ஆனந்தப் பையுள்

ஆனந்தப் பையுள் என்பது நல்லோன் இறப்பை எண்ணி மற்றவர்கள் இரங்குதல். இது வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘கண்படை நிலை’ எனக் குறிப்பிடுகிறது. [1]

புறநானூற்றில் ஆனந்தப் பையுள் என்னும் துறைக் குறிப்புடன் ஐந்து பாடல்கள் உள்ளன. [2]

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்தபோது பலர் அவனை நினைந்து உயிர் துறந்தனர். இறந்தவர்களைத் தாழியில் வைத்துப் புதைப்பது அக்கால வழக்கம். இறந்தவனுக்குத் தாழி (இக்காலத்தில் சவப்பெட்டி) செய்யும் குயவனைப் பார்த்து அவனுடன் இறந்தவர்களையும் சேர்த்துப் புதைக்க, “அவ்வளவு பெரிய தாழி உன்னால் செய்யமுடியுமா” என ஐயூர் முடவனார் பாடல் வினவுகிறது. [3]

சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சுவான் என கோள்நிலை கண்டு கணித்தறிந்த கூடலூர் கிழார் அவ்வாறே அவன் அந்த நாளிலேயே துஞ்சக் கண்டு வருந்திப் பாடுகிறார். [4]

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனுடன் உடன்கட்டை ஏறுதல் இன்பம் எனப் பாடிகிறார். [5]

மாறோக்கத்து நப்பசலையார் ‘என்னை’ என்று குறிப்பிட்டுத் தன் தலைவன் ஒருவன் துஞ்சினான் எனப் பாடுகிறார். 280 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், வானவன், வளவன், செம்பியன், சோழர், அவியன், கபிலன் ஆகியோர் இவரது பாடல்களில் குறிப்பிடபடுகின்றனர். இவர்களில் எந்த அரசன் இறப்பினைப் பாடுகிறார் என்பது தெரியவில்லை. இவன் இறப்பால் பாணர், துடியர், கைமைக் கோலம் பூணும் மகளிர் ஆகியோர் நிலை என்ன ஆகும் என்று எண்ணிப் புலவர் நெஞ்சழிகிறார். [6] மேலே குறிப்பிட்ட ஐயூர் முடவனார் பாடலைக் கொண்டு இப்பாடலில் குறிப்பிடப்படுபவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனக் கொள்வது சாலும்.

காண்க

அடிக்குறிப்பு

தொகு
  1. மண் கொண்ட மறவேந்தன் கண்படைநிலை மலிந்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை 183
  2. புறநானூறு 228, 229, 246, 247, 280
  3. புறம் 228
  4. புறம் 229
  5. புறம் 246, 247,
  6. புறம் 280
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தப்_பையுள்&oldid=2505212" இலிருந்து மீள்விக்கப்பட்டது