அபலா போஸ் (பி. ஏப்ரல் 8, 1864 – இ. ஆகஸ்ட் 26, 1951) இந்தியாவில் பெண்கல்விக்காகப் பாடுபட்ட வங்காள சமூக சேவகி. குறிப்பாக இவர் விதவைகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர்.[1]

அபலா போஸ்
பிறப்பு8, ஏப்ரல் 1864
பாரிசால்
இறப்பு26 ஆகஸ்ட்1951
கொல்கத்தா
பணிசமூகப் பணியாளர்
வாழ்க்கைத்
துணை
சர் ஜகதீஷ் சந்திர போஸ்

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

அபலா போஸ் ஏப்ரல் 8, 1864ல் பாரிசாலில் பிறந்தார். இவர் தாக்காவிலுள்ள டெலிர்பாக்கின் (இப்பொழுது பங்களாதேசத்தில் உள்ளது) பிரபல தாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துர்கா மோகன் தாஸ் பிரபல பிரமோ சீர்திருத்தவாதி. சதீஷ் ரஞ்சன் தாசும் சரளா ராயும் இவருடன் பிறந்தவர்கள். சித்தரஞ்சன் தாசும் இந்திய முதன்மை நீதியரசர் சுதி ரஞ்சன் தாசும் இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள். புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போசின் மனைவி இவர்.

அபலா போஸ் பங்க மகில வித்யாலயா மற்றும் பெத்தூன் பள்ளியில் படித்தார். அப்பள்ளிகளின் ஆரம்பகால மாணவியருள் இவரும் ஒருவர். 1881ல் நுழைவுத் தேர்வில் படிப்புதவித்தொகையுடன் வெற்றி பெற்றும் பெண் என்ற காரணத்தால் அவருக்குக் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு 1882ல் வங்காள அரசின் படிப்புதவித்தொகை பெற்று மருத்துவம் பயிலச் சென்னைக்குச் சென்றார். . ஆனால் உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவரால் சென்னையில் படிப்பைத் தொடர முடியவில்லை. 1887ல் ஜகதீஸ் சந்திர போசுடன் இவருக்குத் திருமணம் நடந்தது.[1] 1916ல் கணவருக்கு அளிக்கப்பட்ட சர் பட்டத்தால் இவர் லேடி போஸ் என அழைக்கப்பட்டார். ஆகஸ்ட் 26, 1951ல் மரணமடைந்தார்[1].

சமுதாயப்பணி

தொகு

அபலா போஸ் ஒரு கல்வியாளர் மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே பெரிய பெண்ணியவாதியும் கூட. பெண்களுக்குக் கல்வி தரும் நோக்கம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடித் தருவதற்கோ அல்லது அவர்களைப் புகுந்த வீட்டில் நல்ல மருமகளாக்குவதற்கோ இல்லை. ஆண்களைப் போல பெண்களுக்கும் மனமுண்டு, அவர்களுக்கு வெளித்தோற்றமும் உருவமும் இரண்டாம் பட்சந்தான். அதனால் அவர்களுக்கு ஆழ்ந்ததும் பரந்ததுமானதொரு கல்வி அவசியம் தரப்பட வேண்டுமென பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை மாடர்ன் ரெவியூவில் எழுதியிருந்தார். இவரது கருத்துக்கள்தான் இவருடன் பெத்தூன் பள்ளியில் படித்த காமினி ராயும் ஒரு பெண்ணியவாதியாகக் தூண்டுகோலாயிருந்தன.[2]

அபலா போஸ் பெண்களுக்குக் கல்வி அளிப்பதற்கும் விதவைகளுக்குப் பண உதவி செய்வதற்கும் 1915ல் நாரி சிக்‌ஷ சமிதி என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு கிராமப்புறங்களில் 200 பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்பட்ட ஆசிரியர்களை உருவாக்க வித்யாசாகர் பானி பவன், மகில ஷில்பா பவன், பானி பவன் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றை நிறுவி விதவைகளுக்கு ஆசிரியப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். தனது கணவரின் மறைவுக்குப்பின் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையளித்து சகோதரி நிவேதிதா பெண்கல்வி நிதியை ஏற்படுத்தினார். அதன் மூலம் முதியோர் தொடக்கக் கல்வி மையம் நிறுவப்பட்டது. 1910 முதல் 1936 வரை பிரமோ பாலிக சிக்‌ஷாலாயாவின் செயலராக இருந்தார்.

நாரி சிக்‌ஷ சமிதி, முக்கியமாக தொடக்கப் பள்ளிகள் நடத்துவற்கும் அதற்கான பாடப்புத்தகங்களைத் தயார் செய்வதற்கும் மற்றும் தாய் சேய் நல மையங்களை நடத்துவதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் இந்த அமைப்பு பல பள்ளிகளையும் பெண்களுக்காக முரளிதர் கல்லூரியையும் நிறுவியது.ஆனால் 1921க்குப் பிறகு பிற்பட்ட கிராமங்களை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (வங்காள மொழியில்), p23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185626650
  2. 2.0 2.1 Ray, Bharati, Women in Calcutta: the Years of Change, in Calcutta The Living City Vol II, edited by Sukanta Chaudhuri, Oxford University Press, first published 1990, paperback edition 2005, pp36-39, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019563697 X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபலா_போஸ்&oldid=2711578" இலிருந்து மீள்விக்கப்பட்டது