அரிச்சந்திரன் கதை

அரிச்சந்திர சரித்திரம் என்னும் தமிழ்க் காப்பியத்தில் உள்ளபடி இக்கதை சுருக்கமாகச் சொல்லப்படுகின்றது.

கதை ஓட்டம் தொகு

அரிச்சந்திரன் சந்திரமதியின் சுயம்வரத்துக்குச் செல்கிறான்.

வழியில் காளிகோயில். அரிச்சந்திரன் அதனை வணங்கினான். அப்போது அங்கு இருந்த கல்தேர் முதலானவை பொன்னாக மாறிவிடவே காளி அவற்றை அரிச்சந்திரனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறாள்.

சந்திரமதி பிறக்கும்போதே அவள் கழுத்தில் தாலி இருந்தது. இந்தத் தாலியைக் காண்பவன் இவளை மணப்பான் என அசரீரி அப்போது சொல்லிவைத்தது. சுயம்வரத்தின்போது அரிச்சந்திரன் அவளது தாலியைப் பார்த்துச் சொல்லவே சந்திரமதி அரிச்சந்திரனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள்.

இவர்களுக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு வயது ஏழு ஆகும்போது அரிச்சந்திரன் நாட்டை இழந்து அல்லல்படுகிறான்.

அரிச்சந்திரன் மனுநெறி தவறாதவன் என்று இந்திரன் சபையில் வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சபதம் செய்த விசுவாமித்திரர் செயலில் இறங்குகிறார்.

‘நான் வெளியில் இருந்தால் இந்த உண்மையை அரிச்சந்திரனிடம் சொல்லிவிடுவேன். ஆகவே அரிச்சந்திரன் விவகாரம் முடியும்வரையில் என்னைத் தேவர் காவலில் வையுங்கள்’ என நாரதர் கூறுகின்றார். (இது இந்தக் காப்பிய ஆசிரியர் புகுத்திய புதிய செய்தி)

(தேவி பாகவதம் என்னும் நூல் ஒரு செய்தியைக் கூறுகிறது. கூரசாது என்னும் பூதத்துக்குத் தன் குழந்தை தவிர மற்ற குழந்தைகளையெல்லாம் பலி கொடுக்கத் தீர்மானிக்கிறான். பின்னர் எண்ணிப்பார்த்துப் பாவம் எனத் துணிந்து பலிகொடுக்கும் செயலைக் கைவிடுகிறான். பலி கொடுக்க எண்ணிய பாவம் அவனைப் பற்றிக்கொளவே இவனது கதையில் மகன் சாகும் நிகழ்வு நேர்கிறது. இறுதியில் மயான காண்டத்தில் சதாக்ஷி என்னும் அம்பிகையைத் தொழுது மகனை உயிர்ப்பித்துகொள்கிறான்.) விசுவாமித்திரனை நூலாசிரியர் ‘கள்ளநீதிக் கௌசிகன்’ எனக் குறிப்பிடுகிறார். முனிவர்கள் பலரை அனுப்பி அரிச்சந்திரனிடமுள்ள பொருள்களையெல்லாம் தானமாகப் பெறச் செய்கிறார், விசுவாமித்திரர். விலங்கினங்கள் பலவற்றை அனுப்பி நாட்டை அழிக்கச் செய்கிறார்.

அரிச்சந்திரன் வேட்டையாடி விலங்குகளை அழிக்கிறான். இரவில் காட்டில் உறங்குகிறான். கனா காண்கிறான். அமைச்சனிடம் கூறுகிறான்.

காமன், சேனை என்று இரு பெண்களை விசுவாமித்திரன் உருவாக்குகிறான். அவர்கள் தங்களை அரிச்சந்திரன் மணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அரிச்சந்திரன் மறுத்து விரட்டிவிடுகிறான். விசுவாமித்திரர் அந்தப் பெண்கள் பக்கமாகப் பேசுகிறார். திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அதற்கு ஈடாக அவனிடமுள்ள எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் கொடு என்கிறார். அரிச்சந்திரன் கொடுத்துவிடுகிறான். முனிவர் தான் அணிந்திருந்த காவி ஆடையில் கொஞ்சம் கிழித்து அரசனுக்குக் கொடுத்துவிட்டு அவன் அணிந்திருந்த ஆடைகளையும் பெற்றுக்கொள்கிறார்.

சுக்கிரன் என்னும் முனிவன் தான் யாகம் செய்வதற்காகத் தன்னிடமிருந்த செல்வத்தை அரிச்சந்திரனிடம் கொடுத்துவைத்திருந்தான். அரிச்சந்தரன் செல்வத்தையெல்லாம் விசுவாமித்திரன் அனுப்பிய பெண்கள் பெற்றுக்கொண்டபின், சுக்கிரன் தான் கொடுத்து வைத்திருந்த பொருளைத் திருப்பித் தருமாறு கேட்கும்படி விசுவாமித்திரன் தூண்டினான். சுக்கிரனும் அவ்வாறே கேட்டான். 45 நாளில் திருப்பித் தருவதாக வாக்களித்துவிட்டு அரிச்சந்திரன் பொருள் தேடச் சென்றான்.

