இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முதிர்ச்சியடையாத கல்லீரல், அதே அளவு வேகமாக வடிகட்ட முடியாது என்பதால் இரத்தத்தில் பித்த நிறமி உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. பித்த நிறமி அளவு 4-21 மில்லிகிராம்/டெசிலிட்டர் அளவை விட அதிகமாக இருக்கும் போது பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஒளிச்சிகிச்சை அல்லது வயது மற்றும் முன்கூட்டிய பிரசவ காலத்தைப் பொறுத்து குருதியூட்டல் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.[9] உர்சோ டி ஆக்சிகாலிக்கு அமிலம் போன்ற நீர்மங்களை பித்தப்பையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் தோலில் உண்டாகும் அரிப்பு நிலைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.[5] மஞ்சள் நோய் என்ற பொருள் கொண்ட பிரெஞ்சு சொல்லில் இருந்து மஞ்சள் காமாலை என்ற சொல் உருவானது.

அறிகுறிகள்

தொகு
  1. மஞ்சள் தோல் மற்றும் கண்கள்
  2. அடர் நிற சிறுநீர்
  3. வெளிர் அல்லது களிமண் நிற மலம்
  4. வாந்தி மற்றும் குமட்டல்
  5. பசியிழப்பு
  6. வயிற்று வலி
  7. கணிக்க முடியாத எடை இழப்பு
  8. தசை மற்றும் மூட்டு வலி
  9. அதிக காய்ச்சல்
  10. குளிர்
  11. தோல் நமைச்சல்
  • பெரியவர்களிடத்தில் மஞ்சள் காமாலையின் பொதுவான அறிகுறிகள், கண்ணின் வெள்ளைப் பகுதியான விழிவெண்படலமும், தோலும் மஞ்சள் நிறமாக மாறுவது ஆகும்.[10] இது விழிவெண்படல மஞ்சள் காமாலை இருப்புடன் குறைந்தது 3 மி.கி/டெசி லிட்டர் அளவு பித்தநிறமி இருப்பதைக் குறிக்கிறது.[11] அடர் நிற சிறுநீர், வெளிர் அல்லது களிமண் நிற மலம் போன்றவை மற்ற பொதுவான அறிகுறிகள் ஆகும். பித்தநிறமி தோலில் எரிச்சலூட்டும் என்பதால், மஞ்சள் காமாலை பொதுவாக கடுமையான தோல் அரிப்புடன் தொடர்புகொண்டிருக்கும்..[12][13]
  • மஞ்சள் அல்லது பச்சை நிறப் பற்கள் குழந்தை பருவத்தில் மஞ்சள் காமாலையின் மிகவும் குறைவான பொதுவான அறிகுறியாகும். வளரும் குழந்தைகளில், பல் கால்சியமூட்டல் செயல்பாட்டின் போது பித்தநிறமி படிவு காரணமாக பற்களின் மஞ்சள் அல்லது பச்சை நிறமாற்றத்தை அதிபித்தநிறமி ஏற்படுத்தும்.[14]

மஞ்சள் காமாலையின் வகைகள்

தொகு
 
மஞ்சள் காமாலையின் வகைகள்

கல்லீரல் பிலிரூபின் எனப்படும் பித்த நிறமியை எந்த நிலையில் செயலாக்குகிறது என்பதைப் பொறுத்து மஞ்சள் காமாலையின் வகைகள் வகைப்படுத்தப்படுகின்றன.

