அரப்பா (Harappa) என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது[1]. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நதி தற்போது இத்தளத்திர்கு வடக்கில் 8 கிலோ மீட்டர் தொலைவில் (5 மைல்) ஓடுகிறது. தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது.

சிந்து சமவெளியில் அரப்பாவின் அமைவிடம்.
அரப்பா
Harappa
அரப்பாவிலுள்ள களஞ்சியம் மற்றும் மண்டபம் ஒரு தோற்றம்
இருப்பிடம்சாகிவால். பஞ்சாப், பாக்கித்தான்
வகைகுடியிருப்பு
பரப்பளவு150 ha (370 ஏக்கர்கள்)
வரலாறு
காலம்அரப்பா 1 முதல் அரப்பா 5
கலாச்சாரம்சிந்து சமவெளி நாகரிகம்
பகுதிக் குறிப்புகள்
நிலைஇடிபாடுகள்
பொது அனுமதிஆம்
இணையத்தளம்www.harappa.com
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களின் வரைபடம்

இத்தொல்லியல் தளத்தில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பண்டைய கோட்டை நகரத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்நகரமும் இடிபாடுகளும் சிந்து மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த கல்லைறை எச் கலாச்சாரத்தையும் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நகரத்தில் 23500 குடும்பங்கள் 370 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணும் சுட்ட செங்கற்களும் சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறசுது. சுமார் கி.மு 2600 – 1900 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த இந்நாகரிகத்தின் காலத்தை முதிர்ந்த அரப்பன் காலகட்டம் என்கிறார்கள். அந்தச் சமயத்தில் இது ஒரு மிகப்பெரிய நாகரிகமாகக் கருதப்படுகிறது [2]. முன்னர் அறியப்படாத நாகரிகங்களுக்கு பெயரிடும் தொல்பொருள் மாநாட்டில், முதல் அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தை அரப்பா நாகரிகம் என்று பெயரிட்டு அழைத்தனர்.

பண்டைய அரப்பா நகரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் மிகவும் சேதமடைந்தது, இடிபாடுகளில் இருந்து கிடைத்த செங்கற்களை லாகூர்-முல்தான் ரயில்வே கட்டுமானத்தில் இரயில்வே பாதைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கேளிக்கை பூங்கா அமைக்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது, கட்டடத்தின் ஆரம்ப கட்டப் பணிகளின்போது அங்கிருந்து கலைப்பொருட்கள் பல தோண்டி எடுக்கப்பட்டன. பாக்கித்தானிய தொல்பொருள் ஆய்வாளரான அகமத் அசன் டானி கலாச்சார அமைச்சகத்திற்கு வைத்த ஒரு வேண்டுகோள் இந்த தளத்தின் மறுசீரமைப்புக்கு காரணமாக இருந்தது [3].

வரலாறு

தொகு

சிந்து சமவெளி நாகரிகம் பண்டைக்காலக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் மெகெர்கர் போல தோராயமாக கி.மு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுகளுக்கு உரிய மிக முக்கியமான பண்டைய வேர்கள் இங்குள்ளன. மொகஞ்சதாரோ அரப்பா ஆகிய இரு பெரிய நகரங்கள் கி.மு. 2600 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிந்துவில் சிந்து நதிக் கரையோரம் இருந்த பள்ளத்தாக்கில் தோன்றின [4]. லாகூரின் தெற்கே உள்ள மேற்கு பஞ்சாப் பகுதியில் அரப்பாவும் லர்கானாவுக்கு அருகிலுள்ள சிந்து பகுதியில் மொகஞ்சதாரோவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒரு சாத்தியமான எழுதும் முறை, நகர்ப்புற மையங்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாகரிகம் மீண்டும் 1920 களில் மீண்டும் கண்டறியப்பட்டது. வடகிழக்கு இந்தியா, கிழக்கு பஞ்சாப்பு, தெற்கில் குசராத்து மேற்கில் பாக்கித்தானின் பலுசிசுதான் போன்ற இமயமலையின் அடிவாரத்தில் நீட்சியாக வளர்ந்திருக்கும் பல தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரப்பாவில் உள்ள தொல்பொருள் ஆய்வு தளம் 1857 ஆம் ஆண்டில் சேதமடைந்தது [5]. சிந்து மற்றும் பஞ்சாப் இரயில்வேயைச் சேர்ந்த பொறியாளர்கள் லாகூர்-முல்தான் இரயில் பாதை கட்டுமானத்தின் போது இரயில்வே பாதைகள் அமைக்க இத்தளத்திலிருந்து செங்கற்களை எடுத்துப் பயன்படுத்தினர் [6].இங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள் சிவப்பு மணல், களிமண், கற்களால் மிக அதிக வெப்பநிலையில் சுடப்பட்டு தயாரிக்கப்பட்டவையாகும். மேற்கு பஞ்சாபில் 1826 ஆம் ஆண்டு அரப்பா கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது, அரப்பாவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்கள் அவர்களேயாகும்.

