அனைத்துலக அரிசி ஆண்டு
அனைத்துலக அரிசி ஆண்டு (International Year of Rice) என்று ஐக்கிய நாடுகள் அவை 2004 ஆம் ஆண்டை அறிவித்தது. இதற்கான தீர்மானம் (57/162) 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முழுநிறைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னர் உணவு வேளாண்மை அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றை அடியொற்றியே பொதுச்சபை இத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். மேலும் வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் அரிசியின் பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.[1]
நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், அனைத்துலக வேளாண்மை ஆய்வு தொடர்பான ஆலோசனைக் குழு, ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த பிற அமைப்புக்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துலக அரிசி ஆண்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுமாறு உணவு வேளாண்மை அமைப்பை இத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
பின்னணி
தொகுஅரிசிக்கான அனைத்துலக ஆண்டு ஒன்றை அறிவிப்பது தொடர்பான முன்முயற்சி 1999 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அரிசிப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதில் எதிர்ப்பட்ட பிரச்சினைகளையொட்டி, உறுப்பினர்களது கவலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க விரும்பிய அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அரிசிக்கான அனைத்துலக ஆண்டொன்றை அறிவிக்க உதவுமாறு, உணவு வேளாண்மை அமைப்பைக் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற உணவு வேளாண்மை அமைப்பின் 31 ஆவது மாநாட்டில், அனைத்துலக அரிசி ஆண்டு ஒன்றை அறிவிக்கும்படி, ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 57 ஆவது அமர்வில், 43 நாடுகளின் துணையுடன், பிலிப்பைன்சு இதற்கான முன்மொழிவை முன்வைத்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஐக்கிய நாடுகள் General Assembly Session 57 Resolution 162. International Year of Rice, 2004 A/RES/57/162 page 1. 16 December 2002. Retrieved 2007-11-18.
மேலும் காண்க
தொகுபுற இணைப்புகள்
தொகு- அனைத்துலக அரிசி ஆண்டு இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-04-24 at the வந்தவழி இயந்திரம்