அந்திரேய் சேவிர்னி
அந்திரேய் போரீசொவிச் சேவிர்னி (Andrei B. Severny, உருசியம்: Андре́й Бори́сович Се́верный, 13 மே 1913 – 3 ஏப்பிரல் 1987) ஒரு சோவியத் வானியலாளரும் வானியற்பியலாளரும் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினரும் (1968) நிகரற உழைப்பு வீரரும் (1973) ஆவார். இவர் குறிப்பாக, சூரியப் பிழம்புகளின் ஆய்வுக்காகவும் செயற்கைக்கோள் வானியல் நோக்கீடுகளுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் 1952 முதல் 1987 வரை கிரீமிய வானியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக இருந்தார். இவர் 1964 முதல் 1970 வரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக விளங்கினார்.
இளமையும் கல்வியும்
தொகுஇவர் உருசியப் பேரரசில் துலா நகரத்தில் 1913 மே 13 இல் பிறந்தார். இவர் 1935 இல் மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இயக்கவியல், கணிதவியல் துறையில் சேர்ந்து தன் இளவல் பட்டத்தைப் பெற்றார். அங்கே தொடர்ந்து சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின்கீழ் உயர்கல்வி பயின்று, முதுவல் பட்டத்தையும் (1935-1939) முனைவர் பட்டத்தையும் (1939-1943) முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
வாழ்க்கை
தொகுஇவர் 1938 முதல் 1946 வரை சுட்டென்பெர்கு போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்தார். இவர் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். 1952 இல் இருந்து அதன் இயக்குநர் ஆனார். இவர் 1941 இல் இருந்தே சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளார். இவர் தன் முனைவர் பட்டத்தை மாசுக்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1944 இல் பெற்றதும், அங்கே இயற்பியல், கணிதவியல் துறையில் புல உறுப்பினராகச் சேர்ந்து, 1945 இல் பேராசிரியர் ஆனார். இவர் 1958 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினர் ஆனார். பின்னர் 1968 முதல் அக்கழகத்தின் முழுநிலை உறுப்பினர் ஆனார். இவர் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி 12, 13 ஆம் பேராயங்களில் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கிரீமிய வானியற்பியல் நோக்கீட்டகத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இறப்பு
தொகுஇவர் கிரீமியா, சிம்பெரோபோலில் 1987 ஏப்பிரல் 3 இல் இறந்தார். மாசுக்கோ குந்த்செவோ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
அறிவியல் ஆய்வுரைகளும் நூல்களும்
தொகு- சூரிய இயற்பியல், 1956
- Severny, A.B., வளிமக் கோளங்கள், விண்மீன்களின் நிலைத்தநிலை அலைவுகள், Izv. CrAO, 1948, தொகுதி. 1, பகுதி 2, p. 3-90
- Severny, A.B. and Khokhlova, V.L., சூரியப் புறணிச் சுடர்வுகளின் இயக்கம், ஒளிர்திற ஆய்வுகள், Izv. CRAO. - 1953. - T. 10. - S. 9-53.
- Severny, A.B. and Shaposhnikova, E.F., சூரிய வண்ணக்கோளக் கனல் எறிவுகள் உருவாக்கம் ஆய்வு, Izv. CRAO. - 1954. - T. 12. - S. 3-32.
- Severny, A.B., சூரிய நிலைப்பிலாத செயல்முறைகள், செயல்முனைவு உமிழ்வுகளின் நுண்கட்டமைப்பு, Izv. CRAO. - 1957. - T. 17. - S. 129-161.
- சூரிய செயல்முனைவு உமிழ்வுகளின் நுண்கட்டமைப்பு // வானியல் இதழ், 1956,தொகுதி 33, எண்ணொன்று
- Severny, AB, Kotov, VA, and Tsap, TT , 1976. "சூரியத் துடிப்புகளின் நோக்கீடுகள்", நேச்சர், தொகுதி. 259, p. 89.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- 1951 இல் வெளியிட்ட "அடர்நீர்ம மேற்பரப்பு நிலைத்தநிலை அலைகளுக்கான சரிநிகர் கோட்பாடு" எனும் ஆய்வுக்கட்டுரைக்கு இசுட்டாலின் மூன்றாம் தரப் பரிசைப் பெற்றார். இவர் 1953 இல் தகைமைப் பட்டை ஆணையைப் பெற்றார். இவர் இரண்டு உழைப்புக்கான செம்பதாகை ஆணைகளைப் (1961, 1963) பெற்றார்.
- 1973 மே 10 இல் நிகரற(சமதர்ம) உழைப்பு வீரராக அறிவிக்கப்பட்டார். இவர் இலெனின் மாவீரர் ஆணைகளையும் (1973, 1983) அக்தோபர்ப் புரட்சி மாவீரர் ஆணையை 1971, 1973, 1975 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார். இவர் 1984 இல் சோவியத் ஒன்றிய அரசின் பரிசைப் பெற்றார். இவர் பின்வரும் தகைமைகளையும் பெற்றுள்ளார்.
- காலாட்படை உழைப்புச் செம்பதாகை ஆணை
- "மாபெரும் நாட்டுப்பற்றுப் போர் (1941- 1945) உழைப்பு வல்லமைப் பதக்கம்"
- "சிரில் மெதாடியசு மாவீரர் ஆணை"
- பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினராகவும் பன்னாட்டு வான்வலவர் கல்விக்கழக உறுப்பினராகவும் ஐடெல்பெர்கு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழகங்களில் தகைமை முனைவர் பட்டங்களையும் உரோக்கிளா பல்கலைக்கழகத் தகைமை முனைவர் பட்ட்மும் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- Obituary -- "Andrei B. Severny, 73, Top Soviet Astronomer." த நியூயார்க் டைம்ஸ், April 21, 1987. [1]
- Keith Davies - Evidence for a Young Sun
- Severny, A.B., Kotov, V.A., and Tsap, T.T., 1976. "Observations of solar pulsations," Nature, vol. 259, p. 89.