தமிழீழ விடுதலைப் புலிகள்

(விடுதலைப் புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.[1][2][3] இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.[4][5][6] இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.[4][5]

தமிழீழ விடுதலைப் புலிகள்

சின்னம்
தொடக்கம் 1978
நாடு ஈழம்
கிளை கட்டுரையைப் பார்க்க
வகை தரை, கடல், வான் படைகள்
புனைபெயர் புலிகள்
குறிக்கோள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
விழா மாவீரர் நாள் - நவம்பர் 27
போர்கள் ஈழப் போர்
போர் விருதுகள் மாவீரர்
கட்டளைத் தளபதிகள்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
உளவுத்துறை பொட்டு அம்மான்
கடற்படை கேணல் சூசை
அரசியல் துறை பா. நடேசன்

இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி மக்களாட்சி வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் வரலாறு

தோற்றமும் வளர்ச்சியும்

 
விடுதலைப்புலிகள் வெளியிட்ட அடையாளச் சின்னம் (கடன் மீட்பு)[7]

விடுதலைப் புலிகள் அமைப்பு மே 5 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் பற்றின்பையுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் அலுவல் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.[8]

1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.[9] அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.[10] சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.[8][10]


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.[10] புலிகள் தமிழர் சிக்கலுக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போராட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது.[11] இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.

1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், பட்டாள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி[12] இலங்கை பட்டாளத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 பட்டாளத்தினரைக் கொன்றனர்.

இந்திய படைக் காலம்

1987 ஆம் ஆண்டு இலங்கை பட்டாளம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஆப்பரேசன் லிபரேசன் (operation liberation) என்ற பட்டாள நடவடிக்கையை தொடங்கியிருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற ஏதிலிகளாலும்[8] இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பந்தத்தில் ஏற்பாடாகியிருந்தது.[13]

பல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும்,[14] புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[15] இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய ஊளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது. இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படைத் தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்தியப் பட்டாளத்திற்கும் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு[16] பல பட்டாாள நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படை(IPKF)யின் செல்வாக்கு குறைந்தது.[17][18]

பல ஆயிரம் தமிழ் பொதுமக்களைக் கொன்றதாகவும், சில ஆயிரம் தமிழ் பெண்களை வன்புணர்ந்ததாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும்(IPKF) புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு, பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.

ஈழப் போர் II

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.[19]

1990களில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈழப் போர் III

 
கிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கிள் அணியொன்று 2004

1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர்.[20] இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.[21] மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.[22] யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

2001 போர் நிறுத்தம்

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.

டிசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

ஈழப் போர் IV

முதன்மைக் கட்டுரை: நான்காம் ஈழப்போர்

2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.[23]

புலிகளின் உள் கட்டமைப்பு

 
கடற்புலிகளின் விசைவேகப் படகு

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையனைத்தும் பிரபாகரன் தலைமையிலான மையத் தலைமையகத்தால் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.

அரசியல்துறை

படைத்துறை

முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் படையணிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

படைத்துறை அதிகார படிநிலை

விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது.

மாவீரர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.

பெண் புலிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல பொறுப்புகளில் இருந்து போராடினர். அவர்களில் 1991 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழினி என்ற வீர மங்கை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தனது கடைசி நாளில் புற்று நோய்க்கு பலியானார்.

கொள்கைகள்

முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் கொள்கைகள்

  • தன்னாட்சி
  • மரபுவழித் தாயகம்
  • தமிழ்த் தேசியம்
  • இயக்க ஒழுக்கம்
  • சாதிபேதமற்ற சமூகம்
  • சம பெண் உரிமைகள்
  • சமய சார்பின்மை
  • தனித்துவமான சமவுடமை

தற்போதையநிலை

16 அக்டோபர் 2014 - ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மீதான தனது தடையை நீக்கியது

புலிகள் நோக்கி விமர்சனங்கள்

முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் இன்றியமையாதது.

  • புலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை
  • புலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை
  • புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை
  • தம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்
  • வன்முறையாக சட்டத்தை மீறுதல்
  • ஏக பிரதிநிதித்துவம் நிலைப்பாடு
  • ஜனநாயக விழுமியங்களைப் பேணாமை
  • இறுக்கமான மூடிய கட்டமைப்பு
  • பாசிசப் போக்கு
  • பயங்கரவாத செயற்பாடுகள்
  • சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல்
  • கட்டாய ஆள் சேர்ப்பு
  • தமிழ் இனவாதத்தை ஊக்குவித்தல்
  • முஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்
  • பண்பாட்டு கட்டுப்பாடுகள்

இவ்வாறன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் புலிகள் தமிழர்களின் ஒரு தேசிய அமைப்பாகவே காணப்படுகின்றனர்

மேற்கோள்கள்

  1. Sherman, Jake (2003). The Political Economy of Armed Conflict: Beyond Greed and Grievance. New York: Lynne Rienner Publishers. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58826-172-4.
  2. Thiranagama, Sharika (2011). In My Mother's House: Civil War in Sri Lanka. University of Pennsylvania Press. p. 108.
  3. Åke Nordquist, Kjell (2013). Gods and Arms: On Religion and Armed Conflict. Casemate Publishers. p. 97.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "SCENARIOS-The end of Sri Lanka's quarter-century war". Reuters. 16 May 2009. http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL391456. 
  5. 5.0 5.1 "Sri Lanka Rebels Concede Defeat". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (கொழும்பு). 17 May 2009 இம் மூலத்தில் இருந்து 2012-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120202164325/http://www.voanews.com/english/news/a-13-2009-05-17-voa11-68644392.html. 
  6. "Sri Lanka – Living With Terror". Frontline (PBS). May 2002. http://www.pbs.org/frontlineworld/stories/srilanka/thestory.html. பார்த்த நாள்: 9 February 2009. 
  7. "LTTE Gold Token". Lakdiva. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 8.0 8.1 8.2 "Tamil Militant Groups". Sri Lanka: A Country Study. 1988. http://countrystudies.us/sri-lanka/72.htm. பார்த்த நாள்: 2007-05-02. 
  9. O'Ballance, Edgar (1989). The Cyanide War: Tamil Insurrection in Sri Lanka 1973-88. London: Brassey's. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-036695-3.
  10. 10.0 10.1 10.2 O'Ballance, p.62
  11. M.R. Narayan Swamy, Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers, 2002[page # needed]
  12. Harrison, Frances (2002-11-26). "'Black Tigers' appear in public". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2516263.stm. பார்த்த நாள்: 2007-09-02. 
  13. The Peace Accord and the Tamils in Sri Lanka. Hennayake S.K. Asian Survey, Vol. 29, No. 4. (April 1989), pp. 401-415.
  14. O'Ballance, 91
  15. O'Ballance, p.94
  16. O'Ballance, p.100
  17. "Statistics on civilians affected by war from 1974 - 2004" (PDF). NESOHR. Archived from the original (PDF) on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
  18. "History of the Organisation". University Teachers for Human Rights.
  19. Sri Lanka; Back to the jungle, The Economist, June 23, 1990
  20. "A LOOK AT THE PEACE NEGOTIATIONS". Inter Press Service. 2003. http://ipsnews.net/srilanka/timeline.shtml. பார்த்த நாள்: 2007-05-02. 
  21. Jaffna falls to Sri Lankan army, BBC News, December 5, 1995
  22. V. S. Sambandan (April, 2000). "The fall of Elephant Pass". Hindu Net. Archived from the original on 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2007-11-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  23. Saroj Pathirana (நவம்பர் 23, 2005). "LTTE supported Rajapakse presidency?". BBC News. {{cite web}}: Check date values in: |date= (help)

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விடுதலைப் புலிகள் ஆதரவு தளங்கள்
இலங்கை அரசு ஆதரவுத் தளங்கள்
பன்னாட்டு அமைப்புகள்
பன்னாட்டு ஊடகங்கள்