அநுராதபுர சியாரம் உடைப்பு

அநுராதபுர சியாரம் உடைப்பு எனப்படுவது இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அநுராதபுர நகரத்தில் 'ருவன்வெளிசாய'வுக்கு தெற்கில் 'தத்மின தூபய' எனுமிடத்தில் அமையப்பெற்றிருந்த சியாரம் (முஸ்லிம் பெரியார் ஒருவரின் அடக்கஸ்தலம்) உடைக்கப்பட்ட சம்பவத்தைக் குறிக்கும். இச்சம்பவம் செப்டம்பர் 10 2011இல் இடம்பெற்றது.

அமைவு தொகு

அநுராதபுரம் பழைய நகரில் 'எல்லாளன்' சமாதிக்கு சுமார் 50 மீற்றர் அண்மித்த பகுதியில் இந்த சியாரம் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. 'ஓட்டுப்பள்ளம் பள்ளி' என அழைக்கப்பட்டு புனிததளமாக பராமரிக்கப்பட்டு வந்த இச் சியாரம் சுமார் 400 ஆண்டுகாலங்களாக அமைந்திருந்ததாக முஸ்லிம் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தை அநுராதபுர வாழ் முஸ்லிம்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தரிசித்து வந்துள்ளனர்.

நிகழ்வு தொகு

2011 சூலை மாதப் பகுதியில் பௌத்தப் பிக்கு ஒருவரும் மேலும் சில இளைஞர்களும் இந்த சியாரத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினரிடம் முறையிட்ட பின் அது நிறுத்தப்பட்டு மீண்டும் புனரமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே செப்டம்பர் 11 இல் பௌத்த பிக்குவும், வெளியிடங்களிலிருந்து வந்த பலரும் சேர்ந்து இந்த சியாரத்தை முற்றாக உடைத்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

குற்றச்சாட்டு தொகு

இச்சம்பவம் நடைபெறும் போது காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்த போதிலும் கூட எவ்வித தடுப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாகக் கூறப்படுகின்றது.

உடைப்பினை நியாயப்படுத்திய காரணங்கள் தொகு

துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் இந்த சியாரம் அமைக்கப்பட்டிருந்தமையினாலேயே இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மை இனங்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் தொகு

இச்சம்பவம் குறித்து இலங்கையின் அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சேகு தாவூத் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார். 'அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் செய்கு சிக்கந்தர் ஒலியுல்லா அப்பா அடங்கியுள்ளதாக கூறப்படும் தர்கா சுமார் 400 க்கு மேற்பட்ட சாதாரண உடை மற்றும் காவி உடை தரித்த குழுவினரால் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் சிறுபான்மை இனங்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தால் அநுராதபுரம் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் சதிகளை இனங்காண வேண்டும், இந்தச் சம்பவம் நடைபெறும் வேளையில் சம்பவ இடத்துக்குச் சென்று தர்காவை பாதுகாக்க முனைந்த முஸ்லிம் மக்களை, பொலிஸார் அங்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். [1] வட மாகாண ஆலோசனைச் சபைத் தலைவர் முபாரக் மௌலவி சியாரம் உடைப்பு சம்பந்தமாக தனது கருத்தைத் தெரிவிக்கையில் 'முஸ்லிம்களின் மதத் தலங்களை இவ்வாறு தகர்ப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இது இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடே. இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் அமைதியை பாழாக்கவே செய்யும். யுத்தம் முடிவுற்று இன செளஜன்னியத்தை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு சில தீய சக்திகள் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 காளி கோவிலில் இந்து மத வழிபாட்டிற்கு இடையறு அநுராதபுரத்தில் ஷியாரம் இடித்துத் தரைமட்டம்![தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 18, 2011

மூலம் தொகு