அ. மு. யூசுப் சாகிப்

அ. மு. யூசுப் சாகிப் (1928- 1993) இந்தியாவில் புகழ்பெற்ற ஓர் இசுலாமிய பத்திரிகையாளரும், எழுத்தாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், சிற்றிதழ் ஆசிரியருமாவார். சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். தலை சிறந்த பேச்சாளரான இவரை நாவலர் யூசுப் என்றே அழைத்தனர்.

பிறப்புதொகு

அ. மு. யூசுப் சாகிப் 1928 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும்.

எழுத்துத் துறைதொகு

ஏ.எம். யூசுப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1943 ஆம் ஆண்டு, அதாவது தனது 15 வயதிலேயே கதம்பம்என்ற கையெழுத்து இதழை எஸ். எம். உமருடன் இணைந்து நடத்தினார். பக்கர் என்பவரின் ஓவியங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன. மேலும் பால்யன் என்ற இதழிலும் எழுதி வந்தார், 1947 ஆம் ஆண்டு காரைக்காலில் முஸ்லிம் லீக் என்ற இதழை தானே தொடங்கி நடத்தி வந்தார். இக்கால கட்டத்தில் இந்தியாவில் செய்தித் தணிக்கை காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு உட்பட்டார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் இவரது நண்பர்கள் இவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெளிவந்து கொண்டிருந்த மலாயா நண்பன் இதழில் ஆசிரியர் கரீம் கனியுடன் சில காலம் பணியாற்றி விட்டு நாடு திரும்பினார். சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய இவர் 1952ம் ஆண்டு மறுமலர்ச்சி எனும் வார இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.[1] இசுலாமிய இதழ்களில் நீண்ட காலங்களாக வெளிவந்த இதழாகவும், சில காலங்கள் அதிக விற்பனையுள்ள சிற்றிதழாகவும் இது இருந்துள்ளது. மறுமலர்ச்சி 'இசுலாமியக் கலைக்களஞ்சியம்' எனும் நூலினையும் வெளியிட்டுள்ளது.

அரசியல்தொகு

இவர் முஸ்லிம் லீக்கில் இணைந்து “தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக” வளர்ச்சியடைந்தார். காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார்.

நீரிழிவு நோய் பாதிப்புதொகு

இவர் நீரிழிவு நோய் காரணமாக மிகவும் பாதிப்படைந்தார். இதில் ஒரு காலை இழந்தார். இருப்பினும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் "கால் போனால் போகட்டுமே, பேனா பிடிக்க கை இருக்கின்றதே, தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று இதழியல் பணி தொடர்ந்தார்.

இறப்புதொகு

இவர் ஏப்ரல் 23, 1993 அன்று அவருடைய 67வது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்தொகு

  1. "நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப்பின் வாழ்க்கை வரலாறு". 10 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மு._யூசுப்_சாகிப்&oldid=3128980" இருந்து மீள்விக்கப்பட்டது