சிலப்பதிகாரம் (அரும்பதவுரை)

(அரும்பதவுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரையை ‘அரும்பதவுரை’ என்பர். இந்த வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழைய அரும்பதவுரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்டுள்ள உரையாகும். எனவே அரும்பதவுரை என்றாலே அது இந்தச் சிலப்பதிகார அரும்பதவுரையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறிவிட்டது.

சிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை பெரிதும் போற்றப்படுகிறது. இவரது உரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரையைப் பதிப்பாளர்கள் அரும்பத உரை என்கின்றனர். இந்த அரும்பதவுரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கும் முந்திய உரை ஒன்றும் உண்டு.

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் இசை பற்றிய செய்திக்குப் பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளனவே எனத் தெரிகிறது.

அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய அரும்பதவுரைச் செய்திகள்

தொகு

அடியார்க்கு நல்லார் ‘எனக் காட்டுவர் அரும்பதவுரையாசிரியர்’ என்னும் குறிப்புடன் காட்டும் அக்காலச் சமுதாயச் செய்திகள் இவை. [1]

அமைச்சர், புரோகிதர், சேனா பதியர்,
தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர்
பார்த்திபர்க்கு ஐம்பெருங்குழு எனப்படுமே.
கருமத்தியலவர், கருமகாரர்,
கருமச் சுற்றம், கடைகாப்பாளர்,
நகர மாந்தர், நளிபடைத் தலைவர்.
யானை வீரர், இவுளி மறவர்.
இனையர் ‘எண்பேராயம்’ என்ப.
  • ஆயத்தார் எண்மர், அவைகளத்தார் ஐவர்
சாந்து, பூக், கச்சு, ஆடை, பாக்கு, இலை, [2] கஞ்சுகம், [3] நெய்
ஆய்ந்த இவரெண்மர் ஆயத்தார் – வேந்தர்க்கு
மாசனம், பார்ப்பார், நிமித்தரோடு, அமைச்சர்
ஆசில் அவைக்களத்தார் ஐந்து [4]
  • இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. சிலப்பதிகாரம், இந்திரவிழவூர் எடுத்த காதை அடி 157 உரை
  2. வெற்றிலை
  3. மேல்சட்டை
  4. வேந்தர், குடிமக்கள், பார்ப்பார், காலக்கணியர், அமைச்சர் ஆகிய ஐவர் அவைக்களத்தில் இருப்பர்.