வேடுவர் (இலங்கை)
வேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கைக் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.
பாடசாலைச் செல்லும் ஒரு வேடுவக் குழந்தை | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
2,500 (2002)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இலங்கை 2,500 (2002) | |
மொழி(கள்) | |
தமிழ், சிங்களம் கலந்த வேடுவ மொழி, | |
சமயங்கள் | |
பலதெய்வ வழிபாடு, இந்து (பௌத்தம்அறிமுகப்படுத்தப்படுகிறது) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழ், சிங்களம் |
இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.[2]
இலங்கைக் காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அண்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகள் உள்ளன.[3]
பேசும் மொழி
தொகுதற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிப் பிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்குக் கரையோரப் பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அண்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.[4]
வரலாறு
தொகுஇவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.
தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.
ஆரம்பக் காலங்களில் மட்டுமன்றி தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.
பிரேமதாசா ஆட்சி
தொகுஇலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமைத் தகுதிகளையும் வழங்கினார்.
பண்பாடு
தொகுமற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் எந்தப் பொருட்களையும் எண்ணுவதற்கு விரல்களுக்குப் பதில் காடுகளில் கிடைக்கும் சிறிய குச்சுகளைச் சேகரித்து அதன் மூலம் கணக்கிடுகிறார்கள்.[5]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.ethnologue.com/show_language.asp?code=ved
- ↑ "இலங்கையின் வேடுர் தென்னிந்திய திராவிட மரபினர்". Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2011-04-03.
- ↑ இலங்கை: ஆதிகுடி வேடுவர்
- ↑ "They spoke a non Aryan language". Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2011-04-03.
- ↑ வகுப்பறைக்கு வெளியே: விரல் விட்டு எண்ண ஆயிரம் ஆண்டுகள் தி இந்து தமிழ் 05 அkடோபர் 2016
வெளியிணைப்புக்கள்
தொகுA great deal of information on them can be found at Vedda.org