அளவுவிகிதம் (நிலப்படம்)

(அளவிகிதம் (நிலப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலப்படங்களில் அளவுவிகிதம் (scale) ஒரு பொருளின் மெய்யான அளவிற்கும் நிலப்படத்தில் அதே பொருள் சிறியதாகக் காட்டப்படும் அளவிற்கும் உள்ள ஒப்புமையைக் குறிக்கிறது.[1] இது நிலப்படங்களில் அளவிகிதச் சட்டம் மற்றும் 1:n போன்ற விகிதங்களாலும் குறிப்பிடப்படும். நிலப்படத்தைப் பயன்படுத்துவோர் இதன் மூலம் நிலப்படத்தில் அளவிட்ட தொலைவை மெய்யானத் தொலைவிற்கு கணித்துக் கொள்ள முடியும்.

நிலப்படங்களில் மாறுபடும் அளவுவிகிதத்தை அளவிடும் அளவுகோல்

அளவிகித கலைச்சொற்கள்

தொகு

சொல்வழி அளவிகித வெளிப்பாடு

தொகு

நிலப்பட அளவிகிதங்கள் சொற்களில் வெளிப்படுத்தப்படும்; இது விகிதமாகவோ பின்னமாகவோ இருக்கலாம். சிலெடுத்துக்காட்டுகள்:

'ஒரு செமீக்கு நூறு மீட்டர்கள்'    அல்லது    1:10,000   அல்லது    1/10,000
'ஓரங்குலத்திற்கு ஒரு மைல்'    அல்லது    1:63,360    அல்லது    1/63,360
'ஒரு செமீக்கு ஆயிரம் கிமீ'   அல்லது   1:100,000,000    அல்லது    1/100,000,000.  (பெரும்பாலும் இந்த விகிதம் 1:100M எனச் சுருக்கப்பட்டிருக்கும்)

பட்டை விளக்கம் எதிர். சொல் விளக்கம்

தொகு

மேலே கூறியதைத் தவிர சில நிலப்படங்களில் (படத்தோற்றமாக) பட்டை அளவிகிதங்கள் காட்டப்பட்டிருக்கும். காட்டாக, தற்கால கடல்சார் நிலப்படங்களில் கிமீ, மைல்கள், கடல்சார் மைல்கள் என மூன்று பட்டை அளவிகிதங்கள் இடப்படுகின்றன. இத்தகைய நிலப்படங்களில் அளவுக்கோல் அல்லது கோணமானிகளைக் கொண்டு அளவிட முடியும்.

பட்டை விளக்கத்தையும் சொல் விளக்கத்தையும் ஒப்புநோக்கினால் பயனருக்கு மொழி தெரியுமானால் அளவிகிதத்தை எளிதாக கற்பனை செய்து கொள்ள முடியும். ஒரு அங்குலம் ஒரு மைல் என்றால் நிலப்படத்தில் இரண்டு ஊர்கள் இரண்டு அங்குலம் விலகியிருந்தால் அவைகளுக்கு இடையே உள்ள தொலைவு நான்கு மைல்கள் எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விளக்கம் தரப்பட்டுள்ள மொழியில் பயனருக்கு அறிமுகம் இல்லையென்றாலோ அல்லது புழக்கத்தில் இல்லாத தொன்மையான அலகில் குறிப்பிடப்பட்டிருந்தாலோ சிக்கலாகும். இங்கு காட்சித்தோற்ற பட்டை விளக்க குறியீடு சிறப்பாகும்.

பெரும் அளவுவிகிதம், இடைப்பட்ட அளவுவிகிதம், சிறிய அளவுவிகிதம்

தொகு

சில நேரங்களில் நிலப்படங்களை "பெரும் அளவிகித நிலப்படம்" என்றோ "சிறிய அளவிகித நிலப்படம்" என்றோ வகைப்படுத்தப்படுகின்றது. "பெரிய அளவிகித நிலப்படத்தில்" பொருட்கள் பெரியதாகக் காட்டப்படுகின்றன. இதற்கு எதிராக "சிறிய அளவிகித நிலப்படத்தில்" பொருட்கள் சிறியனவாகக் காட்டப்படுகின்றன. காட்டாக, நிலப்படமொன்றில் 1:10,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவு 1:25,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவை விட பெரியதாக இருக்கும். இதனால் முன்னதை பெரிய அளவிகித நிலப்படம் எனலாம். ஒரே அளவுள்ள நிலப்படங்களை, காட்டுக்கு 11x17 அங்குல நிலப்படம், ஒப்பிட்டால் பெரிய அளவிகித நிலப்படத்தில் மையத்தைச் சுற்றி குறைந்த நிலப்பரப்பே காட்டப்பட்டிருக்கும்; சிறிய அளவிகிதத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் மையத்திலிருந்து விரிவான புவியியல் பரப்பு காட்டப்பட்டிருக்கும். இணையப் பயன்பாடுகளில் இயங்குநிலை அளவிகித மாற்றங்களில் பெரிய அளவிகிதத்திற்கு செல்வது அண்மையாக்கு என்றும் சிறிய அளவிகிதத்திற்குச் செல்வது சேய்மையாக்கு என்றும் குறிப்பிடப்படும்.

