ஆபுத்திரன்

ஆபுத்திரன் கதை மணிமேகலை என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. [1] [2] [3]

வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். பெரியவன் ஆன ஆபுத்திரன் அவ்வூர் அந்தணன் தன் இல்லத்தில் செய்த வேள்வி ஒன்றில் பலியிட இருந்த பசு ஒன்றைக் காப்பாற்ற இரவோடு இரவாக அதனைக் கவர்ந்து சென்றான். அதனைக் கண்டுகொண்ட மறைகாப்பாளர் முரடர்களுடன் சென்று வழியில் மடக்கி, அடித்து “நீ அந்தணன் இல்லை. புலைமகன்” என்று திட்டி. அவனிடமிருந்த பசுவைக் கைப்பற்றிக்கொண்டனர். அப் பசு தன்னைக் கைப்பற்றிய அந்தணர் உவாத்தியைக் (ஆசிரியர் தலைவனைக்) கொம்பால் குத்தித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது..

ஆபுத்திரன் அறிவுரை

ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறினான். பசும்புல் மேய்ந்து பால் தரும் பசு செய்த கொடுமை என்ன என வினவினான். “நீ ஆ புத்திரன் தானே! திருமால் தந்த மறைநூல் அறியாதவன்” எனச் சொல்லி ஆபுத்திரனை இகழ்ந்தனர்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை

ஆபுத்திரன் அந்தண முனிவர் சிலரது பிறப்பைச் சுட்டிக் காட்டினான். அசலன் ஆவின் மகன். சிருங்கி மானின் மகன். விரிஞ்சி புலியின் மகன். கேசகம்பளன் நரியின்மகன். நான்மறை போற்றும் இவர்கள் பிறப்பால் இழிந்தவர் அல்லர் என விளக்கினான். அங்கிருந்த அந்தணர்களில் ஒருவன் ஆபுத்திரன் சாலி பெற்ற பிள்ளை என்னும் வரலாற்றை எடுத்துரைத்தான்.

பின்னர் ஆபுத்திரன் முனிவர் ஒருவர் தேவமகள் ஒருத்தியைப் புணர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற கதையை எடுத்துக்காட்டித் தன் தாய் சாலியும் தவறிலள் என விளக்கினான்.

ஆபுத்திரன் பட்ட துன்பம்

இதனைக் கேட்ட வளர்ப்புத் தந்தை இளம்பூதியும் அந்தணர் பசுவைத் திருடிய கள்வன் என ஆபுத்திரனை வெறுத்தான். அத்துடன் அவ்வூர் மக்களும் ஆபுத்திரன் பிரமச்சாரியாக பிச்சை கேட்டு வந்தபோது அவனது கடிஞை பாத்திரத்தில் அரிசி போடாமல் கற்களைப் போட்டனர். அதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் செல்வர் வாழ்ந்த தென்மதுரை சென்று சிந்தாதேவி கோயில் பீடிகையில் (மேடையில்) தங்கிக்கொண்டு, இல்லந்தோறும் சென்று, தன் கடிஞையில் பிச்சை எடுத்துவந்து, காணமுடியாதவர், கேட்கமுடியாதவர், நடக்கமுடியாதவர், பேணுநர் இல்லாதவர், குட்டம் போன்ற பிணிவாய்ப்பட்டோர் முதலானோர் பலருக்கும் கொடுத்தபின் எஞ்சிய உணவை உண்டு உயிர் வாழ்ந்தான்.

கடவுள் கடிஞை அமுதசுரபி

தொகு

மாரிக் காலத்து நள்ளிருளில் யாம வேளையில் வழிப்போக்கர் சிலர் ஆபுத்திரனிடம் வயிறுகாய் பெரும்பசி வாட்டுகிறது என்றனர். பிச்சை வாங்கிய உணவை, முடியாதவர்களுக்குத் தந்தபின் எஞ்சிய உணவை உண்டுவந்த அவன், செய்வது அறியாமல் மனம் நொந்துகொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த கோயிலின் தெய்வம் சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவன் கையில் கொடுத்த்து. அதில் உள்ள உணவு அள்ள அள்ள வளர்ந்துகொண்டே இருக்கும். அதனை அவன் தேவியைத் தொழுது வாங்கிக்கொண்டான். வழிப்போக்கர்களின் பசியைப் போக்கினான். பின்னர் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி பசியைப் போக்கிக்கொண்டிருந்தான்.

வானவர் தலைவன் இந்திரன் கொடையாளி. ஆபுத்திரன் கொடையால் இந்திரனின் பாண்டுகம்பளம் (அரியணை) ஆட்டம் கண்டது. ஆபுத்திரனை ஒடுக்க எண்ணினான். அந்தணன் உருவில் ஆபுத்திரனிடம் வந்து வரம் தருவதாகச் சொன்னான். ஆபுத்திரன் தன்னிடம் உள்ள கடிஞை போதும் என்றான். வஞ்சக இந்திரன் அந்தக் கடிஞை பயனற்றுப் போகும்படி நாடும் மக்களும் 12 ஆண்டுகள் பசியின்றி வளத்துடன் வாழத் தானே வரம் தந்துவிட்டுச் சென்றான். ஆபுத்திரனிடம் உணவு பெறுபவர் யாரும் இல்லாததால் கடிஞை செயலற்றுப் போயிற்று.

ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்றான். அப்போது வங்கக்கப்பலிலிருந்து இறங்கிய சிலர் சாவகத் தீவு மக்கள் பசியால் வாடுவதாகக் கூறினர். சாவகத் தீவுக்கு வங்கத்தில் சென்னறான். இடையில் புயல். இதை என்னும் பாய்மரப் பாய் கிழிந்துவிட்டது. நாய்கர் (மாலுமிகள்) மணிபல்லவத் தீவில் இறங்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர்.

ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச் சென்றுவிட்டான். மணிபல்லவத் தீவில் மக்களே இல்லை. (இக்காலக் கச்சத் தீவு போலும்) கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான்.

இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள்.

ஆபுத்திரன் மறுபிறப்பு

தொகு

சாவகத் தீவிலிருந்த ‘தவளமால்வரை’யில் ‘மண்முகன்’ என்னும் முனிவன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனிடம் ஒரு பசு இருந்தது. அதன் குளம்பும், கொம்பும் பொன்னால் ஆனவை. அது கன்று ஈனா முன்பே பால் சுரந்து எல்லாருக்கும் ஊட்டிக்கொண்டிருந்தது. முக்காலமும் உணர்ந்த முனிவன் கூறியபடி அதன் குடலில் வளராமல் அந்தப் பசிவின் வயிற்றிலிருந்து ஒரு ஆண்குழந்தையாக ஆபுத்திரன் தோன்றினான். குழந்தை இல்லாத அவ்வூர் அரசன் அக் குழந்தையைப் பெற்றுச் சென்று வளர்த்து மன்னனாக்கினான்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 13 ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை,
  2. 14 பாத்திர மரபு கூறியகாதை
  3. 15 பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபுத்திரன்&oldid=3305317" இலிருந்து மீள்விக்கப்பட்டது