ஆந்திரர் (Andhirar) தெலுங்குமொழி பேசும் மக்கள் ஆந்திரர்களென்றும், அவர்கள் மிகுதியாக வசிக்கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங்கப்படுகிறது.[1] ஆதி ஆந்திரர் சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட சமூகத்தினராவர்.

ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது.[2] புண்டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தசுயுக்கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந்நூல் கூறுகிறது.

அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் உரோமாபுரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில் அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000 காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.

புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக் காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர் ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின் வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட பகுதி, மேலைக் கடற்கரைப் பகுதி, கலிங்க நாட்டின் மேற்கெல்லையை ஒட்டிய தக்கிணத்தின் வடபகுதி, மைசூர், பெல்காம், தார்வார் இவற்றின் சிற்சில பகுதிகள் ஆகிய இந்நிலப்பரப்பில் ஆந்திர மன்னரின் ஆட்சி ஓங்கியிருந்ததென்று மட்டும் சொல்லலாம். இவர்கள் பின்னர் பல்லாரியிலும், கிருட்டிணா, கோதாவரி மாவட்டங்களிலும் தமது ஆட்சியைச் செலுத்தினார்கள். இவர்கள்தாம் இக் காலத்தில் வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம் என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள் இல்லை.

தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் (11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு என்னும் சொல்லை மொழிக்கும், ஆந்திர என்னும் சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும் மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு, தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து வந்தன.

எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ளபடி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப் பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங்கிருந்து கிருட்டிணா நதியின் முகத்துவாரத்தையடுத்த நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி. பி. முதல் நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஆலரின் சப்தசதியில் குறிப்பிட்டபடி அவர்களுடைய மொழி பைசாச மொழியின் சிதைவா யிருக்கலாமென்றும் தெளிவாகிறது. தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகம்", தமிழிணையம் - மின்னூலகம், தமிழ் இணைய நூலகம் , Tamil Digital Library (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-10-21
  2. "காரமான ஆந்திரா : மாநிலங்கள் அறிவோம்", Hindu Tamil Thisai, 2015-03-10, பார்க்கப்பட்ட நாள் 2023-10-21
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரர்&oldid=3812974" இலிருந்து மீள்விக்கப்பட்டது