அரசியல் கருத்துக்கள்-ஐரோப்பா
அரசியல் கருத்துக்கள், ஐரோப்பா அல்லது ஐரோப்பிய அரசியற் கருத்துருக்கள் (Political thoughts of Europe) ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு அரசியல் கருத்துருக்கள், பல அறிஞர்களால் தோன்றி வளர்ந்தாலும்், பெரும்பான்மையான அரசியல் கருத்துரு வளர, கிறித்தவ மதமே காரணமாக இருந்தது.[1][2] ரோமானியச் ஆட்சி சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ மதம் பரவிற்று. கிறித்தவ அறிஞர்களுடைய அரசியல் கருத்துக்கள்,[3] செனிக்கா (Seneca சு. கி.மு. 4-கி. பி. 65) என்னும் ரோமானிய அறிஞர் சுடோயிக்குகளுடைய அரசியற் கருத்துக்களை, மாற்றி வகுத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அரசாங்கமும் சட்டமும் வேண்டப்படுவதற்குக் காரணம், மனிதனுடைய தீக்குணமே என்றும், 'இயற்கைச் சட்டம்' என்று ஒன்று உண்டு என்றும், மனிதனுடைய அறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்சட்டமே, அரசாங்கச் சட்டத்துக்கு அளவுகோலாகக் கொள்ளத்தக்கது என்றும் இவர் கூறினார்.
கிறித்தவ அதிகாரம்
தொகுகிறிஸ்தவ அறிஞர்கள் வேறொரு முக்கியமான கருத்தையும் கூறினர். அதாவது, இயற்கைச் சட்டமும் இறைவன் சட்டமும் ஒன்று; அச்சட்டத்தை மனிதனுடைய அறிவு ஒன்றைமட்டும் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது; அது இறைவனால் வெளிப்படுத்தப்படுவது; அவ்வெளிப்பாட்டினை ஆகமங்கள் வாயிலாக மக்கள் உணர்வர் என்பதாம். இடைக்காலம் முழுவதிலும் இயற்கைச் சட்டமும் தெய்வீகச் சட்டமும் ஒரு பொருளின் இரு முகங்களாகக் கருதப்பட்டன. கிறிஸ்தவ மதக்கோட்பாட்டின்படி மனிதன் ஆதியில் குற்றமறியாத நிலையிலிருந்து இழிந்து பாவியானான். அவ்விழிவும், அவன் பாவங்களும் அரசாங்கம் தோன்றுவதற்கும் அதன் இன்றியமையாமைக்கும் காரணங்களாயின. குற்றமில்லாத மனிதனுக்கு இலௌகிக அரசாங்கம் வேண்டுவதில்லை. மனிதன் இழிந்துவிட்டதால் அரசாங்கம் தேவையாயிற்று. இது உலகியற் சட்ட அடிப்படையில் தோன்றிய பல ஸ்தாபனங்கள் ஏற்பட்டதற்குத் தக்க காரணமாயிற்று. இவ்வீழ்ச்சிக் கொள்கையைக்கொண்டு இவர்கள், இறைவன் திருமுன்பில் எல்லா மக்களும் சமம் என்னும் மதக் கோட்பாடும், உலகில் நாம் கண்ணாற் காணும் பல வேறுபாடுகளும் ஒன்றோடொன்று முரண்படாதவாறு, தம் சித்தாந்தத்தை அமைத்துக்கொண்டனர்.
கிறிஸ்தவ சமயக் கருத்துக்கள் மனிதனது இயல்பிலுள்ள இருமையை எடுத்துக் கூறின ; இவ்விருமையானது மனிதனுடைய ஆன்மாவிற்கும் உடலிற்கும் உள்ள வேறுபாடு. இவ்வேறுபாடு அரசியல் துறையிலும் புகுந்தது. தெய்விகப் பொருள்களுக்கும் இலௌகிகப் பொருள்களுக்கும் வேறுபாடு காணப்பட்டது ; தெய்விகத்துறையில் திருச்சபை தன்னைப் பிரதிநிதி என்று கருதிற்று. இலௌகிகத்துறையில் புனித ரோமானிய ஆட்சி தன்னைப் பிரதிநிதியென்று கருதிற்று. திருச்சபைத் தலைவர்கள் தெய்விக விஷயங்களில் தங்களை விட உயர்ந்த அதிகாரிகள் இல்லை என்று கருதினர். ஆயினும், ஆட்சித்தின் மீதும் திருச்சபைக்கு அதிகாரம் உண்டு என்று யாரும் கருதவில்லை. இடைக்காலம் முழுவதிலும், இவ்விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. இதனின்றும் போப்பின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், சக்கரவர்த்தியின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், இவ்விருவகைப்பட்ட அதிகாரங்களுக்கும் அடங்கியே மக்கள் வாழ வேண்டும் என்பாரும் ஆக மூவகையினர் கருத்துக்களுக்கும் இடமேற்பட்டது.
