அந்தனி ஜீவா

அந்தனி ஜீவா (26 மே 1944 – 10 சனவரி 2025) இலங்கை, மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வந்தவர்.[1] கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர். மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்தவர்.[2] இவர் தனது அனுபவங்களை ஜீவநதி என்ற சிற்றிதழில் ஒரு வானம்பாடியின் கதை என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார்.

அந்தனி ஜீவா
பிறப்பு(1944-05-26)26 மே 1944
கொழும்பு, இலங்கை
இறப்புசனவரி 10, 2025(2025-01-10) (அகவை 80)
கொழும்பு
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர்
பெற்றோர்செபஸ்டியன், இலட்சுமி அம்மாள்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அந்தனி ஜீவா கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர். செபஸ்டியன், இலட்சுமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்புளோமா பட்டம் பெற்றுள்ளார். தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழுந்து, குன்றின் குரல், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இவர் எழுதிய முதல் நாடகமான 'முள்ளில் ரோஜா' 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு இலங்கை அரசு தடை விதித்தது. 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தினார்.

இவரது நூல்கள்

தொகு
தளத்தில்
அந்தனி ஜீவா எழுதிய
நூல்கள் உள்ளன.
  • அ.ந.க ஒரு சகாப்தம்
  • அக்கினிப் பூக்கள் (1999)
  • அன்னை இந்திரா (1985)
  • அமைதி கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது
  • ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
  • இவர்கள் வித்தியாசமானவர்கள்
  • ஈழத்தில் தமிழ் நாடகம் (1981)
  • ஒரு வானம்பாடியின் கதை (தன் கதை, 2014)
  • கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002)
  • காந்தி நடேசய்யர் (1990)
  • குறிஞ்சிக் குயில்கள் (2002)
  • குறும் பூக்கள்
  • சி. வி. சில நினைவுகள் (2002)
  • சிறகு விரிந்த காலம் (2007)
  • சுவாமி விபுலாநந்தர்
  • திருந்திய அசோகன் (2003)
  • நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் (2003)
  • பார்வையின் பதிவுகள்
  • மலையகம் வளர்த்த கவிதை (2002)
  • மலையக மாணிக்கங்கள் (1998)
  • மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002)
  • மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005)
  • மலையகமும் இலக்கியமும் (1995)
  • முகமும் முகவரியும் (1997)

தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் எழுத்துக்களைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

தொகு

அந்தனி ஜீவா இலங்கை அரசின் சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறப்பு

தொகு

அந்தனி ஜீவா 2024 சனவரி 10 அன்று தனது 80-ஆவது அகவையில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "நாடகத்துறை சாதனையாளர் அந்தனி ஜீவா" (PDF). தாய்வீடு. சூலை 2012. Archived from the original (PDF) on 9 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2025.
  2. "மலையக இலக்கியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்தனி ஜீவா". தினகரன் மின்னிதழ், கொழும்பு. 24 மே 2023.
  3. "மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை சமூகத்தில் விதைத்தவர் அந்தனி ஜீவா!". வீரகேசரி. 11 சனவரி 2025. Archived from the original on 11 சனவரி 2025. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தனி_ஜீவா&oldid=4186524" இலிருந்து மீள்விக்கப்பட்டது