அனைத்துலக மொழிகள் ஆண்டு
2007 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, 2008 ஆம் ஆண்டை அனைத்துலக மொழிகள் ஆண்டு என அறிவித்ததது[1]. இது தொடர்பில் யுனெசுக்கோ எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே இந்த அறிவிப்பு வெளியானது. மொழிகள் தொடர்பான விடயங்கள் யுனெசுக்கோவுக்குக் கல்வி, அறிவியல், சமூக மற்றும் மானிட அறிவியல்கள், பண்பாடு, தொடர்பாடல், தகவல் ஆகியவை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைகளின் அடிப்படையாக அமைந்துள்ளதால், இந்நிகழ்வை யுனெசுக்கோவே முன்னணியில் நின்று செயல்படுத்தியது.
உண்மையான பன்மொழியியம், வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்க உதவும் என்பதையும், நாடுகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்பதையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக்கொண்டதன் பேரிலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது[2]. ஐக்கிய நாடுகள் அவையிலும் அதன் அலுவலக மொழிகள் எல்லாவற்றுக்கும் சமமான வாய்ப்புக்களும், வளங்களும் வழங்கவேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியமான பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஆறு அலுவலக மொழிகளிலும் மொழிபெயர்க்கும் வேலையை நிறைவாக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செயலாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டது.
மொழிகள் ஆண்டையொட்டிய செயல் திட்டங்கள் ஆய்வுகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டங்களுக்கு ஆதரவளித்தல், வலையமைப்புக்களை உருவாக்குதல், தகவல்களை வழங்குதல், பல மட்டங்களிலான களப்பணிகளில் ஈடுபடல் போன்ற பல்வேறு வடிவங்களில் அமையலாம் என்று யுனெசுக்கோ அறிவுறுத்தியது. பொதுவாக இவ்வாறான நடவடிக்கைகள் பல்துறை சார்ந்தவையாக இருப்பினும், செயல் திட்டங்கள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்து அமையலாம் என்றும் யுனெசுக்கோ எடுத்துக்காட்டியது[3]. யுனெசுக்கோ குறித்துக்காட்டிய சில துறைகள்:
- கல்விசார்ந்த முன்முயற்சிகள்.
- அறிவியல் சார்ந்த திட்டங்கள்.
- பண்பாட்டை மையப்படுத்திய திட்டங்கள்.
- தொடர்பாடல், தகவல் சார்ந்த திட்டங்கள்
குறிப்புக்கள்
தொகு- ↑ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 266. A/RES/61/266 16 மே 2007. Retrieved 2008-09-18.
- ↑ அனைத்துலக மொழிகள் ஆண்டு தொடர்பான தகவல் அறிக்கை
- ↑ மொழிகள் ஆண்டு தொடர்பிலான செயற்பாடுகள் குறித்த யுனெசுக்கோ அறிவுறுத்தல்
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- யுனெசுக்கோ நுழைவாயில் பக்கம்: "2008, International Year of Languages - Languages matter!" (ஆங்கில மொழியில்)
- ஐ.நா. நுழைவாயில் பக்கம்: "அனைத்துலக மொழிகள் ஆண்டு" (ஆங்கில மொழியில்)
- ICVWiki பக்கம் - மொழிப் பல்வகைமைக்கான உலக வலையமைப்பு (மாயா) அனைத்துலக மொழிகள் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியது. பரணிடப்பட்டது 2008-01-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Support for International Year of Languages 2008