அறுகை என்பவன் ஓர் அரசன். அவன் 5-ஆம் பதிற்றுப்பத்துப் பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனுக்குக் 'கேளிர்' என்று குறிப்பிடப்படுகிறான். [1] கேண்மை எனபது நட்பைக் குறிக்கும் [2] நண்பரைக் 'கிளைஞர்' என்று [3] வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இந்தச் சொல்லாட்சிகள் 'கேளிர்' என்னும் சொல்லை நண்பர் என்று கொள்ள இடம் தருகின்றன. அந்த அறுகை பிறரது கோட்டையைக் கைப்பற்றும் உழிஞைப்போரில் ஈடுபட்டு மோகூர் மன்னனை வென்றான். மோகூர் மன்னனின் பெயர் 'பழையன்' [4] அறுகை வெற்றி பெற்றாலும், எப்படியோ பிடிபட்டுப் பழையனால் ஒளித்து வைக்கப்பட்டான். நண்பன் ஒளித்து வைக்கப்பட்டது கண்டு பொறாத செங்குட்டுவன் மோகூரைத் தாக்கி, மோகூர் மன்னனின் காவல்மரம் வேம்பை வெட்டித் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து முரசு செய்துகொண்டான். வெட்டிய வேப்பந் துண்டத்தை வரிசையாக யானைகளைக் கட்டி யானைஒழுகையால் இழுத்துவந்தான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் தாம் களைந்தெறிந்த தலை முடிகளைக் கொண்டு கயிறு திரித்து அக் கயிற்றால் மரத்தைக் கட்டி இழுத்துவந்தான்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிற்றுப்பத்து 44
  2. திருக்குறள் 792
  3. திருக்குறள் 796
  4. பதிற்றுப்பத்து 5-ம் பத்தின் பதிகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகை&oldid=1292522" இலிருந்து மீள்விக்கப்பட்டது