பண்பாடும் பொருளாதாரமும்

தொகு

சிந்துவெளிப் பண்பாடு பெரிதும் நகரமயப் பண்பாடாக இருந்திருக்கிறது. தம் தேவையைவிடக் கூடுதலான விவசாயப் பொருள்களையும் கைவினைப் பொருள்களையும் கொண்டு சுமேரியாவுடனும் தெற்கு மெசபடோமியாவுடனும் வணிகம் செய்து வளமாக இருந்திருக்கிறது. மொகஞ்சதாரோவும் அரப்பாவும் பொதுவாக, தட்டைக்கூரை கொண்ட செங்கல் வீடுகள் தனியாகவும், கோட்டைக்குள் பாதுகாக்கப்பட்ட அரண்மனை அல்லது வழிபாட்டுக் கட்டடங்கள் கொண்டதாகவும் பிரிக்கப்பட்ட வாழ்விடங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. [7] இப்படிப்பட்ட நகரமைப்பு இரண்டுக்கும் பொதுவான சீரமைக்கப்பட்ட திட்டமிட்ட நகரமைப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்திருந்தாலும் உண்மையில் இரண்டு நகரங்களின் அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் வெவ்வேறாகத்தான் கட்டப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

அதே சமயம சிந்துவெளிப் பண்பாட்டின் எடைகளும் அளவைகளும் திட்டமிட்டுச் சீரமைக்கப் பட்டவை என்பது தெளிவு. தனித்தனி முத்திரைகள் ஒருவேளை சொத்துகளையும் விற்பனைச் சரக்குகளையும் அடையாளம் காண உருவாக்கப் பட்டிருக்கலாம். செம்பும் வெண்கலமும் பயன்பாட்டில் இருந்திருந்தாலும் இரும்பு சிந்துவெளிப் பண்பாட்டின் காலத்தில் பயனில் இல்லை. பஞ்சு நூற்கப்பட்டு நெய்யப்பட்டிருக்கிறது. துணிகளுக்குச் சாயம் இருந்திருக்கிறது. அரிசியும் கோதுமையும் பல காய்களும் கனிகளும் விளைந்திருக்கின்றன. திமில் கொண்ட காளை உட்பட்டப் பல வீட்டு விலங்குகள்[7] இருந்திருக்கின்றன. சண்டைக் கோழிகளும் இருந்திருக்கின்றன.[8]

சக்கரத்தால் செய்த மட்பாண்டங்கள், விலங்குகள், வடிவங்கள் வரைந்த பானைகள் எல்லாச் சிந்துவெளி அகழ்வாய்வுத் தளங்களிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நகரிலும் நகராட்சிக்கான நடுவமைப்பு ஒன்று இருந்திருக்கிறது. சிந்துவெளிப் பண்பாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததா என்று சொல்ல முடியாவிட்டாலும், நகரங்களில் ஆட்சி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. நகரங்களுக்குள் சீரான பண்பாடு இருந்திருக்கிறது. நகராட்சி வணிகர்களிடமிருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அரப்பா மக்கள் சிந்து நதியின் வழியாக வணிகத்தடங்கள் அமைத்துப் பாரசீக வளைகுடா, மெசபடோமியா, எகிப்து வரைக்கும் வணிகம் செய்திருக்கிறார்கள்.[9]