கோட்பாட்டாளர்
தொகுசெயின்ட் அகசுடின் : கிறித்தவ மதக்கோட்பாடு இந்நிலையில் இருக்கும் போது செயின்ட் அகசுடினுடைய இறை நகர் (Civitas Dei)[4] என்னும் நூல் வெளியாயிற்று. அவர் மண்ணகருக்கும் விண்ணகருக்கும் வேறுபாடு கண்டார். ஆயினும் அவர் கூறிய மண்ணகரும் விண்ணகரும் முறையே ஆட்சித்தையும் திருச்சபையையும் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. அவர் அவ்விரு நகர்களுக்குமிடையே எடுத்துக்காட்டிய வேறுபாடு அமைப்பு முறையையோ, சமுதாய வாழ்க்கையையோ பின்பற்றியதன்று; அது தனியொருவருடைய அறக்கோட்பாடுகளையும் சமயக்கோட்பாடுகளையும் பற்றியது. ஆயினும் செயின்ட் அகசுடினுடைய கோட்பாடுகள் பிற்காலத் திருச்சபையின் கருத்துக்களை யுருவாக்கப் பெரிதும் வழிகோலின. திருச்சபை, சாதாரண வாழ்நபர்களைவிட உயர்ந்தது என்றும், சக்கரவர்த்தி திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து, தனது அதிகாரத்தைச் செலுத்தவேண்டும் என்றும் அக்காலத்திற் கூறப்பட்டதேயன்றி, எளிய மனிதரின் தேவைகள், மத அதிகாரங்கள் இரண்டும் இறைவனிடமிருந்தே பெறப்படுவன என்பதை ஒருவரும் மறுக்கவில்லை.
மார்சிலியசு : பாடுவாவைச் சார்ந்த மார்சிலியஸ் (1270-1342)[5] என்பவர் 1324-ல் டிபென்சார் பாசிசு (Defensor pacis)[6] என்னும் நூல் ஒன்றை இயற்றினார். இந்நூலில் மார்சிலியஸ் திருச்சபைக்கு முழு அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை மறுத்து, இலௌகிக அதிகார எல்லையைக் குறுக்கி நிருணயிப்பதையே கருதினார்.
ஆப்ஸ்: ஆப்ஸ் (Thomas Hobbes)[7] (1588-1679) எழுதிய 'லெவையதன்' (Leviathan)[8] என்னும் நூல் இங்கிலாந்தில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. திருச்சபை அரசாங்கத்தின் ஒரு பகுதி எனவும். அரசாங்கமே சமூக ஒப்பந்தத்தினால் உண்டாயிற்று. சமூகமும், அரசாங்கமும் உண்டாவதற்கு முன்னால், மனிதன் இயற்கை நிலையில் இருந்தான். இந்நிலையை ஹாப்ஸ் எல்லோரும் எல்லோரோடும் செய்யும் போர்நிலை (State of war of all against all) என்றும், அந்நிலையில் நீதிமுறையின்மையால் மனிதனுடைய வாழ்க்கையே தனிமையாகவும், கேவலமாகவும் இருந்ததென்றும் கூறுகிறார். பலமான ஆட்சிமுறைக்கு, ஆப்ஸின் கொள்கை ஊன்றுகோலாயிற்று.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.ushistory.org/us/7a.asp
- ↑ https://plato.stanford.edu/entries/medieval-political/
- ↑ https://www.biblestudytools.com/vul/
- ↑ https://www.britannica.com/topic/The-City-of-God
- ↑ https://www.britannica.com/biography/Marsilius-of-Padua
- ↑ https://www.britannica.com/topic/Defensor-pacis
- ↑ https://plato.stanford.edu/entries/hobbes-moral/
- ↑ https://www.bl.uk/collection-items/hobbess-leviathan