ஆத்திரையன் பேராசிரியன்

ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் தொல்காப்பியத்துக்குப் பொதுப்பாயிரம் ஒன்று பாடியுள்ளார். பனம்பாரனார் பாடிய சிறப்புப்பாயிரம் தொல்காப்பியரின் உடன்சாலை மாணாக்கரால் அவரது காலத்திலளயே பாடப்பட்டது. ஆத்திரையன் பேராசிரியன் பாடிய பொதுப்பாயிரம் 10 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. இவர் இதனைப் பாடினார் என்பதையும், பாடியது பொதுப்பாயிரப் பாடல் என்பதையும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[1] பேராசிரியர், ‘ஆத்திரேயன் பேராசிரியன்’ என வேறொருவரைக் குறிப்பிடுவதால் இருவரும் வேறு வேறு புலவர்கள் என்பது தெளிவு.

நுண்பொருள்மாலை என்னும் நூல் ‘அத்திரி கோத்திரத்தினர் ஆத்திரேயர்’ என்று இவரைக் குறிப்பிடுகிறது. சிவஞான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சங்கர நவச்சிவாயர் உரையைத் திருத்தும்போது சிறப்புப் பாயிரத்தை அடுத்து ஆத்திரேயன் பொதுப்பாயிரம் என்று சுட்டி 33 அடிகள் கொண்ட, பொதுப்பாயிரம் பற்றியதான இந்தப் பாயிரப் பாடலைத் தந்துள்ளார்.

தொல்காப்பியப் பொதுப்பாயிரம் [2]தொகு

வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்
வான் யாறு அன்ன தூய்மையும், வான் யாறு
நிலம் படர்ந்து அன்ன நலம் படர் ஒழுக்கமும்
திங்கள் அன்ன கல்வியும், திங்களொடு
ஞாயிறு அன்ன வாய்மையும், யாவதும் (5)
அஃகா அன்பும், வெஃகா உள்ளமும்
துலை நா அன்ன சமனிலை உளப்பட
எண்வகை உறுப்பினது ஆகித் திண்ணிதின்
வேளாண் வாழ்க்கையும் தாஅள் ஆண்மையும்
உலகியல் அறிதலும், நிலைஇய தோற்றமும் (10)
பொறையும் நிறையும் பொச்சாப்பு இன்மையும்
அறிவும் உருவும் ஆற்றலும் புகழும்
சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மையும்
கற்போர் செஞ்சம் காமுறப்படுதலும்
இன்னோர் அன்ன தொன்னெறி மரபினர் (15)
பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியர்
அறனே பொருட்பயன் இன்பு எனும் மூன்றின்
திறன் அறி பனுவல் செப்புங்காலை
முன்னர்க் கூறிய எண்வகை உறுப்பினுள்
ஏற்பன உடையர் ஆகிப் பாற்பட (20)
சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தலும்
சொல்லிய பொருளொடு சூழ்ந்து நன்கு உணர்தலும்
தன்னோர் அன்னோர்க்குத் தான் பயன்படுதலும்
செய்ந்நன்றி அறிதலும் தீச் சார்வு இன்மையும்
மடி தமுகாற்றம் மானம் பொச்சாப்புக் (25)
கடுநோய் சீற்றம் களவே காமம்
என்று இவை இனமையும் சென்று வழிபடுதலும்
அறத்துறை வழாமையும் குறிப்பு அறிந்து ஒழுகலும்
கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்
மீட்டு அவை வினலும் விடுத்தலும் உரைத்தலும் (30)
உடையர் ஆகி நடை அறிந்து இயலுநர்
நன் மாணாக்கர் என்ப; மண்மிசை
தொன்னூற் பரவைத் துணிபு உணர்ந்தோரே.

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005
  • தொல்காப்பியம், பொருளதிகாலம், பேராசிரியம், கழக வெளியீடு 1959

அடிக்குறிப்புதொகு

  1. தொல்காப்பியம், மரபியல் நூற்பா 100 (பேராசிரியர் பகுப்பின்படி நூற்பா 98)
  2. இந்தப் பாடல் தொல்காப்பியம், சதாசிவப் பண்டாரத்தாரின் 1923 ஆம் ஆண்டுப் பதிப்பில் வெளிவந்துள்ளது என்று மு. அருணாசலம் தன் 13ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.