ஆனால், சிந்துவெளிச் சமூகம் எல்லாமே பிணக்கில்லாமல் இருந்ததில்லை என்று அங்கு கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டுகளின் எச்சங்களின் மூலம் தெரிகிறது. அவற்றில் காணப்படும் காயம் (15.5%) தெற்காசியாவின் முன்வரலாற்றிலேயே மிகவும் கூடுதலான ஒன்று.[10]

அதே போல் பண்டையநோய்க்குறியியல் பகுப்பாய்வின் மூலம் மக்களிடையே தொழுநோயும் காசநோயும் இருந்திருக்கிறது தெரிகிறது. அப்படி நோய்வாய்ப்பட்டவர்களை நகருக்கு வெளிப்புறமாக ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.[11] மேலும் இந்தத் தொற்று நோய்கள் காலப்போக்கில் கூடியிருக்கின்றன என்றும் சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சியின்போது இவை மிகுந்திருக்கின்றன என்றும் தெரிகிறது.[11]

அகழ்வாய்வு

தொகு
 
Miniature Votive Images or Toy Models from Harappa, ca. 2500. Hand-modeled terra-cotta figurines with polychromy.

அரப்பா களத்தை அகழ்ந்தவர்கள் அரப்பாவின் குடியேற்றக் காலங்களைப் பற்றிக் கீழ்க்காணும் கட்டங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்:[12]

 1. ராவி பகுதியின் ஹாக்ரா கட்டம், கி.மு. 3300 – 2800 
 2. கோட் டிஜியன் (முற்கால ஹரப்பாவின்) கட்டம், கி.மு. 2800 – 2600 
 3. அரப்பாவின் கட்டம், கி.மு. 2600 – 1900 
 4. மாறுகால கட்டம், கி.மு. 1900 – 1800 
 5. பிற்கால அரப்பாவின் கட்டம், கி.மு. 1800 – 1300 

அரப்பா அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களிலேயே மிகவும் நேர்த்தியான ஆனால் புரிபடாத கைவினைப்பொருள்கள் மனித வடிவமோ அல்லது விலங்கு வடிவமோ பொறித்த சிறிய நாற்கட்ட முத்திரைகள்தாம். மொகஞ்ச-தாரோவிலும் அரப்பாவிலும் எண்ணற்ற முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் படவடிவில் உள்ள பொறிப்புகள் ஒரு விதமான வரிவடிவம் அல்லது எழுத்து என்று ஆய்வாளர்கள் சிலரால் கருதப்படுகிறது. அவை எழுத்தே அல்ல என்று வேறு சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகெங்கிலுமிருந்து பல மொழியறிவாளர்கள் முயன்ற போதிலும், தற்கால மறைப்பியல் பகுப்பாய்வை மேற்கொண்ட போதிலும் இந்த முத்திரைச் சின்னங்களின் மறைப்பு நீக்கம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாத புரிபடாத சின்னங்களாகத்தான் இருக்கிறது. அவை வரிவடிவமாக இருந்தால் எந்த மொழியின் எழுத்துகள் என்பதிலும் சச்சரவு நீடிக்கிறது. அவை உண்மையிலேயே முந்தைய திராவிட மொழியின் எழுத்துகளா, வேதிய மொழியின் எழுத்துகளா அல்லது முண்டா அல்லது வேறு மொழியின் எழுத்துகளா என்பதிலும் தெளிவு இல்லை. சிந்து வெளிப் பண்பாட்டின் சிலைவடிவங்களையும் வரிவடிவங்களையும் வரலாற்றுக்கால தெற்காசியப் பண்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தெற்காசியா ஆய்வாளர்களின் அரசியல், பண்பாட்டுப் பின்னணியும், அவர்கள் முன்மொழியும் கருத்துகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் இதற்குக் காரணம். பாக்கிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்துகளும், இந்தியாவின் ஆரிய, திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து வரும் ஆய்வாளர்களின் கருத்துகளும் ஒருவரோடொருவர் பெரிதும் முரண்படுவது தெளிவு.