அரிச்சந்திரன் செல்லும்போது, அவன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன், அமைச்சன் சத்தியகீர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

சுக்கிரனுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்ப்பதற்காக மனைவி கூறியபடி மனைவியையும் மகனையும் விலை பேச, அந்தணன் ஒருவன் இருவரையும் விலைக்கு வாங்கிக்கொள்ள, முனிவன் கடன் தீர்கிறது. சுக்கிரன் இதுவரையில் தான் அலைந்ததற்குக் கூலி கேடுகிறான். அமைச்சனையும் தன்னையும் காசியில் பிணம் சுடும் புலையன் வீரவாகு என்பவனிடம் விற்று, முனிவனுக்குக் கூலியும் கொடுக்கிறான்.

அரிச்சந்திரனும் அவன் அமைச்சனும் காசியிலுள்ள சுடுகாட்டில் பிணம் சுடும் புலையனுக்கு அடிமைத்தொழில் செய்கின்றனர். பிணம் சுடுவதற்குக் கூலியாகத் தரப்படும் கால்பணமும், முழத் துண்டும் புலையனுக்கு. வாய்க்கரிசி கூலி அரிச்சந்திரனுக்கும் அமைச்சனுக்கும். இப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு குற்றேவல் செய்கிறான். வாய்கரிசி புனிதம் பெறுவதற்காக அமைச்சன் சத்தியகீர்த்தி அதனைக் சுரபிக்கு (பசுவுக்கு)த் தருவான். அதன் கோமய்யதுடன் விழும் அரிசியைமட்டும் எடுத்துச் சமைப்பான். இருவரும் உண்பர்.

அரிச்சந்திரன் மகன் பாம்பு கடித்து இறந்துபோகிறான். சந்திரமதி அழுது புலம்பிக்கொண்டே மகனைச் சுடுவதற்காகச் சுடுகாட்டுக்குக் கொண்டுவருகிறாள். அரிச்சந்திரன் பிணத்தைச் சுடுவதற்குக் கூலி கேட்கிறான். அவள் தன்னிடம் இல்லை என்கிறாள். கழுத்திலிருக்கும் தாலியைக் கொடு என்கிறான். தாலியைக் கண்டவன் தன் கணவனே என உணர்ந்த சந்திரமதி உண்மையை உரைக்கிறாள். இறந்தது தன்மகனே என உணர்ந்த பின்னும் வீரவாகுக்குச் சேரவேண்டிய கால்பணமும், முழத்துண்டும் எசமான் பார்ப்பனனிடம் வாங்கி வரும்படி மனைவியை அனுப்புகிறான்.

சந்திரமதி பார்ப்பன்னிடம் வருகிறாள். வழியில் குழந்தை ஒன்றின் பிணம் கிடக்கிறது. அது கள்வரால் கொலை செய்யப்பட்ட காசி அரசனின் குந்தை. சந்திமதி தன் குழந்தையைப் பேய்கள் கொண்டுவந்து போட்டனவோ என்று இருளில் குழந்தையைப் பார்க்கும்போது காவலாளிகள் குழந்தையைக் கொன்றவள் இவளே என எண்ணிக் குழந்தையுடன் அரசன்முன் நிறுத்துகின்றனர். அரசன் இவள் கொன்றிருக்கமாட்டாள் என எண்ணுகிறான். என்றாலும் அவளுக்குக் கொலைதண்டனை விதிக்கிறான். காவலாளிகள் வீரவாகுவிடம் அவளை அழைத்து வருகின்றனர். அவளைக் கொலை செய்யும்படி வீரவாகு அரிச்சந்திரனை ஏவுகிறான். அப்போது விசுவாமித்திரன் வந்து “இப்போதாவது, நீ எனக்குக் கொடுத்த நாட்டைக் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடு” என்று அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் கேட்கும்படி கூறுகிறார். (பொய் சொல்லச் சொல்கிறார்) கடமையைச் செய்யும்படி மனைவி கணவனைத் தூண்டுகிறாள். இந்திரன் வசிட்டரும் தேவரும் சூழ அங்கு வந்து பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியைக் குனியவைத்துக் கழுத்தில் வெட்டுகிறான். அந்த வெட்டு அவள் கழுத்தில் மாலையாக விழுகிறது.

‘நெறியின் அன்ன என்றனை விடா நிறை இவட்கு உளதேல்
இறுதி இன்மை பெறுக, இல் எனின் இவள் இறுதி
பெறுக’ என்று வாள் வீசீனன்; பேதைதன் கழுத்தில்
மறுமணத்திடு மாலையாய் வீழ்ந்தது அவ் வடிவாள்.

காந்தி தொகு

அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த மகாத்மா காந்தி தன் வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்துவந்தார்.

தமிழ்நாடு அரசுமுத்திரை தொகு

வாய்மையே வெல்லும் - என்னும் தொடர் தமிழ்நாடு அரசுமுத்திரையில் உள்ளது.

இவற்றையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிச்சந்திரன்_கதை&oldid=3714348" இலிருந்து மீள்விக்கப்பட்டது