ராஜகுமாரி (திரைப்படம்)

ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

ராஜகுமாரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
எஸ். கே. மொக்தீன்
வசனம்மு.கருணாநிதி
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, சி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்
ஒளிப்பதிவுடபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
படத்தொகுப்புடி. துரைராஜ்
வெளியீடுஏப்ரல் 11, 1947
நீளம்14805 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1]

திரைக்கதை

தொகு

ராஜகுமாரி மல்லிகா (கே. மாலதி) தன்னை மணக்கத் துடிக்கும் ஆலகாலனை (டி. எஸ். பாலையா) அலட்சியப்படுத்துகிறாள். வழக்கமாக வேட்டைக்குச் செல்லும் மல்லிகாவுக்கு ஒருநாள் சுகுமாரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) சந்தித்துக் காதல் கொள்கிறாள். அது தொடர்ந்து நாள்தோறும் நடைபெறுகிறது. பெரிய இடத்து விடயம், இது ஆபத்து அணுகாதே என்ற தாயின் (எம். எம். ராதாபாய்) உபதேசத்தைத் தட்டிகழிக்கும் தைரியம் அவனுக்கில்லை. இதனால் மல்லிகா கைவிடப்படுகிறாள்.[3]

ராஜகுமாரியின் நினைவில் வாடிய ஆலகாலன் அவளை எப்படியும் தன்வசப்படுத்த ஒரு மந்திரவாதியைத் தேடுகிறான். தனக்கு ஒரு அழகியைத் தேடி அலைந்த மந்திரவாதியைச் (எம். ஆர். சுவாமிநாதன்) சந்தித்து விவரம் கூறுகிறான். மந்திரவாதி ஆலகாலனையும் ஏமாற்றி மல்லிகாவைக் கவர்ந்து செல்லுகிறான். மல்லிகாவை மீட்பவருக்கு அவளையே பரிசாகத் தரப்படும் என்று உத்தரவு பிறக்கிறது. அதுகண்ட சுகுமார் தாயின் ஆணைபெற்றுக் கிளம்புகிறான். சர்ப்பத் தீவை அடைந்த சுகுமாருக்கு பாப்பாட்டியின் பிள்ளைகள் பகு (நம்பியார்), பகுனி (எம். எஸ். சிவபாக்கியம்) ஆகியோரின் நல்ல துணை கிடைக்கிறது. விஷாராணி (கே. தவமணிதேவி) நடத்தும் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் கப்பல் கிடைக்கும் என்பது பகுவின் யோசனை. போட்டியில் சுகுமாருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த வெற்றியில் குறுக்கிடும் ஆலகாலன்யும் முறியடிக்கிறான். அன்றிரவு விஷாராணி தன்னை காமக்கப்பலில் ஏற்றிச் செல்லுமாறு சுகுமாரை வற்புறுத்துகிறாள். அவன் மறுக்கிறான். தன் இச்சைக்கு இணங்காத ஒரு தூசிகூட உலகத்தில் இருக்க முடியாது என அவள் கூச்சலிடுகிறாள். பகுவும் பகுனியும் அங்குதோன்றி சுகுமாரைக் காப்பாற்றுகின்றனர்.[3]

நடிகர்கள்

தொகு

இப்பட்டியல் ராஜகுமாரி திரைப்படப் பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[3]

நடிகர்கள்

நடிகைகள்

இசை - பாடல்கள்

தொகு

உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[4] எம். ஜி. இராமச்சந்திரனுக்காக எம். எம். மாரியப்பா பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.

ராஜகுமாரி திரைப்படப் பாடல்கள்[3]
எண். பாடல் பாடியோர் ராகம்-தாளம் நீளம்
1 வாழ்வோம் வாழ்வோம் கே. மாலதி, குழுவினர் - 02:12
2 பாட்டையென்ன சொல்வேன் பாங்கி டி. வி. ரத்தினம், கே. வி. ஜானகி இராகமாலிகை (பைரவி, தோடி, கேதாரகௌளை) - ஆதி 03:27
3 அன்பின் பெருமை அருமை எம். எம். மாரியப்பா, கே. வி. ஜானகி இராகமாலிகை (ஆனந்தபைரவி, பகுதாரி, ஹேமாவதி) - ஆதி 03:11
4 அரசகுமாரி அன்புறும் சினேகம் - குந்தலவராளி - ஆதி -
5 திருமுக எழிலைத் திருடிக் கொண்டது எம். எம். மாரியப்பா, கே. மாலதி - 02:53
6 நேரமிதே நேசன் குணவிலாசன் கே. வி. ஜானகி தேசிய கீரவாணி 02:13
7 கண்ணாரக் காண்பதென்றோ எம். எம். மாரியப்பா சிந்துபைரவி - ஆதி 02:09
8 காசினிமேல் நாங்கள் வாழ்வதே திருச்சி லோகநாதன் - -
9 மா மயிலென நடனமாடுகிறாளின்னாள் எம். எம். மாரியப்பா - 03:06
10 மாரன் அவதாரம் எம். எம். மாரியப்பா சாருகேசி - ஆதி 03:15
11 பாம்பாட்டிச் சித்தனையே - - 02:59
12 மோக மானேனே கே. மாலதி - -

வசனம்

தொகு

இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[5] படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.

ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.[6]

கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.[6]

தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்."[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர்". தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2014.
  2. 2.0 2.1 ராண்டார் கை (செப்டம்பர் 5, 2008). "Rajakumari 1947". The Hindu. Archived from the original on 1 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 ராஜகுமாரி பாட்டுப் புத்தகம், 1947, கலைமகள் பிரசு, கொழும்பு
  4. "எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  6. 6.0 6.1 ஆர்.சி.ஜெயந்தன் (10 ஆகத்து 2018). "அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2018.
  7. கலைஞர் மு. கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி. Vol. 1. திருமகள் நிலையம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகுமாரி_(திரைப்படம்)&oldid=4074455" இலிருந்து மீள்விக்கப்பட்டது