ஆழ்கடல் கடற்படை

ஆழ்கடல் கடற்படை (Blue-water navy) என்பது தனது நாட்டுத் துறைமுகங்களிலிருந்து நெடுந்தொலைவில் பெருங்கடல்களில் செயல்படக்கூடிய ஒரு கடற்படையைக் குறிக்கிறது. இதற்கு திட்டவட்ட வரையறைகள் எதுவும் இல்லை. இத்தகு கடற்படைகள் நெடு நாட்களுக்கு தங்கள் தளங்களிலிருந்து நெடுந்தொலைவில் போர் புரியக் கூடியவை. போர்க்கப்பல்கள் நீண்ட காலமாக தங்கள் தளங்களுக்குத் திரும்பாமல் போர் புரியத் தேவையான தளவாடங்கள், எரிபொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக் கப்பல்களும் இத்தகு கடற்படைகளில் இடம் பெறுகின்றன. திட்டவட்ட வரையறைகள் இல்லாத காரணத்தால் ஒரு நாட்டின் கடற்படை எப்போது “ஆழ்கடற்படை” நிலையை அடைகிறது என்பது குறித்து சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்த நிலையை அடைய வானூர்தி தாங்கிக் கப்பல்கள் கடற்படையில் இடம்பெறுவது அவசியம் என்ற கருத்தும் நிலவுகிறது. தற்போது அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் ரசியக் கடற்படைகளே ஆழ்கடற்படைகள் என கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் கடற்படை அந்நாட்டின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பகுதிகளில் மட்டும் செயல்படக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தால் அது "கடல் எல்லைக் கடற்படை" (Green-water navy) என்று அழைக்கப்படுகிறது.

ஆழ்கடற்படைகளுக்கு அவசியமான வானூர்தி தாங்கிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்கடல்_கடற்படை&oldid=2917587" இருந்து மீள்விக்கப்பட்டது