ஆலங்கேணி

இலங்கையில் உள்ள ஒரு கிராமம்

ஆலங்கேணி(Alankerny) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவி்ல் அமைந்துள்ள தொன்மையான தமிழ்க் கிராமமாகும். இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

அமைவிடம் தொகு

திருகோணமலை நகரிலிருந்து பத்து மைல் தொலைவிலும் தம்பலகாமத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

பெயர் வரக் காரணம் தொகு

இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.

தொன்மை தொகு

ஆலங்கேணிக்கு தென்மேற்கே ஏழு மைல் தூரத்தில் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த திருநகரில் பாண்டியனூற்றுச் சிவாலயம் அதற்கண்மையில் “பாவநாசத் தீர்த்தம்” போன்றவைகள் இன்று அழிந்த நிலையில் காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய மாரி வயல்களை தன்னகத்தே கொண்ட இந்தத் திருநகர் இன்று திரிபடைந்து “தீனேரி” என அழைக்கப்படுகிறது அந்த திருநகர் அழிந்தபோது அங்கு வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே ஆலங்கேணியில் குடியேறி வாழ்ந்து வருவதாக ஐதிகம்.

அமைப்புக்கள் தொகு

ஆலங்கேணி , தாமரைக்கேணி, ஈச்சந்தீவு என மூன்று பிரிவாக இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆலங்கேணியின் பிரதான வீதியில் விநாயகர் அரசினர் தமிழ் மகா வித்தியாலயமும் ஈச்சந்தீவில் விபுலானந்தர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.மற்றும் உப அஞ்சல் நிலையம், கூட்டுறவுச் சங்கம், சனசமூகநிலையம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

புகழ்பெற்றவர்கள் தொகு

குமாரவேல் போன்ற பிரசித்த ஆயுள்வேத வைத்தியர்களும் சோதிட சாஸ்திர வல்லுனர்களும் தேர்ந்த அண்ணாவிமார்களும் ,கவிஞர்களும் ஆலங்கேணியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தாமரைத்தீவான், கேணிப்பித்தன் ,கௌரிதாசன் ,தங்கராசா ,தவராசா, யோகேஸ்வரன், சுந்தரம் போன்றோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

‘ஆலையூரான்’என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் திரு.க.தங்கராசா அவர்கள் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளராக் கடமையாற்றியவர். நாடறிந்த நல்ல எழுத்தாளர்.இதே போல ‘கேணிப்பித்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதும் திரு.எஸ்.அருளானந்தம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர். இதுவரை எழுபது நூல்களுக்கு மேல் வெளியீடு செய்துள்ளார்.

திரு.பத்தினியர், திரு.தாமோதரம்பிள்ளை போன்ற அண்ணாவிமார்கள் இங்கே நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாபெருங் கலைஞரான திரு.க.கணபதிப்பிள்ளை அண்ணாவியார் இங்கு வந்து நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி பெரும் புகழ் பெற்றதை இங்குள்ள பெரியார்கள் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; eelamlifeblog என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்கேணி&oldid=3481716" இலிருந்து மீள்விக்கப்பட்டது