அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)

(அழகர் ஆற்றில் இறங்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

திருவிழா வழக்கம் தொகு

சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.

சமய ஒற்றுமையாக்கம் தொகு

இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும் [1]

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” (முதல் பதிப்பு: டிசம்பர், 2000) நூல் பக்கம்:187

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு