அறவண அடிகள்

அறவண அடிகள் மணிமேகலை காப்பியத்தில் வரும் பௌத்த துறவி. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் மணிமேகலைக்குப் புத்தநெறியைப் புகட்டியவர். புகார் நகரத்தில் வாழ்ந்தவர். புகார் நகரத்தைக் கடல் கொண்ட பின் கச்சிமாநகருக்கு வந்து அறமுறைத்தவர்.

 • மறவணம் நீத்த மாண்பால் இவரை அறவண அடிகள் என்றனர். [1] [2]
 • உடலுக்குப் பாரமாக ஒட்டிக்கொண்டுள்ள பத்துத் தீவினைகளைக் களையவேண்டும் என மணிமேகலைக்குப் புகட்டியவர்.
 • நரைத்த முடி, நடுக்கமில்லா மூதுரை வழங்கும் நாவை உடையவர் அடிகள்.[3]
 • மாதவி தன் மகள் மணிமேகலையைப் பத்தினித்தெய்வம் கண்ணகியின் மகள் என்று தன் தோழி வயந்தமாலைக்குக் கூறி, அவளை அறவண அடிகளிடம் அடைக்கலப்படுத்துகிறாள். அப்போது பிறந்தவர்க்குப் பெருந்துன்பம், பிறவாதவர்க்குப் பேரின்பம், பற்றால் பிறவி வரும் என்று அடிகள் அருளுரை வழங்குகிறார். [4]
 • மணிமேகலைக்கு அமுதசுரபி வழங்கிய தீவதிலகை ‘தீவினை அறுக்கும் செய்தவப் பயிற்சி’யை அறவண அடிகளிடம் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறது.[5]
 • புகார் நகரத்தைப் கடல் கொண்டபின் துறவு மேற்கொண்டிருந்த மாதவியும், அறவண அடிகளும் காஞ்சிபுரத்துக்கு வந்துவிட்டனர். [6]

அடிக்குறிப்புகள்தொகு

 1. மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
  அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து (மணிமேகலை 2 அடி 60-61)
 2. அல்லவை கடிந்த அறவண வடிகளும் மணிமேகலை 28 அடி 236
 3. நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
  உரைமூ தாளன் (மணிமேகலை 12 அடி 3-4)
 4. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
  பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
  பற்றின் வருவது முன்னது பின்னது
  அற்றோர் உறுவது அறிகென்று அருளி (மணிமேகலை 2 அடி 64-67)
 5. தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு
  அறவண வடிகள் தம்பால் பெறுமின் (மணிமேகலை 11 139-140)
 6. மாநகர் கடல்கொள
  அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
  இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் (மணிமேகலை 28 அடி 80-81)

வெளி இணைப்புகள்தொகு

தமிழின் முதல் தருக்கவாதி ‘அறவண அடிகள்’ உங்கள் நூலகம் - ஜூலை 2017

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறவண_அடிகள்&oldid=3285979" இருந்து மீள்விக்கப்பட்டது