ஆசிரியத்தளை
யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் உறுப்புக்களில் ஒன்றான தளைகளில் ஒரு வகையே ஆசிரியத்தளை ஆகும்.[1] ஆசிரியப்பா எனும் செய்யுள் வகைக்குச் சிறப்பாக உரியதாதலால் இத் தளை ஆசிரியத்தளை என வழங்கப்படுகின்றது.
ஆசிரியத்தளையின் இலக்கணம்
தொகுசெய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு:
- 1. நிலைச்சீர் எப்பொழுதும் ஈரசைச்சீராக (இயற்சீர்) இருக்க வேண்டும்.
- 2. மேற்படி சீரின் ஈற்று அசை நேரசை ஆகவோ, நிரையசை ஆகவோ இருக்கலாம்.
- 3. நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரேவகை அசைகளாக இருத்தல் வேண்டும். அதாவது நேரும் நேருமாக அல்லது நிரையும் நிரையுமாக இருத்தல் வேண்டும்.
இதன் அடிப்படையில் இரண்டுவிதமான ஆசிரியத்தளைகள் அமைகின்றன.
- 1. நேரொத்த ஆசிரியத்தளை - இது நேரசையும் நேரசையும் இணைந்து உருவாவது.
- 2. நிரையொத்த ஆசிரியத்தளை - இது நிரையும் நிரையும் இணைந்து அமைவது.
ஆசிரியத்தளை அமையும் விதங்கள்
தொகுஆசிரியத்தளையின் வெவ்வேறு வகையான அமைப்புக்கள் அசைச் சேர்க்கையின் ஒழுங்குகளின் அடிப்படையில் கீழே பகுத்துக் காட்டப்பட்டுள்ளது.
நிலைச்சீர் | வருஞ்சீர் | ||
---|---|---|---|
வாய்பாடு | அசை விபரம் | அசை விபரம் | வாய்பாடு |
தேமா | நேர்.நேர் | நேர்.நேர் | தேமா |
நேர்.நிரை | கூவிளம் | ||
நேர்.நேர்.நேர் | தேமாங்காய் | ||
நேர்.நேர்.நிரை | தேமாங்கனி | ||
நேர்.நிரை.நேர் | கூவிளங்காய் | ||
நேர்.நிரை.நிரை | கூவிளங்கனி | ||
புளிமா | நிரை.நேர் | நேர்.நேர் | தேமா |
நேர்.நிரை | கூவிளம் | ||
நேர்.நேர்.நேர் | தேமாங்காய் | ||
நேர்.நேர்.நிரை | தேமாங்கனி | ||
நேர்.நிரை.நேர் | கூவிளங்காய் | ||
நேர்.நிரை.நிரை | கூவிளங்கனி | ||
கூவிளம் | நேர்.நிரை | நிரை.நேர் | புளிமா |
நிரை.நிரை | கருவிளம் | ||
நிரை.நேர்.நேர் | புளிமாங்காய் | ||
நிரை.நேர்.நிரை | புளிமாங்கனி | ||
நிரை.நிரை.நேர் | கருவிளங்காய் | ||
நிரை.நிரை.நிரை | கருவிளங்கனி | ||
கருவிளம் | நிரை.நிரை | நிரை.நேர் | புளிமா |
நிரை.நிரை | கருவிளம் | ||
நிரை.நேர்.நேர் | புளிமாங்காய் | ||
நிரை.நேர்.நிரை | புளிமாங்கனி | ||
நிரை.நிரை.நேர் | கருவிளங்காய் | ||
நிரை.நிரை.நிரை | கருவிளங்கனி |
எடுத்துக்காட்டு
தொகுகொய்ப்பூந் தினையும் கொழும்புன வரகும் |
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் |
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் |
மாவும் பலாவும் குழடுத்து ஓங்கிய |
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் |
மேலேயுள்ளது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு ஆசிரியப்பா. இதை வாய்பாடாக எழுதுவதன்மூலம் எவ்வாறான தளைகள் அமைந்துள்ளன என்பதை இலகுவாக அறியமுடியும்.
கொய்ப்பூந் | தினையும் | கொழும்புன | வரகும் |
தேமா | புளிமா | கருவிளம் | புளிமா |
காயமும் | மஞ்சளும் | ஆய்கொடிக் | கவலையும் |
கூவிளம் | கூவிளம் | கூவிளம் | கருவிளம் |
வாழையும் | கமுகும் | தாழ்குலைத் | தெங்கும் |
கூவிளம் | புளிமா | கூவிளம் | தேமா |
மாவும் | பலாவும் | சூழடுத்து | ஓங்கிய |
தேமா | புளிமா | கூவிளங்காய் | கூவிளம் |
தென்னவன் | சிறுமலை | திகழ்ந்து | தோன்றும் |
கூவிளம் | கருவிளம் | புளிமா | தேமா |
செய்யுளிலுள்ள சீர் இணைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்து அவற்றின் வாய்பாடுகளை ஆசிரியத்தளை அமையும் விதம் பற்றிய அட்டவணையுடன் ஒப்பிட்டால் எங்கெங்கே ஆசிரியத்தளைகள் அமைகின்றன என்பதை அறிய முடியும்.
1. | கொய்ப்பூந் தினையும் | - தேமா புளிமா | - ஆசிரியத்தளை அல்ல |
2. | தினையும் கொழும்புன | - புளிமா கருவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
3. | கொழும்புன வரகும் | - கருவிளம் புளிமா | - ஆசிரியத்தளை |
4. | வரகும் காயமும் | - புளிமா கூவிளம் | - ஆசிரியத்தளை |
5. | காயமும் மஞ்சளும் | - கூவிளம் கூவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
6. | மஞ்சளும் ஆய்கொடிக் | - கூவிளம் கூவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
7. | ஆய்கொடிக் கவலையும் | - கூவிளம் கருவிளம் | - ஆசிரியத்தளை |
8. | கவலையும் வாழையும் | - கருவிளம் கூவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
9. | வாழையும் கமுகும் | - கூவிளம் புளிமா | - ஆசிரியத்தளை |
10. | கமுகும் தாழ்குலைத் | - புளிமா கூவிளம் | - ஆசிரியத்தளை |
11. | தாழ்குலைத் தெங்கும் | - கூவிளம் தேமா | - ஆசிரியத்தளை அல்ல |
12. | தெங்கும் மாவும் | - தேமா தேமா | - ஆசிரியத்தளை |
13. | மாவும் பலாவும் | - தேமா புளிமா | - ஆசிரியத்தளை அல்ல |
14. | பலாவும் சூழடுத்து | - புளிமா கருவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
15. | சூழடுத்து ஓங்கிய | - கருவிளம் கூவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
16. | ஓங்கிய தென்னவன் | - கூவிளம் கூவிளம் | - ஆசிரியத்தளை அல்ல |
17. | தென்னவன் சிறுமலை | - கூவிளம் கருவிளம் | - ஆசிரியத்தளை |
18. | சிறுமலை திகழ்ந்து | - கருவிளம் புளிமா | - ஆசிரியத்தளை |
19. | திகழ்ந்து தோன்றும் | - புளிமா தேமா | - ஆசிரியத்தளை |