ஆட்கொணர்வு மனு
ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) (/ˈheɪbiəs ˈkɔːrpəs/; என்ற மத்திய கால இலத்தீன் மொழிச் சொல்லிற்கு நீ உயிருடன் இருக்கிறாய் எனப் பொருளாகும்)[1]) என்பது ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாக கருதினால், அந்நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனு ஆகும். இம்மனுவினை சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது.[2] தனி மனித உரிமை பாதிக்கப்படும்போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.
ஆட்கொணர்வு நீதிப் பேராணை முதலில் இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது. பின்னர் பொதுநலவாய நாடுகளிலும், ஏனைய பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.
ஒருவரை வேண்டுமென்றோ அல்லது தவறாக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும். அந்த சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளை காக்க இயலும்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "habeas corpus". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
- ↑ "Habeas Corpus Defined and Explained". lectlaw.com. Archived from the original on 2010-08-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.