அஷ்டகவர்கம்

அஷ்டகவர்கம் (ashtakavarga) என்பது பராசர முனிவர் கூறிய சோதிட பலன் கூறும் முறையாகும். அவர் தனது சீடர் மைத்ரேயி என்பவருக்கு இவற்றைப் போதித்தார்.

அறிமுகம்

தொகு

சோதிட சாத்திரத்தில் இரண்டு அம்சங்கள் உண்டு. அவை சாமான்ய அம்சம், நிச்சய அம்சம் எனப்படும். அதில் ஷட் பலம், தசா, யோகம், ராசி சீலம், கிரக சீலம் முதலானவை சாமான்ய அம்சம் எனப்படும். அஷ்டக வர்கமானது நிச்சய அம்சம் எனப்படும். "அஷ்டம்" என்றால் "எட்டு" எனப் பொருள்படும். "அஷ்டகவர்கம்" என்றால் எட்டு விதமான பலன்களின் வர்கமாகும்.

பொதுவாக கிரகங்கள், சாதகரின் பிறப்பு சமயத்தில், சாதகத்தில் தாங்கள் நின்ற இடத்திலேயே நிரந்தரமாக நிற்பதில்லை. அவை எப்பொழுதும் சஞ்சரித்துக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக பிறப்பு சமயத்தில் சாதகத்தில் சூரியன் மேஷ ராசியில் நின்றால், பிறப்பு நிகழ்ந்த மூன்றாம் மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இது போலவே மற்ற கிரகங்களும் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் பன்னிரண்டு ராசிகளிலும் கோட்சாரத்திலும் (கோள்+சாரம்)(Zodiac - Constellations) சஞ்சரிக்கும் நிலையில், பிறப்பு சாதகத்திற்கான கிரக சஞ்சார நிலைகளை மையமாக வைத்து கணக்கிடும்போது, கிரகங்கள் ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களையும், ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது தீயபலன்களையும் தருவதை அறியமுடிகிறது.

கோட்சாரத்தில் ராகு, கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் தரும் அனுகூல, பிரதிகூல பலன்கள், பிறப்பு சாதகத்தில் ராகு, கேதுக்கள் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்கள் மற்றும் லக்னம் அமைந்த ராசி (7+1=8) இவைகளை மையப்படுத்தி கூறப்படுவதால் இதற்கு "அஷ்டகவர்கம்" என்று பெயர். அஷ்டகவர்கத்தில் ராகு, கேதுக்களுக்கு இடமில்லை.

அஷ்டகவர்க முறையில் ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்களைத்தரும். அதில் சுப வர்கம், அசுப வர்கம் இரண்டும் கலந்திருக்கும். சுப வர்கத்தை அனுகூல பிந்துக்கள் என்றும், அசுப வர்கத்தை பிரதிகூல ரேகைகள் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஒரு கிரகம், ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்களைத்தரும் என்பதால் ஏழு கிரகங்களும் சேர்ந்து ஒரு ராசிக்கு (7*8=56) 56 வர்க பலன்களைத் தரும். எனவே அதிக பட்சமாக ஒரு ராசிக்கு 56 வர்க பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்கள் வீதம் பன்னிரண்டு ராசிகளுக்கு (8*12=96) 96 வர்க பலன்களைத்தரும். ஏழு கிரகங்களும் சேர்ந்து பன்னிரண்டு ராசிகளுக்கு (7*8*12=672) 672 வர்க பலன்களைத் தருகின்றன. இந்த 672 வர்க பலன்களில் 337 வர்க பலன்கள் சுபத்தன்மையுடையவையாகும். மீதமுள்ள 335 வர்க பலன்கள் அசுபத்தன்மையுடையவையாகும்.

