அழகர் கோவில்
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°20′N 78°02′E / 9.33°N 78.03°Eஆள்கூறுகள்: 9°20′N 78°02′E / 9.33°N 78.03°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் |
பெயர்: | அழகர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவு: | தமிழ் நாடு, இந்தியா |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | ஆடி மாத தேரோட்டம் |
உற்சவர்: | கள்ளழகர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.[1]
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
கோயில் கலைச் சிறப்புகள்தொகு
- மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
- ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
- கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.
- திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
- வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
- கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
- இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
- கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
அமைவிடம்தொகு
மதுரை நகரிலிருது 21 கி. மீ., தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அருகில் அமைந்த கோயில்கள்தொகு
- அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது.
- பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாதொகு
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்[2]. கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். [3]அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். [4] வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை[5] என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.[6]
தேரோட்டம்தொகு
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.
தலவரலாறுதொகு
சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
சிலப்பதிகாரத்தில்தொகு
அவ்வழி படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு. என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.
மேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் . ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது.ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ஜ்வலா நரசிம்மர்தொகு
கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்
தலத் தகவல்தொகு
- மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
- தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
- காட்சி - சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
- திசை - கிழக்கே திருமுக மண்டலம்
- தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
- விமானம்- சோமசுந்தர விமானம்
- உற்சவர் - கள்ளழகர்
மூலவர் சிறப்புதொகு
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.[7]
நைவேத்தியம்தொகு
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.[8]
பாடல்கள்தொகு
- பெரியாழ்வார் - 24 பாடல்கள்
- ஆண்டாள் - 11 பாடல்கள்
- பேயாழ்வார் - 1 பாடல்
- திருமங்கையாழ்வார் - 33 பாடல்கள்
- பூதத்தாழ்வார் - 3 பாடல்கள்
- நம்மாழ்வார் - 36 பாடல்கள்
உதாரணமாக
- சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
- இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
- மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
- சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.
ஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பரிபாடலில்தொகு
இக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்
பாடல் (மூலம்) | செய்தி |
கள்ளணி பசுந்துளவினவை | கருந்துளசி மாலை அணிந்தவன் |
கருங்குன்று அனையவை | கருங்குன்றம் போன்றவன் |
ஒள்ளொளியவை | ஒளிக்கு ஒளியானவன் |
ஒரு குழையவை | ஒரு காதில் குழை அணிந்தவன் |
புள்ளணி பொலங்கொடியவை | பொலிவுறும் கருடக்கொடி உடையவன் |
வள்ளணி வளைநாஞ்சிலவை | மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன் |
சலம்புரி தண்டு ஏந்தினவை | சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன் |
வலம்புரி வய நேமியவை | சங்கும், சக்கரமும் கொண்டவன் |
வரிசிலை வய அம்பினவை | வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன் |
புகர் இணர் சூழ் வட்டத்தவை | புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன் |
புகர் வாளவை | புள்ளி போட்ட வாள் ஏந்தியவன் |
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=247
- ↑ https://www.vikatan.com/news/spirituality/155371-this-story-about-chithirai-thiruvizha-festival.html
- ↑ "அழகர் ஆற்றில் இறங்குவது". ஆனந்த விகடன் (21-04-2016).
- ↑ "கள்ளழகர் தரிசனம்". குங்குமம் (01.04.2013).
- ↑ "Etir Sevai". The Hindu (Chennai, India). 18 April 2011. http://www.hindu.com/2011/04/18/stories/2011041861280400.htm.
- ↑ https://m.dinamalar.com/detail.php?id=833
- ↑ https://www.vikatan.com/news/spirituality/148977-thaila-pradistai-in-madurai-alagarmalai-temple.html
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=21350