முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான்.[1]

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.[2].இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார். மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு