ஆடிப் பூரம்

ஆடிப் பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடித் திங்களிலே பூர நாண்மீன் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். அம்மன் பிறந்தநாள் ஆகும்.[1]


ஆடிப் பூரம் அம்பாளுக்குரிய விசேட நாளாகும். ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப் பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடித் திங்களில் வரும் பூர நாள் ஆகும்.[2] பூமா தேவியே ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

ஆடித் திங்களில் பூர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள்

தொகு

மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப் பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப் பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப் பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆடிப்பூரம் 2024 : வழிபட வேண்டிய நேரமும், குழந்தை, திருமண வரம் கிடைக்க செய்ய வேண்டிய பூஜையும்". Samayam Tamil. Retrieved 2025-02-27.
  2. "Aadi Pooram 2025 ,Andal Jayanthi 2025 Date in – Significance & Celebration". Astroved Astropedia (in ஆங்கிலம்). Retrieved 2025-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிப்_பூரம்&oldid=4216794" இலிருந்து மீள்விக்கப்பட்டது