1:50 000 அல்லது அதற்கும் மேலான (காட்டாக, 1:40 000) விகிதங்கள் கொண்ட நிலப்படங்கள் பெரிய அளவிகித நிலப்படங்கள் எனப்படுகின்றன. 1:50 000 முதல் 1:250 000 வரை அளவிகிதங்களைக் கொண்டவை இடைநிலை அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவையல்லாத நிலப்படங்கள் (காட்டாக 1:300 000) சிறிய அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன.[2]

கீழுள்ள அட்டவணையில் இவை விளக்கப்பட்டுள்ளன; இவற்றிற்கு இதுவரை எந்த அலுவல்முறை சீர்தரமும் இல்லை:

வகைப்பாடு வீச்சு காட்டுகள்
பெரும் அளவுவிகிதம் 1:0 – 1:600,000 1:0.00001 நோய்வீச்சைக் காட்டும் நிலப்படத்தில்; 1:5,000 நகர்புற நடைபாதைகள் நிலப்படத்தில்
இடைப்பட்ட அளவுவிகிதம் 1:600,000 – 1:2,000,000 நாட்டு நிலப்படங்கள்
சிறிய அளவுவிகிதம் 1:2,000,000 – 1:∞ 1:50,000,000 உலக முழுமைக்கான நிலப்படங்கள்; 1:1021 விண்மீன்திரளுக்கான நிலப்படம்

நிலப்படத்தில் அளவுவிகிதம் இடல்

தொகு
 
திசாட்டின் குறுப்பீட்டு நிலப்படத்தில் நிலப்படத்தின் வெவ்வேறு புள்ளிகளில் நிலவும் அளவிகிதத்தை விளக்குகின்றது.

அளவிகிதத்தின் அடிப்படை மிக எளிமையாக இருப்பினும் இதனை நிலப்படங்களில் அச்சிடும்போது சிக்கல்கள் எழுகின்றன. கோளவடிவ புவியின் மேற்பரப்பு வளைவாக உள்ளதால் இந்த அளவுவிகிதம் நிலப்படத்தின் வெவ்வேறு புள்ளிகளில் மாறுகின்றது. இந்த வேறுபாடுகளால் இந்த அளவிகித கோட்பாட்டில் இரு விதயங்கள் கவனம் பெறுகிறது. முதலாவது புவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம். உருவாக்கும் கோளம் புவியின் அளவைச் சுருக்கி அதன்வடிவமாக கருதப்படும் கருதுகோள். இந்த கோளத்திலிருந்து நிலப்படம் வீழ்த்தப்படுகின்றது.

புவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம் பெயரளவு அளவுவிகிதம் (= முதன்மை அளவுவிகிதம் = சார்பு பின்னம்) எனப்படுகின்றது. பல நிலப்படங்களும் இந்த பெயரளவு அளவிகிதத்தை குறிப்பிடுகின்றன. இந்த நிலப்படங்களில் இது அளவிகிதச் சட்டம் அச்சிடப்பட்டிருக்கும். அடுத்ததாக நிலப்படத்தின் வெவ்வேறு பகுதிகளில் அளவிகிதத்தில் காணப்படும் வேறுபாடு. இது நிலப்படத்தில் உள்ள புள்ளியில் உள்ள அளவிகிதத்திற்கும் பெயரளவிலான அளவிகிதத்திற்குமுள்ள விகிதமாகும். இது அளவிகித காரணி (= புள்ளி அளவுவிகிதம் = குறிப்பிட்ட அளவுவிகிதம்) எனப்படும்.

நிலப்படத்தில் காட்டப்படும் புவிப்பகுதி புவியின் வளைவை புறக்கணிக்கத் தக்கதாக சிறியதாக இருப்பின்—சிற்றூரின் நகரத்திட்டம் போன்றவை—ஒரே அளவுவிகிதம் குறிப்பிட்டால் போதுமானது. ஆனால் பெரும் நிலப்பரப்புகளைக் காட்டும் நிலப்படங்களில், அல்லது புவியை முழுமையாகக் காட்டும் நிலப்படங்களில், நிலப்படத்தின் அளவுவிகிதம் தொலைவுகளை கணிக்கப் பயன்ற்றது. நிலப்படத்தில் எவ்வாறு அளவிகிதங்கள் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகின்றன என்பதை அறிய நிலப்பட வீழல் முதன்மை பெறுகின்றது.[3][4] இந்த அளவிகிதங்கள் கவனிக்கத்தக்க அளவில் வேறுபடுமானால் அளவிகித காரணியை குறிப்பிடுவது தேவையாகிறது. திசாட்டின் குறிப்பீட்டு நிலப்படம் இதனை விளக்க பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "map (cartography) :: Map scales and classifications -- Britannica Online Encyclopedia". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2010.
  2. "3 Ways of Showing a Map's Scale". ThoughtCo. https://www.thoughtco.com/map-scale-measuring-distance-on-map-1433533. 
  3. Snyder, John P. (1987). Map Projections - A Working Manual. U.S. Geological Survey Professional Paper 1395. United States Government Printing Office, Washington, D.C.This paper can be downloaded from USGS pages. பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் It gives full details of most projections, together with introductory sections, but it does not derive any of the projections from first principles. Derivation of all the formulae for the Mercator projections may be found in The Mercator Projections.
  4. Flattening the Earth: Two Thousand Years of Map Projections, John P. Snyder, 1993, pp. 5-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-76747-7. This is a survey of virtually all known projections from antiquity to 1993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவுவிகிதம்_(நிலப்படம்)&oldid=3353457" இலிருந்து மீள்விக்கப்பட்டது