ஒளியமைப்பு
பார்வை மனித வாழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதனால் பார்வைப் புலனுக்கு அவசியமான ஒளி மனிதனுக்கு மிகவும் அடிப்படையான, அவசியமான ஆற்றல்களுள் ஒன்றாகிறது. மனிதனுடைய பல்வேறு வகையான தேவைகளுக்காக ஒளியை வழங்குவதற்கான தொழில் நுட்பமே ஒளியமைப்பு ஆகும்.
ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடுகளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன.[1][2][3]
மின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது.
நவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம்.
இயற்கை ஒளியமைப்பு
தொகுபொதுவாகப் பலரும் இயற்கை ஒளியை விரும்புகின்றனர். குறைந்த செலவில் மனிதருடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடியது இயற்கை ஒளி. சூரிய ஒளியை உள்ளக ஒளியமைப்புக்குப் பயன்படுத்தும் போது, கட்டிடத்தின் அமைவுத் திசை, சாளரங்களின் அளவும் வடிவமும் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது மட்டுமன்றிச் சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதையும் கவனிக்க வேண்டும்.
இயற்கை ஒளி ஒரு நாளின் எல்லா நேரங்களிலுமோ அல்லது ஒரு ஆண்டின் எல்லா நாட்களிலுமோ ஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் அளவுக்கு கூடுதலான ஒளி இருக்கும் நேரங்களில் அதனைக் கட்டுப்படுத்தி அளவாக உள்ளே விடவும், போதிய ஒளி இல்லாத நேரங்களில் செயற்கை ஒளி மூலங்களிலிருந்து ஒளி பெறும் வகையிலும் ஒளியமைப்பை வடிவமைக்க வேண்டும்.
செயற்கை ஒளியமைப்பு
தொகுசெயற்கை ஒளியமைப்பு இக்காலத்தில் மின்னொளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்காகப் பலவகையான ஒளிக் குமிழ்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குமிழ் வகைகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்கு உரிய சாதக பாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. தேவைகளைக் கருத்திலெடுத்துப் பொருத்தமான குமிழ்களும் விளக்குகளும் தெரிவு செய்யப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Oil-Lamps and Candles". Notes and Queries. 1940-01-06. doi:10.1093/notesj/178.1.13-b. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-6941. http://dx.doi.org/10.1093/notesj/178.1.13-b.
- ↑ Williams, Ben (1999). "A History of Light and Lighting". Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
- ↑ "The History of Light". Planet Money. No. 534.