தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, දෙමල ඊලම්) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களையும் புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய நிலப்பகுதியை குறிப்பதாகும்.

தமிழீழம்
கோரப்பட்ட நாடு
தமிழீழம்
தமிழீழத்திற்காகக் கோரப்பட்ட நிலப்பரப்பு
தமிழீழத்திற்காகக் கோரப்பட்ட நிலப்பரப்பு
தலைநகர்திருக்கோணமலை
பெரிய நகரம்திருக்கோணமலை
மாவட்டங்கள்
பரப்பளவு[1]
 • மொத்தம்21,952 km2 (8,476 sq mi)
 • நிலம்20,533 km2 (7,928 sq mi)
 • நீர்1,419 km2 (548 sq mi)  6.46%
மக்கள்தொகை (2009)[2]
 • மொத்தம்34,96,000
 • அடர்த்தி160/km2 (410/sq mi)
இனம்(1981)[3]
 • தமிழர்1,189,000 (1981) – 1,388,828 (2001)
 • சிங்களவர்45,000 (1981) – 685,896 (2011)
 • முஸ்லிம்கள்415,267 (16.11%)
 • இந்தியத் தமிழர்76,905 (2.98%)
 • பரங்கியர், வேடுவர்10,292 (0.40%)
சமயம்(1981)[4]
 • இந்து1,251,742 (48.57%)
 • பௌத்தம்498,938 (19.36%)
 • முசுலிம்422,239 (16.38%)
 • கத்தோலிக்கம்381,679 (14.81%)
 • ஏனைய22,590 (0.88%)
அதிகாரபூர்வ மொழிதமிழ்

தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பட்ட உணர்வாகும்.

தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.

பெயர்த் தோற்றம்

தொகு

முதலில்‌ “ஈழத்‌ தமிழகம்‌" என்ற சொல்தான்‌ வழக்கில்‌ இருந்தது. ஈழ தேசியப்பண் பாடிய பரமஹம்ச தாசர்[5],

"வாழ்க "ஈழத்‌ தமிழகம்‌"
வாழ்க இனிது வாழ்கவே!"

என்று பாடினார்‌.

பிறகு "தமிழிலங்கை" என்ற சொல்‌லும்‌ வழங்கப்பட்டது. 1960ஆம்‌ ஆண்டில்‌ பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன் படித்தபோது சி. பா. ஆதித்தனார். அவர்களின்‌ தொடர்பு. ஏற்பட்டது. அப்போது அவரைப்‌ பற்றி எழுதிய பாடலில்‌ இச்சொல்லைப்‌ பயன்படுத்தினார்‌.[5]

"அலைகடலுக்கு அப்பாலும்‌

"தமிழிலங்கை" மண்ணில்‌

அரசமைக்க வழி சொன்னான்‌

அவனன்றோ தலைவன்‌"

1972ஆம்‌ ஆண்டு, மே மாதம்‌, 19ஆம்‌ நாள்‌ மட்டக்களப்பில்‌ தமிழர்‌ கூட்டணி அமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின்‌ பொறுப்பைக்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன்‌ ஏற்றிருந்தார்‌. மாநாட்டு மேடையில்‌ கட்டப்பட்டிருந்த பதாகையில்,[5]

""தமிழீழம்‌" தமிழர்‌ தாகம்‌"

எனப்‌ பெரிதாக எழுதிக்‌ கட்டியிருந்தார்‌, மாநாட்டில்‌ கலந்துகொண்ட தலைவர்களையும்‌ மக்களையும்‌ இச்‌ சொற்றொடர்‌ மிகவும்‌ கவர்ந்தது. மக்களிடையே "தமிழீழம்‌'" என்ற சொல்‌ நாளடைவில்‌ பரவி நிலைத்தது.

சுயநிர்ணய உரிமைப் போர்

தொகு

தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போராக, ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்

தொகு

இந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.

மே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.

இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறை

சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்

தொகு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு சனவரி 2, 2008 அன்று அறிவித்தது[6][7].

அரசியல் அமைப்பு

தொகு

தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

தமிழீழத்தில் முஸ்லீம்கள்

தொகு

தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முசுலிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முசுலிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முசுலீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.[8]

தமிழீழத்தில் சிங்களவர்

தொகு

ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.

தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.[9]

தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை

தொகு

இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது.

சமூக அமைப்பு

தொகு

தமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது.

தமிழீழ மொழிகள்

தொகு

தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. [சான்று தேவை] ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.

தமிழீழத்தில் சமயங்கள்

தொகு

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பௌத்தம், முசுலீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.

கல்வி

தொகு

தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பொருளாதாரம்

தொகு

தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.

உலகமயமாதல்

தொகு

நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.

தமிழீழ மாவட்டங்கள்

தொகு

தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:

தமிழீழ தேசிய சின்னங்கள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2010. Department of Census & Statistics.
  2. "Estimated mid year population by district, 2005–2009" (PDF). Statistical Abstract 2010. Department of Census & Statistics.
  3. "Population by ethnic group and district, Census 1981, 2001" (PDF). Statistical Abstract 2010. Department of Census & Statistics.
  4. "Population by religion and district, Census 1981, 2001" (PDF). Statistical Abstract 2010. Department of Census & Statistics.
  5. 5.0 5.1 5.2 தமிழீழம் சிவக்கிறது, பழ. நெடுமாறன்
  6. போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்
  7. Colombo to annul CFA
  8. [செவ்விகள்]. Interview with ஆனந்தி சூரியப் பிரகாசம். பிரபாகரன் செவ்விகள் - 1994 இல் வழங்கப்பட்ட செவ்வி. பி.பி.சி. தமிழோசை. 1 வானொலியில் கண்ட செவ்வி. 2009 இணையத்தில். Retrieved on 8 August 2013.
  9. Suraj A.Bandara (22 April 2013). "Peace brings new lease of life to Trincomalee". 22 April 2013 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130426231827/http://www.dailynews.lk/2013/04/22/news25.asp. பார்த்த நாள்: மே 13, 2013. 

துணை நூல்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தமிழீழம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்

தொகு

தமிழீழ வரைபடங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழீழம்&oldid=4050425" இலிருந்து மீள்விக்கப்பட்டது