அலெக்சாந்திரியா நூலகம் (2002)

எகிப்திலுள்ள ஒரு நூலகம்

2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் (English: Library of Alexandria; மிசிரி மொழி: مكتبة الإسكندرية Maktabat El-Iskandarīyah, Egyptian Arabic: [mækˈtæb(e)t eskendeˈɾejjæ]) எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியா நகரில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த ஒரு முக்கியமான நூலகமும், பண்பாட்டு மையமும் ஆகும். இது அழிந்துபோன பழங்கால அலெக்சாந்திரியா நூலகத்தின் நினைவாகவும், பழைய கல்விக்கான மையம் வெளிப்படுத்திய விளக்கத்தையும், கல்வித் திறனையும் புதுப்பிப்பதற்கான முயற்சியாகவும் உருவாக்கப்பட்டது. பழைய நூலகத்தை மீள்விக்கும் எண்ணம் 1974 ஆம் ஆண்டில், அலெக்சாந்திரியாப் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு புதிய நூலகக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு நிலம் வாங்கியபோது உருவானது. கட்டுமான வேலைகள் 1995 ஆம் ஆண்டில் தொடங்கின. 220 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்கள் செலவிட்ட பின்னர் 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 இல் நூலகம் முறைப்படி திறக்கப்பட்டது.[1][2] 2010 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய நூலகம் 500,000 நூல்களைக் கொடையாக வழங்கியது. இந்த நன்கொடை அலெக்சாந்திரியா நூலகத்தை உலகின் ஐந்தாவது பெரிய பிரெஞ்சு மொழி நூலகம் ஆக்கியது.

Library of Alexandria
அலெக்சாந்திரியா நூலகம்
நாடுஎகிப்து
வகைதேசிய நூலகம்
தொடக்கம்16 அக்டோபர் 2002; 21 ஆண்டுகள் முன்னர் (2002-10-16)
அமைவிடம்அலெக்சாந்திரியா, Egypt
அமைவிடம்31°12′32″N 29°54′33″E / 31.20889°N 29.90917°E / 31.20889; 29.90917
Access and use
உறுப்பினர்கள்16,322 (2012)
ஏனைய தகவல்கள்
இயக்குநர்Mostafa El Feky
இணையதளம்www.bibalex.org
Map
Map

இந்த நூலகத்தில் 8 மில்லியன் நூல்களை வைப்பதற்கான தட்டு அடுக்கு வசதிகள் உள்ளன. இதன் முதன்மை வாசிப்பு மண்டபம் 20,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கே ஒரு மாநாட்டு மையம்; நிலப்படங்கள், பல்லூடகங்கள், பார்வைக் குறைபாடு கொண்டோருக்கான வசதிகள், இளைஞருக்கும் சிறுவருக்குமான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு நூலகங்கள்; நான்கு அருங்காட்சியகங்கள்; தற்காலிகக் கண்காட்சிகளுக்கான நான்கு கலைக்கூடங்கள்; 15 நிரந்தரக் கண்காட்சிகள்; ஒரு கோளரங்கம்; கையெழுத்துப் படிகளைப் பாதுகாக்கும் ஒரு ஆய்வுகூடம் என்பன உள்ளன. இந்த நூலகத்தின்மீது இரண்டு கோணங்களில் இருந்து விமர்சனங்கள் வருகின்றன. தற்கால எகிப்து இதன் செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்து. தணிக்கைகள் நூலகத்தின் சேகரிப்புக்களைப் பாதிக்கக்கூடும் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. சேகரிப்புக்களுக்குப் பணம் செலவு செய்வதற்குப் பதிலாக இதன் கட்டிடங்களில் தேவைக்கும் மேலாகப் பணம் செலவிடப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு விமர்சனம் ஆகும்.

வரலாறு தொகு

அலெக்சாந்திரியா பல்கலைக்கழகத்தின் நூலகக் கட்டிடத்துக்காக 1974 இல் ஒரு இடம் தெரிவுசெய்யப்பட்டது. இதன்போது பழங்கால நூலகத்தை மீள்விக்கும் எண்ணமும் உருவானது. கடற்கரைக்கும், பல்கலைக்கழக வளாகத்துக்கும் இடையில், முற்கால அலெக்சாந்திரியா நூலகம் இருந்த இடத்துக்கு அண்மையில் இந்த நிலம் இருந்தது. பழைய நூலகத்தை மீள்விக்கும் எண்ணத்துக்கு எகிப்தின் அரசியல் வாதிகளிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது. எகிப்தின் அதிபராக இருந்த ஒசுனி முபாரக்கும் இதற்கு ஆதரவாக இருந்தார். நடுநிலக்கடற் பகுதியில் பண்பாடு மற்றும் அறிவியல் கல்வித்திறனுக்கான மையம் ஒன்றை அமைக்கும் எண்ணத்துக்கு யுனெசுக்கோவும் ஆதரவு அளிக்க முன்வந்தது. குறித்த இடத்துக்கும் அதன் மரபுரிமைக்கும் பெறுமதியாக இருக்கும் வகையில் ஒரு வடிவமைப்பைத் தெரிவு செய்வதற்காகக் கட்டிடக்கலை வடிவமைப்புக்கான போட்டி ஒன்றை 1988 இல் யுனெசுக்கோ அறிவித்தது. கிடைத்த 1,400 வடிவமைப்புக்களில் நோர்வே நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் வடிவமைப்பைச் சிறந்ததாகத் தெரிவு செய்தனர். 1990 இல் அசுவானில் இடம்பெற்ற மாநாடொன்றில் முதன் முறையாகப் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் குழுவிடம் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் இதற்கான செலவு 220 அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்தது. 2002 ஆம் ஆண்டில் இந்நூலகம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது.

இது செந்நெறி அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சேகரங்களைக் கொண்ட மும்மொழி நூலகமாகச் செயற்படுகின்றது. இது, துனீசியா, அல்சீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளின் நூலகங்களைப் பின் தள்ளி, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் மிகக் கூடிய பிரெஞ்சு நூல் சேகரங்களைக் கொண்ட நூலகமாக விளங்குவதுடன் ஆப்பிரிக்காவின் முக்கியமான பிரெஞ்சு நூலகமாகவும் இது உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Alexandrina
  2. Clare Davies. "Archive Map: Egypt" (PDF). Speak Memory. Archived from the original (PDF) on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  3. A Donation of Half Million Books from France to the BA, 1 December 2009, Bibliotheca Alexandrina