பெரியாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மற்றும் ஆண்டாளின் தந்தை

பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.[1][2] திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.

பெரியாழ்வார்
பிறப்புபொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
திருவில்லிபுத்தூர், தமிழ்நாடு
இயற்பெயர்விஷ்ணு சித்தர்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

திருப்பல்லாண்டு பிறந்த கதை தொகு

வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்ற பெரியாழ்வார், அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடியதே திருப்பல்லாண்டு.

பெரியாழ்வார் பெயர்க்காரணம் தொகு

இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனது.

திருப்பல்லாண்டின் மேன்மை தொகு

இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

இன்றும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும், வைணவக் கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின்போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியைத் திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இராமானுசர் கொள்கைகளைப் பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

வடமொழி வேதங்களுக்கு "ஓம்" ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்தத் 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது.

பாண்டியனின் ஐயம் தீர்த்து பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் மதுரையை அடுத்த இருந்தையூர்க் கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள இரண்டு கோலங்களைப் பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார் என அறியக்கிடக்கிறது.

இலக்கியப் பணி தொகு

இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.

கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்தன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாழ்வார்&oldid=3668149" இலிருந்து மீள்விக்கப்பட்டது