அய்யனேரி என்ற ஏரி வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது. தெற்கு வடக்காக பிறைவடிவில் ஏரி வெட்டப்பட்டள்ளது. கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம்நெடுஞ்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது. அதனால் ஏரிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏரியின் நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால் சாலையால் துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிறது.

வரலாறு தொகு

13 ஆம் நூற்றாண்டில் கிபி 1243 முதல் கிபி 1279 வரை சேந்தமங்கலத்தைத் தலைநகராக கொண்டு புதுச்சேரி, கடலூர் மாவட்ட பகுதிகளை ஆட்சி புரிந்த பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனால் வெட்டப்பட்டது.[சான்று தேவை] மன்னனின் சிறப்பு பெயர் அயன்பெருமாள். அவருடைய சிறப்பு பெயரிலுள்ள அயன் பெயரால் இந்த ஏரி அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மருவி அய்யனேரி என வழங்கப்பட்டு வருகிறது, இம்மன்னனே பெருமாள் ஏரியையும் வெட்டினான் என்று வரலாறு[சான்று தேவை] கூறுகின்றது.

பரப்பு தொகு

இந்த ஏரி ஏறக்குறைய 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் இருப்பதால் ஏரியின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு தூர்ந்து விட்டது. இந்த ஏரி அமைந்துள்ள இடம் மேற்கு கிழக்காக சரிந்துள்ளதால் கோட்டக்கரை, காட்டுகொல்லை போன்ற இடங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரி நிரம்புகிறது.

பயன்பாடு தொகு

இந்த ஏரி 200 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது. நெல பயிரிடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீருக்கு இந்த ஏரி ஆதாரமாக உள்ளது. ஒரு போகம் நெல் மட்டுமே பயிரிட தேவையான நீர் இங்கு கிடைக்கும். தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க பொதுப்பணி துறையினாரால் ஏலம் விடப்பட்டு மீன் வளர்க்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யனேரி&oldid=3804512" இலிருந்து மீள்விக்கப்பட்டது