அல்-அஷ்ஹர் வித்தியாலயம், கல்முனை

அல்-அஷ்ஹர் வித்தியாலயம் (Al-Azhar Vidyalaya) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை நிர்வாக மாவட்டத்திலுள்ள கல்முனைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.

அல்-அஷ்ஹர் வித்தியாலயம்
கல்முனை அல்/அஷ்கர் வித்தியாலயத்தின் சின்னம்
அமைவிடம்
கல்முனைக்குடி, கல்முனை, இலங்கை
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
தொடக்கம்1869
பள்ளி மாவட்டம்அம்பாறை மாவட்டம்
கல்வி ஆணையம்இலங்கை கல்வி அமைச்சு
அதிபர்ஏ. எல். அப்துல் றஸ்ஸாக்
தரங்கள்1 முதல் 9 வரை
மாணவர்கள்1080
கல்முனை அல்/அஷ்கர் வித்தியாலயத்தின் தோற்றம்
கல்முனை அல்/அஷ்கர் வித்தியாலயத்தின் தோற்றம்

வரலாறு

தொகு

அல்-அஷ்ஹர் வித்தியாலயம் 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய கிறித்தவ மதபரப்புனர்களால் ஒரு தர்மப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இதை ஆரம்பிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் அப்போது கல்முனைக்குடியின் மூத்த கற்றோர்களில் ஒருவரான அகமது லெவ்வைக் காரியப்பர் நொத்தாசியார் ஆவார். இவர் பதுளை வெல்லஸ்ஸ, கொட்டபோவ கிராமத்தில் பிறந்து பிரித்தானியர்களினால் நீர்கொழும்பில் ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டவராவார். இவர் கல்முனைக்குடியில் திருமணம் செய்து வாழ்ந்தார். இவருக்கும், அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவே கல்முனைக்குடியில் தர்மப்பாடசாலை ஆரம்பிப்பதற்கு உதவியாக இருந்தது.

கல்முனைக்குடி முகையத்தீன் ஜும்மா பள்ளிவாசல் காணியினுள் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, எம்.எம்.பாடசாலை (தர்மப்பாடசாலை - 1869), அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலை (01.11.1930), அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை (01.10.1946) என்று பெயர் மாற்றங்களைப் பெற்று கடைசியாக கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலயம் (10.06.1967) என்னும் பெயரில் இன்று வரையில் இயங்கி வருகின்றது.

32 மாணவர்களுடனும் 3 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை தற்போது 1080 மாணவர்களுடனும் 51 ஆசிரியர்களுடனும் ஒரு இடைநிலைப் பாடசாலையாக (தரம்-01 முதல் தரம்-09 வரை) கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

மகுடவாக்கியம்

தொகு

கற்று ஆய்ந்து ஒழுகு.

தூரநோக்கு

தொகு

சமூகத்தில் ஒரு கெளரவமான இடத்தைப்பெற்று, நாட்டில் சிறந்த நற்பிரஜைகளாக உருவாகும் மாணவர் சமுதாயம்..

பணிக்கூற்று

தொகு

பாடசாலை சமூகத்தில் அனைவரினதும் அடிப்படை உரிமையான எண், எழுத்து, வாசிப்புத்திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல்.


அதிபர்கள்

தொகு

இப் பாடசாலையின் முகாமைத்துவப் பணியில் 1869 ம் ஆண்டு முதல் இன்றுவரை அதிபர்களாகப் பணியாற்றியவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

  1. இராசரெத்தினம் வாத்தியார் - 1869
  2. எஸ். ரி. கந்தையா - 1874
  3. வி. ஏ. ஆறுமுகம் - 1901
  4. எம். சி. மீராசாஹிபு - 1930
  5. ஐ. அலியார் - 1952
  6. புலவர்மணி ஆ. மு. சரிபுத்தீன் - 1959
  7. எம். எம். மன்சூர் - 1961
  8. ஏ. எல். இப்றாலெவ்வை - 1967
  9. ஏ. அப்துல் றஹீம் - 1970
  10. எம். ஐ. இஸ்மாலெவ்வை - 1974
  11. எம். எம். சம்சுதீன் - 1975
  12. ஏ. யூ. எம். ஏ. கரீம் - 1976
  13. எம். எல். எம். சம்சுதீன் - 1976
  14. எஸ். செயினுலாப்தீன் - 1978
  15. ஏ. எல். இப்றாலெவ்வை (இரண்டாம் முறை) - 1979
  16. ஏ. யூ. எம். ஏ. கரீம் (இரண்டாம் முறை) - 1985
  17. யூ. எல். பாறூக் - 1988
  18. யூ. ஏ. மஜீத் - 1991
  19. எஸ். எல். இப்றாலெவ்வை - 2002
  20. ஏ. எல். அஸீஸ் சைபுத்தீன் - 2003
  21. ஏ. எல். எம். தாஹிர் - 2005
  22. ஏ. எல். அப்துல் றஸ்ஸாக் - 2007

பாடசாலைப் பண்

தொகு
இகபரமருள் பெற இகமதில் நாமே
இறைவனை யாம் பணிந்தோமே.
கலை பல பயின்று ஒளிபெறத்தினமே
கர்த்தனைத் துதித்திடுவோமே.
ஜெயமே பெறவே அருள்வாய் இறையே.
ஆய்ந்த நல் ஆசான்கள் ஆற்றிடும் சேவை
அழகுற அமைந்திட அருள்வாய்.
மாய்ந்திடும் மனதில் மாயைகள் அகல
தூய நற்கல்வி அருள்வாய்.
ஜெயமே பெறவே அருள்வாய் இறையே.
கடல் வளம் செறிநற் கல்முனை நகரில்
கலங்கரை ஒளியாய்த் திகழும்.
எழில் பெற அமைந்த அல்-அஷ்ஹர் வித்தியாலயம்
நிலைபெற அருள்வாய் இறையே.
ஜெயமே பெறவே அருள்வாய் இறையே..

பாடசாலையில் கற்று புகழ்பெற்றவர்கள்

தொகு
  • ஏ, ஆர். மன்சூர், முன்னாள் அமைச்சர்
  • எம். எச். எம். அஷ்ரப், முன்னாள் அமைச்சர்
  • ஏ. எம். சம்சுதீன், சட்டத்தரணி, அரசியல்வாதி
  • யூ. எல். ஏ. மஜீத், உச்சநீதிமன்ற நீதிபதி, கவிஞர்
  • ஏ. எல். எம். ஜெமீல், மகப்பேற்று வைத்தியர்
  • எம். ஏ. நுஃமான், தமிழறிஞர்
  • ஏ. எல். அப்துல் கபூர், ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர், ஆங்கில மொழி எழுத்தாளர்