ஆல்ட்மார்க் சம்பவம்


ஆல்ட்மார்க் சம்பவம் (Altmark Incident; நோர்வே மொழி: Altmark-affæren) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைக் குறிக்கிறது. இதில் பிரித்தானியப் போர்க்கைதிகளை ஏற்றிச் சென்ற ஆல்ட்மார்க் என்ற ஜெர்மானியப் போக்குவரத்து கப்பலை பிரிட்டனின் வேந்திய கடற்படை நார்வீஜிய கடல் எல்லைக்குள் வழிமறித்து போர்க்கைதிகளை விடுவித்தது.

ஆல்ட்மார்க் சம்பவம்
இரண்டாம் உலகப் போரின் பகுதி

இறந்த ஜெர்மானிய மாலுமிகளின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்படுகின்றன.
நாள் பெப்ரவரி 16, 1940
இடம் ஜோஸ்சிங் கடல்நீரேரி, நார்வே
பிரித்தானிய வேற்றி
பிரிவினர்
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
 ஐக்கிய இராச்சியம்

தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் டாவ் ஐக்கிய இராச்சியம் ஃபிலிப் வோன்
பலம்
சரக்குக் கப்பல் ஆல்ட்மார்க் எச். எம். எசு கொஸ்சாக்
1940 துவக்கத்தில்ஆல்ட்மார்க் கப்பல்

செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அட்லாண்டிக் பெருங்கடலில் இரு தரப்பு கடற்படைகளும் மோதிக் கொண்டன. ஆனால் ஐரோப்பிய நிலக்களத்தில் பெரிய மோதல்கள் எதுவும் ஏப்ரல் 1941 வரை நிகழவில்லை. இக்காலத்தில் இசுக்கேண்டிநேவியா நாடான நார்வே அச்சு மற்றும் நேச கூட்டணிகளில் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. இரு தரப்புக்கும் உதவுவதில்லை என்ற நிலையைக் கொண்டிருந்தது.

பெப்ரவரி 1940ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட பிரித்தானிய வர்த்தகக் கப்பல்களிலிருந்து காப்பாற்றப்பட்ட பிரித்தானியப் போர்க்கைதிகளை ஏற்றி வந்த ஜெர்மானிய சரக்குக் கப்பல் ஆல்ட்மார்க் நார்வேஜிய எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதி வழியாக ஜெர்மனி செல்ல முற்பட்டது. அதனை சிலமுறை சோதனையிட்ட நார்வீஜியக் கடற்படை அதிகாரிகள் அதில் நடுநிலையை மீறும் செயல்களில் ஈடுபடவில்லை என்று சான்றளித்து அதனைப் பயணிக்க அனுமதித்தனர். ஆனால் ஆல்ட்மார்க்கில் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகள் இருக்கலாம் என பிரித்தானிய கடற்படை தளபதிகளுக்கு சந்தேகம் எழுந்தது. ஆல்ட்மார்க்கை விரட்டி மடக்குமாறு எச். எம். எசு கொஸ்சாக் டெஸ்ட்ராயர் ரக போர்க்கப்பலுக்கு உத்தரவிட்டனர். ஆல்ட்மார்க்கை விரட்டிய் கொஸ்ஸாக் ஜோஸ்சிங் கடல்நீரேரியில் (Jøssingfjord) அதனை மடக்கியது. இவ்விடம் நார்வீஜிய கடல் எல்லைக்குள் இருந்ததால், நார்வீஜியக் கடற்படை அதிகாரிகள் ஆல்ட்மார்க்கைத் தாக்கக் கூடாதென பிரித்தானியக் கடற்படையைத் தடுத்தனர். ஆனால் வேந்திய கடற்படைத் தளபதிகளின் உத்தரவின்படி கொஸ்சாக்கின் மாலுமிகள் வலுக்கட்டாயமாக பெப்ரவரி 16ம் தேதி ஆல்ட்மார்க் கப்பலில் ஏறி சோதனையிட்டனர். தங்கள் நாட்டு போர்க்கைதிகளைக் கண்டுபிடித்து விடுவித்தனர். அப்போது நடந்த மோதலில் சில ஜெர்மானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர்; மேலும் சிலர் காயமடைந்தனர். ஆல்ட்மார்க்கில் சிறைவைக்கப்பட்டிருந்த 299 பிரித்தானியப் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.[1]

இச்சம்பவத்தால் நார்வீஜிய நடுநிலைமை இரு தரப்பினராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. போர் விதிமுறைகளை மீறி தங்கள் நாட்டு போர்க்கைதிகளை கொண்டுசெல்ல ஜெர்மானியர்களுக்கு அனுமதி அளித்ததாக பிரித்தானியர்களும், நடுநிலை அறிவித்த ஒரு பகுதியில் தங்கள் நாட்டுக் கப்பலைத் தாக்க பிரித்தானியர்களுக்கு அனுமதி அளித்ததாக ஜெர்மானியர்களும் நார்வே மீது குற்றம் சாட்டினர். இரு தரப்பினருக்கு நார்வேயின் நடுநிலை மீது சந்தேகம் வந்ததால், அதனைக் கைப்பற்ற திட்டங்கள் வகுக்கத் தொடங்கினர். அடுத்து நிகழ்ந்த நார்வே மீதான படையெடுப்புகளுக்கு இச்சம்பவம் ஒரு தூண்டுதலாக அமைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "A Great Naval Exploit: The Return of the H.M.S. Cossack". The Times (London): p. 10. 19 February 1940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ட்மார்க்_சம்பவம்&oldid=2975683" இலிருந்து மீள்விக்கப்பட்டது