முன் கல்லீரல் மஞ்சள் காமாலை: இரத்தம் கல்லீரலை அடைவதற்கு முன்பே இவ்வகை மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

கல்லீரல் மஞ்சள் காமாலை: கல்லீரல் திசுக்கள் இரத்தத்தில் இருந்து பிலிரூபினை வடிகட்டுவதில் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறும்போது கல்லீரல் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

கல்லீரலுக்குப் பிந்தைய மஞ்சள் காமாலை: கல்லீரல் பிலிரூபினை வடிகட்டிய பிறகு, பித்த நாளங்கள் அல்லது செரிமானப் பாதையில் அடைப்பு காரணமாக சரியாக வெளியேற முடியாமல், அது உடலை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் போது, ​​கல்லீரலுக்குப் பிந்தைய மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

மஞ்சள் காமாலைக்கான காரணங்கள்

தொகு

பிலிரூபின் எனப்படும் பித்த நிறமியின் வளர்சிதை மாற்றம் மற்றும் வெளியேற்றத்தின் செயல்பாட்டில் மஞ்சள் காமாலை எங்கு நிகழ்கிறது என்பதைப் பொறுத்து காரணங்கள் அமைகின்றன:

முன்-கல்லீரல் மஞ்சள் காமாலை காரணங்கள்

இந்த காரணங்கள் இரத்த சிவப்பணுக்களின் அதிகரித்த முறிவுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தி ஏற்படுகிறது:

இரத்த சோகை அரிவாள் செல் நோய் தலசீமியா மலேரியா

கல்லீரல் மஞ்சள் காமாலை காரணங்கள்

இந்த காரணங்கள் கல்லீரல் பாதிப்பு அல்லது செயலிழப்பு, பித்தநிறமியை வெளியேற்றும் கல்லீரலின் திறனைப் பாதிக்கும். :

மது சார்ந்த கல்லீரல் நோய் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் சிரோசிசு கல்லீரல் புற்றுநோய்

கல்லீரலுக்குப் பிந்தைய மஞ்சள் காமாலை காரணங்கள்

பித்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள், பித்தநிறமியை வெளியேற்றத்தைத் தடுப்பது ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும்:

பித்தப்பைக் கற்கள் பித்த நாளப் புற்றுநோய் கணையப் புற்றுநோய் கணைய அழற்சி

சிகிச்சை

தொகு

மஞ்சள் காமாலை மீட்சியில் உணவுமுறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. கல்லீரலுக்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிட்ரசு பழங்களான எலுமிச்சை, திராட்சைப்பழங்கள் போன்ற புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகளுக்கு மிதமான முதல் கடுமையான மஞ்சள் காமாலை இருந்தால், அடிப்படை மருத்துவ நிலையைப் பொறுத்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, இரத்த சோகையால் ஏற்படும் மஞ்சள் காமாலை உடலில் இரும்புச்சத்தை அதிகரிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு இரும்புச் சத்துக்கள் வழங்கப்படுகின்றன. இரும்புச்சத்து நிறைந்த உணவை அவர்களின் உணவில் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மஞ்சள் காமாலை சிகிச்சையில் சிடீராய்டுகளும் பயன்படுகின்றன. பித்த நாள அடைப்பு போன்ற கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.[8][15][16][17]

பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலை

தொகு

38 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பொதுவானது. குறைப்பிரசவக் குழந்தைகள் அதிகபித்தநிறமி உற்பத்தியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி போதுமான பால் ஊட்டுவது மஞ்சள் காமாலையைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் ஒரு முக்கிய செயல்பாடாகும். ஏனெனில் இது மலம் மற்றும் சிறுநீரில் உள்ள பித்தநிறமியை அகற்ற உதவுகிறது.

