அரசலாபுரம்: வட்டெழுத்துப் பொறிப்புடன் கோழி நடுகல்

அரசலாபுரம்: வட்டெழுத்துப் பொறிப்புடன் கோழி நடுகல் என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நெமூர் பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ள அரசலாபுரம் குக்கிராமத்தில் கண்டறியப்பட்டது. இது வட்டெழுத்துப் பொறிப்புடன் ஒரு கோழிக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.[1]

அமைவிடம்

தொகு

அரசலாபுரம் கஞ்சனூரிலிருந்து 6.1 கி.மீ. தொலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 12.0 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 18.0 கி.மீ. தொலைவிலும், கூட்டேரிப்பட்டிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 605203 ஆகும். [2]

அரசலாபுரம் கோழி நடுகல்

தொகு

அரசலாபுரம் கோழி நடுகல் என்பது கற்பலகையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட கோழியின் உருவத்துடன், வட்டெழுத்துப் பொறிப்புப் பெற்ற நடுகல்லாகும். வட்டெழுத்தின் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு இந்த நடுகல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கல்வெட்டாய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] இப்பகுதியில் சேவற்சண்டை நடைபெற்ற செய்தி இக்கல்வெட்டு மற்றும் நடுகல் வாயிலாகத் தெரிய வருகிறது.[4]

இந்த கற்பலகையில் செதுக்கப்பட்ட கோழியின் உருவம் 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாகும். கோழி நின்ற நிலையில் காணப்படுகிறது. இந்த உருவத்தை ஒட்டி மூன்று வரிகொண்ட வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் இரண்டு வரிகள் கோழியின் முதுகுப் பகுதிக்கு மேலாகவும், கடைசி வரி கோழியின் கால்களுக்கு அருகிலும் பொறிக்கப்பட்டுள்ளன.[1][4]

கல்வெட்டு பாடம்

தொகு
  1.  முகையூரு மேற்சே, 
  2.  ரிகு யாடிக, 
  3.  ருகிய கோழி[5][3]

பொருள் இப்பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில், முகையூர் எனும் ஊரைச் சேர்ந்த மேற்சேரியில் சண்டைபோட்ட பின்னர் இந்தக் கோழியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.[5]

கருக்கிய கோழி = செதுக்கப்பட்ட கோழியின் உருவம்

தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்தின் படிநிலை வளர்ச்சி

தொகு

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. கி.பி. 6 ஆம் நூற்றண்டில் இந்தப் படிநிலை வளர்ச்சி முழுமையுற்று வட்டெழுத்து முறை தனித்தன்மை பெற்றது.[6] இந்தப் படிநிலை வளர்ச்சி கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச்சலூர் கல்வெட்டில் புலப்படத் தொடங்கியது. நெகனூர்பட்டி, அம்மன்கோயில்பட்டி ஆகிய ஊர்களின் கல்வெட்டுகளும் இக்காலத்தைச் சேர்ந்தனவாகும்.[3] கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலங்குறிச்சிக் கல்வெட்டின் எழுத்தமைதியில் வட்டெழுத்தின் படிநிலை வளர்ச்சியை அடையாளம் காண முடிந்தது.[7] சித்தன்னவாசல், பெருமுக்கல், அரசலாபுரம், இரெட்டைமலை, எடக்கல் (கேரளா), எழுத்துக்கல்லு (கேரளா), ஆகிய இடங்களின் கல்வெட்டுகளும் இக்காலத்தைச் சேர்ந்தனவாகும்.[8][3] கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர்குன்று, பறையன்பட்டு, பிள்ளையார்பட்டி, திருச்சிராப்பள்ளி, இந்தளூர் கல்வெட்டுகளில் இந்தப் படிநிலை வளர்ச்சி மேலும் உருமாற்றம் கண்டது.[3][8]

நடுகல் பலகைக் கல்வெட்டு; தற்போதைய நிலை

தொகு

இந்த நடுகல் பலகைக் கல்வெட்டு 1991 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளராக பதவி வகித்த கொடுமுடி சண்முகம் தனது அலுவலக வளாகத்தில் இந்த நடுகல்லைப் பாதுகாத்து வைத்துள்ளார். தற்போது விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 அரசலாபுரம் தமிழிணையம் தகவலாற்றுப்படை
  2. Arasalapuram Onefivenine
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 களப்பிரர் காலக் கல்வெட்டுக்கள் (பொ.ஆ 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை) மா. பவானி் தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம்
  4. 4.0 4.1 4.2 பாரம்பரியமான சேவல் சண்டை பழமையான கல்வெட்டில் தகவல் தினமலர் ஜன 31,2017
  5. 5.0 5.1 அரசலாபுரம் மா.பவானி தமிழ் இணையக் கல்விக்கழகம் கல்வெட்டு / நாணயங்கள்
  6. வட்டெழுத்து மா.பவானி. தமிழ் இணையக் கல்விக்கழகம்
  7. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்மா.பவானி. தமிழ் இணையக் கல்விக்கழகம்
  8. 8.0 8.1 முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு தினமணி அக்டோபர் 04, 2015