ஆஸ்பார்ன் விளைவு

ஆஸ்பார்ன் விளைவு (Osborne effect) எதிர்பாராத விளைவுகளின் வகைகளில் ஒன்று. ஒரு வணிக நிறுவனம் தனது எதிர்காலச் செயல்பாடுகளைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட, அவ்வறிக்கையின் தாக்கத்தால் அந்நிறுவனம் நேர்மறையான விளைவுகளைச் சந்திப்பதே ஆஸ்பார்ன் விளைவு எனப்படுகிறது. 1985 இல் திவால் ஆகிய ஆஸ்பார்ன் கணினி நிறுவனத்தின் பெயரே இதற்கும் பெயரானது.[1][2] தன்னையே பொய்யாக்கும் அருள்வாக்குக்கும் இந்த விளைவு எடுத்துக்காட்டாக அமையும்.

ஆஸ்பார்ன் கணினி நிறுவனம் ஒரு மேசைக்கணினி தயாரித்த நிறுவனம். அதன் முக்கிய பண்டம் “ஆஸ்பார்ன் 1” மேசைக்கணினி. 1981 முதல் இக்கணினியை விற்பனை செய்து ஆஸ்பார்ன் நிறுவனம் தனது வருவாயில் பெரும்பகுதியை ஈட்டி வந்தது. 1983 இல் நிறுவுனர் ஆடம் ஆஸ்பார்ன், தனது நிறுவனத்தின் அடுத்த கட்ட வெளியீடுகளான புதிய மேசைக் கணினிகளைப் பற்றி ஊடகங்களில் அறிவிக்கலானார். ஆஸ்பார்ன் 1 கணினியில் இல்லாது பல புதிய, நவீன வசதிகளை அவை கொண்டிருந்தன எனப் பரப்புரை செய்தார். ஆனால் அப்புதிய கணினிகள் அப்போது தயார் நிலையில் இல்லை. மேலும் சில ஆண்டுகள் கழித்தே அவற்றை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. முந்திக்கொண்டு ஆஸ்பார்ன் செய்த பரப்புரையினால் கவரப்ப்பட்டு வாடிக்கையாளர்கள் ஆஸ்பார்ன் 1 கணினியை வாங்குவதை நிறுத்திவிட்டனர். புதிய மேசைக்கணினிகள் வந்த பின்னால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டனர். இதனால் ஆஸ்பார்ன் 1 கணினியின் விற்பனை வெகுவாகக் குறைந்து ஆஸ்பார்ன் கணினி நிறுவனத்தின் வருவாய் தடைபட்டது. புதிய கணினிகளை உற்பத்தி செய்ய முடியாமலும் பழைய கணினிகள் விற்பனையாகாமல் தேங்கியதாலும் நிறுவனம் திவால் ஆனது.

மேற்கோள்கள்

தொகு
  1. Osborne, Adam; Dvorak, John C. (1984). Hypergrowth: the rise and fall of Osborne Computer Corporation. Idthekkethan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918347-00-9.
  2. Grindley, Peter (1985). Standards, strategy and policy: cases and stories. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-828807-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்பார்ன்_விளைவு&oldid=3582888" இலிருந்து மீள்விக்கப்பட்டது