அராகனின் கத்தரீன்

இங்கிலாந்தின் ஹென்றி VIII மன்னரின் முதல் மனைவி

அராகனின் கத்தரீன் (Catherine of Aragon; 16 திசம்பர் 1485 - 7 ஜனவரி 1536), இங்கிலாந்தின் அரசியாக 1509-யிலிருந்து 1533 வரை ஆட்சி புரிந்தார் மற்றும் இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியாக இருந்தார். இவர்களது திருமணத்திற்கு முன்பு, கத்தரீன், ஹென்றியின் மூத்த சகோதரர் ஆர்தரின் விதவையாக இருந்தார்.

அராகனின் கத்தரீன்
Catherine of Aragon
இங்கிலாந்து அரசி
Tenure11 சூன் 1509 – 23 மே 1533
முடிசூட்டுதல்24 சூன் 1509
பிறப்பு16 திசம்பர் 1485
ஆர்க்கிபிஸ்கோபல் அரண்மனை, அல்கலா டி ஹெனாரஸ், காஸ்டில்
இறப்பு7 சனவரி 1536(1536-01-07) (அகவை 50)
கிம்போல்டன் அரண்மனை, இங்கிலாந்து
புதைத்த இடம்29 ஜனவரி 1536
பீட்டர்பரோ கதீட்ரல், பீட்டர்பரோ, இங்கிலாந்து
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
இங்கிலாந்தின் முதலாம் மேரி
குடும்பம்ட்ராஸ்டமரா
தந்தைஅராகனின் இரண்டாவது பெர்டினாண்ட்
தாய்காஸ்டிலின் முதலாம் இசபெல்லா
கையொப்பம்அராகனின் கத்தரீன் Catherine of Aragon's signature

கத்தரீன் அராகனின் ஃபெர்டினாண்ட் மற்றும் காஸ்டிலின் இசபெல்லாவின் இளைய மகள் ஆவார். இவர் மூன்று வயதில், இங்கிலாந்தின் இளவரசர் ஆர்தருடன் நிச்சயிக்கப்பட்டார்.இருவரும் 1501 இல் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் ஆர்தர் சில மாதங்களுக்குப் பிறகு 1502 இல் மாண்டார். கத்தரீன் அடுத்த 7 வருடங்கள் இங்கிலாந்தில் வறுமையில் வாழ்ந்தார். 1507 இல் ஸ்பானிஷ் தூதராக இங்கிலாந்தில் பணியாற்றினார், இதனால் கத்தரீன் ஐரோப்பாவின் முதல் பெண் தூதராக ஆனார்.

1509 இல் கத்தரீன் ஆர்தரின் இளைய சகோதரான ஹென்றியை மணந்தார். இந்த திருமணம் இங்கிலாந்து அரசியல் நலனுக்காக நடைபெற்றது என்றாலும், ஹென்றி தனது மனைவியை நேசித்ததாக கூறப்படுகிறது. 1510 முதல் 1518 வரை, கத்தரீன் ஹென்றியுடன் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார், அதில் ஒருவரான இளவரசி மேரி மட்டுமே முதிர்வயது வரை உயிர் வாழ்ந்தார். 1513 இல் ஹென்றி பிரான்சில் இருந்தபோது ஆறு மாதங்களுக்கு கத்தரீன் இங்கிலாந்தின் பிரதிநிதியாக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், ஹென்றி தனது அரசவையில் உள்ள பெண்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கலாம்.

சுமார் 1525ஆம் ஆண்டில், தனது ஆசை நாயகியாக ஆக மாற மறுத்த கத்தரீனின் பணியாள் ஆன ஆன் பொலின் மீது ஹென்றி மோகம் கொண்டார். மேலும் கத்தரீனுடனான அவரது திருமணத்தில் அதிருப்தி அடைந்தார், ஏனெனில் அவர்களுக்கு இது வரை ஒரு புதல்வன் கூட பிறக்கவில்லை. எனவே ஹென்றி கத்தரீன் உடனான தனது திருமணத்தை ரத்து செய்து ஆனை திருமணம் செய்ய விரும்பினார். பாப்பரசர் ஏழாவது கிளெமென்ட் அவர்களின் திருமணத்தை ரத்து செய்ய மறுத்தபோது, ​​மத விஷயங்களில் மேலாதிக்கத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு ஹென்றி அவரை மீறினார். 1533 இல் அவர்களின் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு பாப்பரசரின் அனுமதியின்றி இங்கிலாந்தில் உள்ள மதகுருமார்களின் தீர்ப்பின் பேரில் ஹென்றி ஆனை மணந்தார். இங்கிலாந்தில் உள்ள தேவாலயம் மேலாதிக்க தலைவராக ஹென்றியை ஏற்க கேத்தரின் மறுத்தார், தன்னை மன்னரின் உண்மையான மனைவியாகவும் ராணியாகவும் கருதினார். மேலும் இங்கிலாந்து மக்களுக்கு இடையே அனுதாபத்தை ஈர்த்தார்.

இருந்தபோதிலும், ஹென்றி கத்தரீனை தனது இறந்த மூத்த சகோதரர் ஆர்தரின் மனைவியாக வேல்ஸின் இளவரசி பதவிக்கு தாழ்த்தினார்.பின்னர், ஹென்றியின் உத்தரவின் பேரில் கத்தரீன் அரசவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். கத்தரீன் தனது மீதமுள்ள நாட்களை கிம்போல்டன் கோட்டையில் கழித்தார், ஜனவரி 1536 இல் புற்றுநோயால் இறந்தார். இங்கிலாந்து மக்கள் கத்தரீன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர், அவரது மரணம் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மகள் மேரி 1553 இல் தனது உரிமையிலே முதல் இங்கிலாந்து அரசி ஆனார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராகனின்_கத்தரீன்&oldid=3858087" இலிருந்து மீள்விக்கப்பட்டது