ஆரிய சேகரன்

ஆரியசேகரன் என்பவன் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியசேகரன் என விரித்துரைக்கப்படுகிறான்.

இவன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1311) படைத்தலைவர்களில் ஒருவன். இவன் பாண்டிய நாட்டுச் செவ்விருக்கை நல்லூர் பகுதியிலுள்ள சக்கரவர்த்தி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவன்.[1] ‘மதிதுங்கன்’ என்பது இவனது இயற்பெயர். ‘தனி நின்று வென்ற பெருமான்’ என்னும் பட்டம் வழங்கி மாறவர்மன் இவனைப் பாராட்டியிருக்கிறான்.

இவன் சிங்கள அரசனைப் போரில் வென்று அவனது ‘அவகிரி’க் கோட்டையைக் கைப்பற்றினான்.[2] புகழேந்திப் புலவர் இலங்கை சென்று இந்த ஆரியசேகரனைப் பாடிப் பரிசில் பெற்றார்.[3] கொழும்பு பொருட்காட்சிச்சாலையில் உள்ள ஓர் ஆவணப்பாடல் இந்த ஆரியசேகரனைக் குறிப்பிடுகிறது. அந்தப் பாடல்

வெண்பா

கங்கணம் வேற் கண் இணையால் கட்டினார் காமர்வளைப்
பங்கயங்கை மேல்திலதம் பாரித்தார் – பொங்கொலிநீர்ச்
சிங்கைநகர் ஆரியனை சேரா அனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.[4]

பாடல் சொல்லும் செய்தி

அனுரேசர் எனப் போற்றி வணங்கப்படும் சிவபெருமான், கோயில் கொண்டுள்ள ஊர் [5] வாழ் மாதர் சிங்கைநகர் ஆரியனை (ஆரிய சேகரனை) தம் இணைவேற்கண் கங்கணத்தால் கட்டிப்போட்டனர். கண்டோர் விரும்பும் தம் வளைக்கைத் தாமரையாலும் கட்ட விரும்பித் தம் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டனர்.

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. இவனது பெயர் விரிவிலுள்ள ‘சக்கரவர்த்தி’ என்னும் சொல் இவனது பிறந்த ஊரைக் குறிக்கும். ‘ஆரிய’ என்னும் அடைமொழி ‘ஆர்’ என்னும் உரிச்சொல் அடிப்படையிலிருந்து பிறந்தது. இவ்வுரிச்சொல் அறிவும் வல்லமையும் நிறைந்திருத்தலைக் குறிக்கும்.
  2. ஆண்டு 1288, மகாவம்சம் குறிப்பிடுகிறது.
  3. தமிழ் நாவலர் சரிதை.
  4. இந்த ஆவணப்பாடலின் ஆண்டு 1290.
  5. அனுராதபுரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிய_சேகரன்&oldid=2715727" இலிருந்து மீள்விக்கப்பட்டது