அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில்

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு அமைந்துள்ள தனிக் கோயில் ஆகும்.[1]

அமைவிடம்

தொகு

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் இக்கோயில் உள்ளது.

அம்பிகை

தொகு

இங்குக் கோயில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் இலட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள். இவர் சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதாகக் கூறுவர்.

உருவ விளக்கம்

தொகு

‘பத்ரம்‘ என்றால் ‘மங்களம்‘ என்பது பொருளாகும். பக்தர்களுக்கு என்றும் மங்களத்தையே அளிப்பவள் ஆதலால் சக்திக்கு பத்ரகாளி என்ற பெயர் ஏற்பட்டது. இப்பத்ரகாளி அம்மனே பிரத்தியங்கிராதேவியும் ஆவாள். ப்ரத்தியங்கிரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகள் இக்காளியின் மந்திரத்தினைக் கண்டுபிடித்ததால், இவரது பெயரினையும் இணைத்து பிரத்தியங்கிரா தேவி என்று அழைப்பர். தேவி ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும், சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீல நிற ஆடையும் அணிந்த விஸ்வ ரூபம் தாங்கியவள். கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் என்னும் நால்வகை ஆயுதங்களைத் தரித்திருப்பவள். சந்திரனை தலையிலும், வராஹத்தின் கொம்பும், ஆமையும் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலையைக் கழுத்தினிலும் அணிந்திருப்பாள். தனிமையில் இருந்துகொண்டு எள்ளும், புஷ்பமும் கொண்டு பூஜிப்பதால் ஆனந்தம் அடைபவள். பகைவர்களை நாசம் செய்பவள். பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மந்திர தந்திரங்களைத் தூள் தூளாகச் செய்பவள்.[1]

சிறப்பு

தொகு

தேவி மூன்று கண்கள் உடையவள். இங்கு வந்து தேவியை வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமாவாசை, பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்தலைச் சிறப்பாகக் கருதுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 வி.ஆர்.கோபால் & ஆர்.சர்மா, ஸ்ரீபிரத்யங்கிராதேவி மஹிமை, கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், சென்னை, 2004
  2. போவோமா கும்பகோணம், ஆனந்தவிகடன், மகாமக ஸ்பெஷல், 29.2.2004

வெளி இணைப்புகள்

தொகு

அய்யாவாடி மகா பிரத்தியங்கிராதேவி கோவில், மாலைமலர் பரணிடப்பட்டது 2015-04-28 at the வந்தவழி இயந்திரம்
அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினமலர், 1.1.2014
தமிழ்நாடு சுற்றுலா