முடிசூட்டுதல்

முடிசூட்டுதல் அல்லது பட்டாபிசேகம் (coronation) என்பது முடியாட்சியில் அரசராக பதவி ஏற்பவரின் தலையில் மணிமுடி வைப்பது அல்லது வழங்குவது ஆகும். இந்தச் சொல் பொதுவாக தலையில் மணிமுடியை அணிவிக்கப்படுவதைக் குறிக்கிறது, ஆனால் முடியாட்சியில் ஒருவர் புதியதாக அரசனாக அதிகாரத்துக்கு வருவதைக் குறிப்பதும், மணிமுடி அணிவிப்பது உள்ளிட்ட செயல்பாட்டையும் சடங்குகள் கொண்டிருக்கும் முழு விழாவையும் குறிப்பதும் ஆகும். முடிசூட்டு விழாவில் அரசர் உறுதிமொழி ஏற்பது போன்ற சிறப்பு சடங்குகளை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செய்வது போன்றவை முக்கியத்துவம் கொண்டவையும் ஆகும். மேற்கத்திய பாணியிலான முடிசூட்டு விழாவில் பெரும்பாலும் புனித எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகின்றது; சமய நம்பிக்கையாளர்களால் செய்யப்படும் அபிஷேக சடங்குகளுக்கு விவிலியத்தில் உதாரணங்கள காணப்படுகின்றன. முடிசூட்டு விழாவில் மன்னருடன் அரசியைச் சேர்த்தோ அல்லது தனியாகவோ முடிசூட்டப்படலாம்.

பிரான்சின் ஏழாம் சார்லஸ் முடிசூட்டிக்கொள்ளல், (1429), ஜுஸ் எஜென் லெனெவெவ் வரைந்த ஓவியம்.

உலகில் முடியாட்சி நிலவும் நாடுகளில் முடிசூட்டு விழாவில் மேற்கொள்ளப்பட்ட பல முக்கியமான சடங்கு முறைகள், பல்வேறு சமூக-அரசியல் மற்றும் சமய காரணிகளுக்கு உட்பட்டு காலப்போக்கில் மாறிவிட்டன; பெரும்பாலும் நவீன முடியாட்சிகளில், அரியணை ஏறும் முடிசூட்டு விழாவானது எளிமையான விழாக்களாக நடத்த விரும்பப்படுகிறது. கடந்த காலத்து முடிசூட்டு விழாவில் பெரும்பாலும் தெய்வக் கருத்தாக்கமானது தவிர்க்கமுடியாமல் இணைக்கப்பட்டன. சில பண்டைய கலாச்சாரங்களில், ஆட்சியாளர்கள் தெய்வீகமானவர்களாக அல்லது தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டனர்: பண்டைய எகிப்தின் பார்வோன் மன்னர்கள் சூரியக் கடவுளான இராவின் மகனாக, கருதப்பட்டனர், ஜப்பானின், பேரரசரானவர் அமதெரசுவின் வம்சாவளைச் சேர்ந்தவர் என்று நம்பப்பட்டது. பண்டைய ரோமில் மன்னர் வழிபாடு நடைமுறையில் இருந்தது; இடைக்கால ஐரோப்பாவில், மன்னரானவர் ஆட்சிக்கான ஒரு தெய்வீக உரிமையைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவ சார்ந்த நம்பிக்கைகளின் நேரடி வெளிப்பாடாக முடிசூட்டி விழாக்கள் இருந்தன, ஆனால் அண்மைய நூற்றாண்டுகளில் அத்தகைய நம்பிக்கைகள் குறைவதைக் காண இயலுகிறது.

ஐக்கிய இராச்சியம், தொங்கா, மற்றும் பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கூட தற்காலத்திலும் முடிசூட்டு விழாக்கள் நடக்கின்றன. ஐரோப்பாவில், பெரும்பாலான பேரரசர்கள் நாட்டின் சட்டமன்றத்தின் முன்னிலையில் ஒரு எளிய உறுதிமொழியை எடுக்க வேண்டும். முடிசூட்டுதலானது, ஒரு முடியாட்சியின் அணுகுமுறைக்கு ஏற்ப பல வழிகளில் மாறுபடலாம்: சில நாடுகள் தங்களின் பதவியேற்பு வடிவமைப்பில் மத பரிமாணத்தை தக்க வைத்துக் கொண்டதாக மாற்றமின்றி தொடர்கின்றன. சில கலாச்சாரங்கள் குளியல் அல்லது சுத்திகரிப்பு சடங்குகள், புனித பானம் அல்லது பிற மத நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய நடைமுறைகள் நாடு தழுவிய அளவில் ஆன்மீக-மத விசயல்களில் முன்னணியில் உள்ள மன்னருக்கு கடவுளுடைய அருளை வழங்குவதை அடையாளப்படுத்துகின்றன.

