அனுராதபுரம் குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள்
அனுராதபுரம் குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள் என்பது, அனுராதபுரத்தில் பழங்காலச் சிவாலய அழிபாடுகளிடையே கண்டெடுக்கப்பட்ட இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்களைக் குறிக்கும். 1983ல் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் இரண்டும் ஒரே கல்லில் எழுதப்பட்டுள்ளன. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வெட்டியலாலர்களில் ஒருவரான கிருஷ்ண சாஸ்திரி, இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் வேண்டுகோளின்படி இக்கல்வெட்டுக்களை வாசித்தார். இது தென்னிந்திய சாசனங்கள் என்னும் தொகுப்பின் நான்காம் தொகுதியில் படங்களுடன் வெளியிடப்பட்டது.[1]
இக்கல்வெட்டுக்கள் இரண்டும் ஒரேமாதிரியானவை. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுவன. இத்தானங்கள் ஒவ்வொன்றும் 30 ஈழக்காசுகள் பெறுமதியானவை என்பதுடன் "முதல் கெடாமல்" ஒரு திருவமுது வழங்குவதற்கும், ஒரு நந்தா விளக்கு ஏற்றுவதற்குமானவை. இத்தானங்களைக் கோயிலின் சார்பில் பெற்றுக்கொண்ட குமாரகணத்துப் பேரூரார் என்னும் குழுவினர் சார்பில் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்குமாரகணத்துப் பேரூரார் என்பவர்கள் இக்கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்கள் குமாரகணம் எனப்படும் வணிகர் குழுவினரால் நிறுவப்பட்ட பேரூர் ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அத்தகைய பேரூர் அனுராதப்புரப் பகுதியில் இருந்திருக்கலாம் எனப் பத்மநாதன் கருதுகிறார்.[2]
காலம்
தொகுஇவ்விரு கல்வெட்டுக்களிலும் கோச்சிரிசங்கபோதி மாராயர் என்னும் அரசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயரைக் கோ சிரிசங்கபோதி மாராயர் எனப் பிரித்த பத்மநாதன், மாராயர் என்பது மகாராஜா என்பதன் தமிழ்ப்படுத்தல் என்கிறார். சிரிசங்கபோதி என்பது மாறிமாறி வரும் சிங்கள மன்னர்களின் சிம்மாசனப்பெயர் என்பதால், இது எந்த மன்னனைக் குறிக்கிறது என்று அறியமுடியாதுள்ளது. இதனால், எழுத்து வடிவத்தின் அடிப்படையில் இக்கல்வெட்டுக்கள் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.