முதன்மை பட்டியைத் திறக்கவும்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954மே 17[1] அல்லது மே 18[2] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

வேலுப்பிள்ளை பிரபாகரன்
Prabhakaran.jpg
பிறப்பு: நவம்பர் 26, 1954(1954-11-26)
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை
இயக்கம்: தமிழீழ விடுதலைப் புலிகள்
பணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
வாழ்க்கைத் துணை மதிவதனி
பிள்ளைகள் சார்ல்சு அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன்

உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது[3]. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்[1]. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்[1]. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது [4]. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

சிறுவயது அனுபவங்கள்தொகு

பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்தொகு

பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.

பிரபாகரன் கூற்றுக்கள்தொகு

 • "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." [5]
 • 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [6]
 • "ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [7]
 • "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.[8]
 • "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [7]
 • "ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [9]
 • "செய் அல்லது செத்துமடி."

பிரபாகரன் சிற்பம்தொகு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தெற்குப்பொய்கைநல்லூர் [10] எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.[11][12]

2015 ஜூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர்.[13]

விழுப்புரம் மாவட்டம் சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010ல் கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர்.[14]

தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து ஜூன் 2015ல் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார்.[10] அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார்.[10] வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.[15]

ஊடகங்களில்தொகு

தபால்தலை வெளியீடுதொகு

பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.[16] இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.[17]

குற்றச்செயல்கள்தொகு

வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்[18]. மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது[19].

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார்". தமிழ்வின். 24 மே 2009. http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e. பார்த்த நாள்: 2009-05-25. 
 2. "LTTE chief Prabhakaran killed: Lanka army sources". Times of India (May 18, 2009). பார்த்த நாள் 2009-05-18.
 3. Prabhakaran Killed (டெய்லி நியூஸ்) பிரபாகரனின் உடலை மே 19 காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது
 4. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009
 5. Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
 6. 'I always give less importance to speech, Only after growing up in action that we should begin speaking.' -Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
 7. 7.0 7.1 கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 15.
 8. கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கங்கள் 15.
 9. கேணல் சூசை. "காலத்தை வென்ற காவிய நாயகன்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 17.
 10. 10.0 10.1 10.2 http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=144685
 11. http://www.vikatan.com/news/tamilnadu/47533.art?artfrm=related_article
 12. http://m.dailyhunt.in/news/india/tamil/newsbuzzaar-epaper-newsdige/birabakaranukku-koyil-kattiya-timuga-biramukar-kadchi-nadavadikkai-edukkuma-newsid-40406399
 13. நாகை அருகே அய்யனார் கோயிலில் வைக்கப்பட்ட பிரபாகரன் சிலை அகற்றம்
 14. விழுப்புரம் அருகே வீரப்பன், பிரபாகரன் சிலைகளை கோயிலில் வைத்து வழிபட்ட மக்கள்
 15. http://www.dailythanthi.com/News/State/2015/06/08010645/MDMK-On-behalf-of-the-protest-tomorrow.vpf
 16. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவத்துடன் தபால் தலை வெளியீடு இந்நேரம்.கொம் இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011
 17. 'பிரான்ஸின் பிரபாகரன் தபால் முத்திரை' பிபிசி தமிழோசை இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011
 18. "Wanted: VELUPILLAI, Prabakaran". Interpol (2006-10-04). பார்த்த நாள் 2006-10-06.[தொடர்பிழந்த இணைப்பு]
 19. "Rajiv murder suspects sentenced to death". Brcslproject.gn.apc.org. பார்த்த நாள் 2009-05-17.

இவற்றையும் பார்க்கதொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு