எம். எஸ். எஸ். பாக்கியம்

(எம். எஸ். சிவபாக்கியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். எஸ். எஸ். பாக்கியம் (M. S. S. Bhagyam, பிறப்பு: மே 12, 1926) ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகையாவார். 1945 - 1970 காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை, வில்லி வேடங்களில் நடித்துள்ளார்.

எம். எஸ். எஸ். பாக்கியம்
பிறப்பு(1926-05-12)12 மே 1926
மருங்காபுரி, திருச்சி, இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநடிகை
பெற்றோர்நல்லசிவம் பிள்ளை, செல்லம்மாள்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு
 
எம். எஸ். எஸ். பாக்கியம் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் லலிதாவுடன் தோன்றும் காட்சி
 
வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதர் நம்பியாருடன் பாக்கியம்

பாக்கியத்தின் இயற்பெயர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்பதாகும். இவர் மே 1926 இல் திருச்சி மருங்காபுரி என்னும் ஊரில் அவ்வூர் சமீன்தாரின் மேலாண்மையாளராகப் பணியாற்றிய நல்லசிவம் பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவருக்கு ஒன்றரை வயதான போதே தாயார் செல்லம்மாள் இறந்து விட்டார். அதன் பின்னர் செல்லம்மாளின் தாயார் இரு பேத்திகளையும் வளர்த்து வந்தார்.[1] மருங்காபுரியில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அப்போது பாக்கியத்தின் பாட்டனார் இறக்கவே, பாட்டியால் அவரை மேலும் படிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் வளையாபட்டியில் சடையப்ப கொத்தனார் என்பவர் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். அக்கம்பனியில் பாக்கியம் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அக்கம்பனி மூடப்படவே, இவர் கோட்டயம் பி. கைலாசம் ஐயர் என்பவரிடம் முறைப்படி கருநாடக இசை பயின்றார்.[1] அப்போது டி. பி. பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பனி பொன்னமராவதிக்கு வந்தது. உடனேயே அக்கம்பனியில் சேர்ந்து கொண்டார் பாக்கியம். அக்கம்பனியின் இழந்த காதல் நாடகத்தில் சரோஜா என்ற பாத்திரத்தில் நடித்தார். கண்டிராஜா, இராமாயணம் ஆகிய நாடகங்களிலும் நடித்தார். சில காலத்தில் இக்கம்பனி என்னெஸ்கே நாடகக் கம்பனியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து பாக்கியம் அங்கிருந்து விலகினார்.[1]

வைரம் அருணாசலம் செட்டியார் "சிறீ ராம பாலகான சபா" என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தார். பாக்கியமும் பாட்டியிடம் அனுமதி பெற்று கம்பனியிலே சேர்ந்தார். காரைக்குடி சண்முக விலாசு அரங்கில் நடந்த பக்த சாருகதாசர் நாடகத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்தார். தாகசாந்தி நாடகத்தில் கதாநாயகியாகவும், திருமழிகை ஆழ்வார், குடும்ப வாழ்க்கை, விஜயநகர சாம்ராச்சியம், செயிண்ட் பிலோமினா, எதிர்பார்த்தது ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார். காரைக்குடி, திருச்சி, திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றிய வைரம் கம்பனி 1945 இல் சென்னைக்கு வந்து ஓராண்டு தங்கியிருந்து நாடகங்களை நடத்திய போது பாக்கியமும் அவர்களது நாடகங்களில் பங்கேற்று சென்னை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.[1]

திரைப்படங்களில் நடிப்பு

தொகு

திருச்சி ஓ. ஆர். பாலு என்பவரின் சிபாரிசில் ஜுப்பிட்டரின் ஒப்பந்த நடிகையானார் பாக்கியம். வித்யாபதி (1946) இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும். அதில் நாராயண பாகவதரின் (எம். என். நம்பியார்) மனைவியாகத் தோன்றி நடித்தார். ராஜகுமாரியில் பகுணியாக நடித்தார். தொடர்ந்து கஞ்சன், அபிமன்யு, மோகினி (காளியம்மாவாக), வேலைக்காரி, கன்னியின் காதலி (மேகலையின் தோழி சிங்காரமாக), விஜயகுமாரி (விசித்ரமாக), கிருஷ்ண விஜயம்[1] உட்பட நான்கு ஆண்டுகளுள் ஜுபிட்டரின் 11 படங்களில் நடித்துப் புகழடைந்தார். ஜுபிட்டரின் ஏக்த ராஜா (இந்தி மர்மயோகி) இந்தித் திரைப்படத்திலும் நடித்தார்.[2]

சொந்த வாழ்க்கை

தொகு

எம். எஸ். எஸ். பாக்கியம் 1949 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை, குளிப்பிரையைச் சேர்ந்தவரும், கொழும்பு வணிகருமான இராமநாதன் செட்டியாரின் வளர்ப்பு மகனான எஸ். ஆர். எம். எஸ். லட்சுமணன் செட்டியார் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.[1] பாக்கியம் திருச்சி வானொலி நிலையத்தினரின் வானொலி நாடகங்களிலும் நடித்திருந்தார்.[2]

நடித்த சில படங்கள்

தொகு
  1. வித்யாபதி (1946)
  2. கஞ்சன் (1947)
  3. அபிமன்யு (1948)
  4. மோகினி (1948)
  5. வேலைக்காரி (1949)
  6. கன்னியின் காதலி (1949)
  7. விஜயகுமாரி (1950)
  8. கிருஷ்ண விஜயம் (1950)
  9. மர்மயோகி (1951)
  10. ராணி (1952)
  11. மாப்பிள்ளை (1952)[3]
  12. சிங்காரி (1954)
  13. தூக்கு தூக்கி (1954)
  14. கல்யாணம் செய்துக்கோ (1955)
  15. நல்ல தங்கை (1955)
  16. மேனகா (1955)
  17. சதாரம் (1956)
  18. உத்தம புத்திரன் (1958)
  19. திருமணம் (1958)
  20. மகாலட்சுமி (1960)
  21. பலே பாண்டியா (1962)
  22. அன்னை (1962)
  23. ஏழை பங்காளன் (1963)
  24. அன்பே வா (1965)
  25. தாலி பாக்கியம் (1966)
  26. கறுப்புப் பணம் (1967)
  27. முத்துச் சிப்பி (1968)
  28. பூவும் பொட்டும் (1968)
  29. ராஜா வீட்டுப் பிள்ளை (1969)
  30. கண்ணன் என் காதலன் (1970)
  31. நடு இரவில் (1970)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "'பகுணி சிங்கார விசித்ரம்' பாக்கியம்". பேசும் படம்: பக். 10-18. ஆகத்து 1949. 
  2. 2.0 2.1 "எம். எஸ். எஸ். பாக்கியம் வாழ்க்கை வர்ணனை". குண்டூசி: பக். 10-14, 58-62. மார்ச் 1951. 
  3. ராண்டார் கை (4 மே 2013). "Maappillai (1952)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/maappillai-1952/article4683463.ece. பார்த்த நாள்: 8 அக்டோபர் 2016. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._எஸ்._பாக்கியம்&oldid=4167134" இலிருந்து மீள்விக்கப்பட்டது