சார்லமேனுக்கு பேரரசராக பேப் மூன்றாம் லியோ முடிசூட்டுகிறார், க்ரோனிகஸ் டி பிரான்ஸ் டு டி செயிண்ட் டெனிஸ், தொகுதி. 1; பிரான்ஸ், 14 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டு.

வரலாறு மற்றும் வளர்ச்சி

தொகு
 
சிசிலியின் இரண்டாம் ரோஜர், நேரடியாக இயேசு கிறிஸ்துவிடம் இருந்து கிரீடத்தை பெற்றுக்கொள்ளுதல்.

மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு இடைக்கால கிறிஸ்தவமண்டலங்களில் நடந்த முடிசூட்டு விழாக்களில் உரோம பேரரசர்களின் பழக்கவழக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலத்துக்கு பிறகு வளர்ச்சியடைந்ததால், மன்னராக முடிசூடி அபிஷேகம் செய்யப்படும் நிகழ்வுகளில் விவிலியத்தின் விவரங்கள் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தின.[1] ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்ட முடிசூட்டு விழா என்றால் பெரிய பிரிட்டனில் (மிக அண்மைக் காலமாகிய 1953 ஆம் ஆண்டில் நிகழ்ந்த்து) நடந்த முடிசூட்டு விழா ஆகும். இவ்விழாக்களின் நடைமுறைகள் பைசான்டியம், விசிகோதிக் ஸ்பெயின், கரோலீடியன் பிரான்ஸ் மற்றும் புனித உரோம சாம்ராஜ்யம் ஆகியவற்றில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சடங்குகளிலிருந்து தோன்றி, இடைக்காலத்தில் உச்சமடைந்தன.

கிறித்துவ நம்பிக்கையை ஏற்காத நாடுகளின், முடிசூட்டு சடங்குகள் பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட நாட்டின் மத நம்பிக்கைகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து உருவாயின. உதாரணமாக புத்த சமயமானது தாய்லாந்து, கம்போடியா, பூட்டான் ஆகியவற்றின் முடிசூட்டு சடங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதே சமயம் நேபாள சடங்குகளில் இந்துக் கூறுகள் முக்கிய பங்கு வகித்தன. சோழர் மரபில் சைவம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோழர்கள் தில்லை நடராசர் கோயிலின் வெள்ளிப்படியில் அமர்ந்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் கோண்டிருந்தனர்.[2] நவீன எகிப்து, மலேசியா, புருனே மற்றும் ஈரான் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விழாக்கள் இஸ்லாமியம் மூலம் கொண்டு உருவாக்கப்பட்டது,[சான்று தேவை] தொங்காவின் சடங்குகள் பழங்கால பாலினேசிய தாக்கங்களையும் நவீன ஆங்கிலிகத்தையும் ஒருங்கிணைப்பதாக உள்ளது.[சான்று தேவை]

பழந்தமிழகத்தில் முடிசூட்டுதல்

தொகு

பழந்தமிழகத்தில் மன்னனின் முடிசூட்டு விழா வெள்ளணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண் பெருமக்கள், புலவர்கள் போன்றவர்களுக்கு கொடையளிக்கப்பட்டன.[3][4] கம்பராமாயணத்தில் வரும் வெள்ளணி ஒத்த என்ற வரியைக்கொண்டு கம்பர் காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.[5] அண்டை நாட்டு அரசர்கள், அரசரது உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு புதிய அரசரை வாழ்த்தி பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1.  
  2. முனைவர் த. செயராமன் (2008). தமிழ் வழிபாட்டுரிமையும் தமிழ்த் தேசியமும். தஞ்சாவூர்: பன்மை வெளி. pp. 28–30.
  3. அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
    தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும்
    சிலம்பு-வஞ்சிக்காண்டம்-நீர்ப்படைக் காதை
  4. கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில் ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ
    கல்லாடம் 22 பிறை தொழுகென்றல்
  5. வள் உறை வயிர வாள் மகர கேதனன்
    வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.
    கம்பராமாயணம்-பால காண்டம்-உண்டாட்டுப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிசூட்டுதல்&oldid=3726033" இலிருந்து மீள்விக்கப்பட்டது