பெப்ரவரி 2006 இல் தமிழ்நாட்டிலுள்ள செம்பியன் - கண்டியூர் என்ற சிற்றூரில் ஒரு பள்ளியாசிரியர் கண்டுபிடித்த கற்கோடரியில் 3500 ஆண்டுகள் பழைமையானது என்று கணிக்கப்பட்ட பொறிப்புச் சின்னங்கள் ஆய்வுலகில் பரபரப்பேற்படுத்தின.[13] [14] இந்தியக் கல்வெட்டாய்வாளரும் சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் அந்த நான்கு பொறிப்புச் சின்னங்களைச் சிந்து சமவெளிச் சின்னங்களில் இருந்தவை என்று அடையாளப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்பு "கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ்நாட்டு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு" என்று கூறினார்.[13] அவர் ஏற்கனவே சிந்து சமவெளிச் சின்னங்கள் எழுத்துகள் என்றும் அவற்றைத் தொல்தமிழின் வழியாகத் தொல்திராவிட மொழியின் எழுத்துகள் என்றும் பதிப்பித்திருந்த ஆய்வை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் தென்னிந்தியாவில் வெண்கலக் காலத்தின் எச்சங்கள் ஏதுமில்லாமல் இருப்பதும் அதற்கு முரணாகச் சிந்துவெளிப் பண்பாட்டில் வெண்கலம் செய்வதற்கான கருவிகளும் நுட்பங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் இந்த முன்மொழிவை ஐயத்துக்குள்ளாக்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Harappa
 2. Fagan, Brian (2003). People of the earth: an introduction to world prehistory. Pearson. p. 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-111316-9.
 3. Tahir, Zulqernain. 26 May 2005. Probe body on Harappa park, Dawn. Retrieved 13 January 2006. பரணிடப்பட்டது 11 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
 4. Beck, Roger B. (1999). World History: Patterns of Interaction. Evanston, IL: McDougal Littell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-87274-X.
 5. Michel Danino. The Lost River. Penguin India.
 6. Kenoyer, J.M., 1997, Trade and Technology of the Indus Valley: New insights from Harappa Pakistan, World Archaeology, 29(2), pp. 260–280, High definition archaeology
 7. 7.0 7.1 Library of Congress: Country Studies. 1995. Harappan Culture பரணிடப்பட்டது 2007-07-02 at the வந்தவழி இயந்திரம். Retrieved 13 January 2006.
 8. [1] Poultry: Identification, Fabrication, Utilization by Thomas Schneller – Cengage Learning, 28 September 2009 – page 16
 9. Pollard, Elizabeth (2015). Worlds Together, Worlds Apart. New York: Norton. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-92207-3.
 10. Robbins Schug, Gwen (2012). "A peaceful realm? Trauma and social differentiation at Harappa". International Journal of Paleopathology 2 (2–3): 136–147. doi:10.1016/j.ijpp.2012.09.012. http://www.sciencedirect.com/science/article/pii/S1879981712000599#. 
 11. 11.0 11.1 Robbins Schug, Gwen (2013). "Infection, Disease, and Biosocial Processes at the End of the Indus Civilization". PLoS ONE 8: e84814. doi:10.1371/journal.pone.0084814. 
 12. "Archeological Site of Harappa". World Heritage Centre. யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
 13. 13.0 13.1 Subramaniam, T. S. (May 1, 2006). ""Discovery of a century" in Tamil Nadu". The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060615053236/http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm. பார்த்த நாள்: 2008-05-21. 
 14. Subramaniam, T. S. (May 1, 2006). "Significance of Mayiladuthurai find". The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100825181955/http://www.hinduonnet.com/2006/05/01/stories/2006050101992000.htm. பார்த்த நாள்: 2008-05-23. 

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரப்பா&oldid=3730203" இலிருந்து மீள்விக்கப்பட்டது