ஒளிக்கதிர் சிகிச்சை — குழந்தைகளில் அதிகபித்தநிறமி மஞ்சள் காமாலைக்கு ஒளிக்கதிர் சிகிச்சை மிகவும் பொதுவான ஒரு மருத்துவ சிகிச்சையாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒளிக்கதிர் சிகிச்சை மட்டுமே தேவைப்படும் சிகிச்சையாகும். இச்சிகிச்சை குழந்தையின் உடலில் இருந்து பித்தநிறமியை மலம் மற்றும் சிறுநீரில் எளிதாக வெளியேற்றக்கூடிய சேர்மங்களாக உடைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Jaundice. Archived from the original on 27 August 2016. Retrieved 13 August 2016. {{cite book}}: |website= ignored (help)
  2. Buttaro TM, Trybulski JA, Polgar-Bailey P, Sandberg-Cook J (2012). Primary Care: A Collaborative Practice (in ஆங்கிலம்) (4th ed.). Elsevier Health Sciences. p. 690. ISBN 978-0-323-07585-5. Archived from the original on 2017-09-08.
  3. Al-Tubaikh JA (2017). Internal Medicine. doi:10.1007/978-3-319-39747-4. ISBN 978-3-319-39746-7.
  4. "Hereditary Contribution to Neonatal Hyperbilirubinemia". Fetal and Neonatal Physiology (Elsevier): 933–942.e3. 2017. doi:10.1016/b978-0-323-35214-7.00097-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-35214-7. 
  5. 5.0 5.1 "Jaundice associated pruritis: a review of pathophysiology and treatment". World Journal of Gastroenterology 21 (5): 1404–1413. February 2015. doi:10.3748/wjg.v21.i5.1404. பப்மெட்:25663760. 
  6. 6.0 6.1 6.2 6.3 Roger J (2004). Oxford Textbook of Primary Medical Care (in ஆங்கிலம்). Oxford University Press. p. 758. ISBN 978-0-19-856782-0. Archived from the original on 2017-09-08.
  7. "Diagnostic approach to the patient with jaundice". Primary Care 38 (3): viii, 469–482. September 2011. doi:10.1016/j.pop.2011.05.004. பப்மெட்:21872092. 
  8. 8.0 8.1 8.2 8.3 Ferri FF (2014). Ferri's Clinical Advisor 2015: 5 Books in 1 (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 672. ISBN 978-0-323-08430-7. Archived from the original on 2017-09-08.
  9. "Managing the jaundiced newborn: a persistent challenge". CMAJ 187 (5): 335–343. March 2015. doi:10.1503/cmaj.122117. பப்மெட்:25384650. 
  10. "A Systematic Approach to Patients with Jaundice". Seminars in Interventional Radiology 33 (4): 253–258. December 2016. doi:10.1055/s-0036-1592331. பப்மெட்:27904243. 
  11. Reuben A (2012). "Jaundice". Textbook of Clinical Gastroenterology and Hepatology (in ஆங்கிலம்). John Wiley & Sons, Ltd. pp. 84–92. doi:10.1002/9781118321386.ch15. ISBN 978-1-118-32138-6.
  12. James WD (2006). Andrews' diseases of the skin : clinical dermatology. Berger, Timothy G.; Elston, Dirk M.; Odom, Richard B. (10th ed.). Philadelphia: Saunders Elsevier. ISBN 0-7216-2921-0. கணினி நூலகம் 62736861.
  13. "Jaundice associated pruritis: a review of pathophysiology and treatment". World Journal of Gastroenterology 21 (5): 1404–1413. February 2015. doi:10.3748/wjg.v21.i5.1404. பப்மெட்:25663760. 
  14. Neville BW (2012). Oral and Maxillofacial Pathology (3rd ed.). Singapore: Elsevier. p. 798. ISBN 978-981-4371-07-0.
  15. "Obstructive jaundice and perioperative management". Acta Anaesthesiologica Taiwanica 52 (1): 22–29. March 2014. doi:10.1016/j.aat.2014.03.002. பப்மெட்:24999215. 
  16. Dixon E, Vollmer CM, May GR, eds. (2015). Management of Benign Biliary Stenosis and Injury. doi:10.1007/978-3-319-22273-8. ISBN 978-3-319-22272-1.
  17. "Management of Malignant Biliary Obstruction". Seminars in Interventional Radiology 33 (4): 259–267. December 2016. doi:10.1055/s-0036-1592330. பப்மெட்:27904244. 

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_காமாலை&oldid=4231095" இலிருந்து மீள்விக்கப்பட்டது