அரும்பு (தமிழ்நாட்டுச் சிற்றிதழ்)

தமிழ்நாட்டுச் சிற்றிதழ்

அரும்பு என்பது 1980களின் துவக்கத்தில் வெளியான ஒரு இலக்கிய தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இந்த இதழானது எழுத்தாளர் அமிர்தராஜை ஆசிரியராக கொண்டு வெளியானது.[1]

வரலாறு

தொகு

பல ஆண்டுகளாக, ஒரு கிறிஸ்துவ சங்கப் பத்திரிகையாக வெளிவந்தது. அரும்பு 1983 சூன் முதல் இலக்கியத் தரமான இதழாக வெளிவரத் தொடங்கியது. அமிர்தராஜ் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார்.

மேலும் செ. யோகநாதன், வண்ணதாசன், வல்லிக்கண்ணன், கர்ணன், பிரபஞ்சன், கார்த்திகா ராஜ்குமார், பாவண்ணன் முதலிய எழுத்தாளர்களின் கதைகளை அரும்பு வெளியிட்டது. வணிக நோக்குடைய பத்திரிகைகளில் வருகிற கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, புதுமையான, பரிசோதனை ரீதியான கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டது. தமிழன்பன், ஆத்மாநாம், பாப்ரியா, நீலமணி, பிரதிபா ஜெயச்சந்திரன் முதலியவர்களின் கவிதைகள் வெளி வந்தன. பிறமொழிக் கவிதைகளின் தமிழாக்கமும் அதிகமாகவே பிரசுரிக்கப்பட்டது. பிரம்மராஜன் பல நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்தார்.

சிறப்பான செவ்விகளையும் ‘அரும்பு‘ வெளியிட்டது. வலம்புரி ஜான், வல்லிக்கண்ணன், கோமல் சுவாமிநாதன், ஓவியர் ஜெயராஜ் போன்றவர்களின் செவ்விகள் முக்கியமானவை. தனித்தன்மையோடு வித்தியாசமான செவ்விகளை வெளியிடும் எண்ணத்தோடு, முடிதிருத்தும் தொழிலாளி, நடைபாதைத் தொழிலாளி, சுமை தூக்குவோர் முதலியவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பிரச்னைகளையும் கேட்டறிந்து நல்ல முறையில் எதார்த்தச் சித்திரங்களாக வெளியிட்டது.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 272–277. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.