கிரகம் சுபவர்கம் அசுபவர்கம் மொத்தம்
சூரியன் 48 48 96
சந்திரன் 49 47 96
செவ்வாய் 39 57 96
புதன் 54 42 96
குரு 56 40 96
சுக்கிரன் 52 44 96
சனி 39 57 96
மொத்தம் 337 335 672

பொதுவாக அஷ்டகவர்க கணிதம் செய்யும்போது அசுப வர்கத்தை கணக்கிடுவதில்லை,சுப வர்கம் மட்டுமே கணக்கிடப்படுகிறது.சுபவர்கத்தை வடமொழியில் "பிந்துக்கள்" என குறிப்பிடுவது வழக்கம்.தமிழில் இதை "பரல்கள்" என குறிப்பிடுகிறார்கள்."பிந்து" "பரல்" என்ற இவ்விரண்டு வார்த்தைகளின் பொருள் "புள்ளி" என்பதாகும். ஆங்கிலத்தில் இதை "பெனிபிக் பாயிண்ட்"(Benefic Point) எனக் குறிப்பிடுகிறார்கள்.

அஷ்டகவர்க முறையில் ஒரு ராசியானது எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவை கக்ஷயங்கள் என அழைக்கப்படுகின்றன.ஒரு ராசியில் மொத்தம் எட்டு கக்ஷயங்கள் அமைந்திருக்கும்.அந்த எட்டு கக்ஷயங்களுக்கும் முறையே அதிபதிகளாக சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், லக்னம் என்ற வரிசை முறையில் அமைவர். பன்னிரண்டு ராசிகளிலும் கக்ஷ்ய அதிபதிகள் இந்த வரிசை முறையிலேயே அமைவர்.

ராசி சக்கரத்தில் எப்படி ராகு, கேதுக்களுக்கு ஆட்சிப்பொறுப்பு வழங்கப்படவில்லையோ, அது போல கக்ஷயங்களிலும் ராகு, கேதுக்களுக்கு ஆட்சிப்பொறுப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணத்தினாலேயே அஷ்டகவர்க பலன்கள் சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், லக்னம் இவை பிறப்பு ஜாதகத்தில் அமைந்த ராசியை மையமாகக்கொண்டு கணக்கிடப்படுகின்றன. இதுபோல் கோட்சாரத்திலும் ராஹு,கேது நீங்கலாக மற்ற ஏழு கிரஹங்களின் கோட்சார நிலை மட்டுமே அஷ்டகவர்க பலன் கூறும் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அஷ்டகவர்க கணிதம் மூன்று விதமாகும்.

1.பின்னாஷ்ட வர்கம்

தொகு

ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்காக, அந்த கிரகம்,மற்ற ஆறு கிரகங்கள்,லக்னம்(1+6+1=8) இவை எட்டும் சேர்ந்து பன்னிரண்டு ராசிகளுக்கும் தரும் சுப வர்க பலன் களை தனியாக கணக்கிடுவது பின்னாஷ்ட வர்கம் எனப்படும்.

2.ப்ரஸ்தார அஷ்டகவர்கம்

தொகு

ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்காக, அந்த கிரகம்,மற்ற ஆறு கிரகங்கள்,லக்னம்(1+6+1=8) இவை எட்டும் சேர்ந்து பன்னிரண்டு ராசிகளுக்கும் தரும் சுப வர்க பலன் களில் எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் தங்கள் சுப வர்க பலன்களைத் தருகின்றன என்பதைத் தனியாக கணக்கிட்டு தெளிவாக காண்பிப்பது ப்ரஸ்தார அஷ்டகவர்கம் எனப்படும்.

3.சர்வாஷ்டக வர்கம்

தொகு

ஏழு கிரகங்களுக்கும் தனித்தனியாக கணக்கிடப்பட்ட பின்னாஷ்ட வர்கங்களில் பன்னிரண்டு ராசிகளிலும் உள்ள பின்னாஷ்டக சுப வர்க பலன்களை ராசிவாரியாக சேர்த்துக்கூட்டி கணக்கிடுவது சர்வாஷ்டக வர்கமாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டகவர்கம்&oldid=3463645" இலிருந்து மீள்விக்கப்பட்டது