இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும்

இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்பது ஜோசப் ஜேக்கப்சால் மோர் ஆங்கில ஃபேரி டேல்ஸ் என்ற ஆங்கில விசித்திரக்கதைகளின் தொகுப்பில் இணைக்கப்பட்ட ரோமானிய விசித்திரக் கதை . இக்கதைக்கு ஆதாரமாக அவர் பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூமின் இன் ஜிப்சி டென்ட்டைக்" குறிப்பிடுகிறார். இம் மூலத்தொகுப்புக்குக் கதையை அளித்தவர் வேல்சு ரோமானியரான ஜான் ராபர்ட்ஸ் ஆவார். [1] க்ரூம் இங்கிலாந்தில் ஒரு வயதான அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற பெயரில் வெளியிட்டார்.[2]

இந்த கதையின் ஒரு பதிப்பு ரூத் மானிங்-சாண்டர்ஸ் எழுதிய தி ரெட் கிங் அண்ட் தி விட்ச்: ஜிப்சி ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸில், ஆன் ஓல்ட் கிங் அண்ட் ஹிஸ் திரீ சன்ஸ் ஆஃப் இங்கிலாந்து" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

கதைச் சுருக்கம் தொகு

ஒரு வயதான அரசரைத் தொலைதூர நாட்டிலுள்ள தங்க ஆப்பிள்களால் மட்டுமே குணப்படுத்த முடியும். அவரது மூன்று மகன்களும் தங்க ஆப்பிள்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். வழியில் தனித்தனியாகப் பிரிந்து வேவ்வேறு பாதைகளில் சென்றனர். இளைய மகன் ஒரு காட்டில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தான், அங்கு ஒரு முதியவர் அவரை ஒரு அரசரின் மகன் என்று வாழ்த்தி, குதிரையைக் கொட்டிலில் கட்டிவிட்டு ஏதாவது சாப்பிடச் சொன்னார். உணவுக்குப் பிறகு, அவருக்குத் தான் ஒரு அரசரின் மகன் என்று எப்படித் தெரியும் என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் இளவரசன் எதற்காக வந்திருக்கிறான் என்பது உட்படப் பல விவரங்கள் தனக்குத் தெரியுமென்று கூறினார். மேலும் அன்றிரவு அவனை அங்கு தங்குமாறும் சொன்னதோடு, இரவில் பாம்புகளும் தேரைகளும் அவன் மீது ஊர்ந்து செல்லுமென்றும் அவன் அசையாமல் படுத்திருக்க வேண்டுமென்றும் கூறினார். மாறாக அசைந்துவிட்டால் அவற்றுள் ஒன்றாக அவன் மாறிவிடுவான் என்றும் எச்சரித்தார்.

இளவரசர் சிறிது நேரமே தூங்கினார். எனினும் அசையவேயில்லை. காலையில், முதியவர் அவனுக்கு காலை உணவையும், ஒரு புதிய குதிரையையும், குதிரையின் காதுகளுக்கு இடையில் வீசுவதற்கு ஒரு நூல் உருண்டையையும் கொடுத்தார். இளவரசன் அதை எறிந்து துரத்தியபோது அம்முதியவரின் சகோதரரைச் சந்தித்தான். முதலாமனவரைவிட இவர் அழகற்று இருந்தார். அங்கும் அதே வரவேற்பு; அதே மாதிரியான இரவுத் தங்கல். இந்த சகோதரர் அவரை மூன்றாவது சகோதரரிடம் அனுப்பினார்.

மூன்றாவது சகோதரர், இரண்டாவது சகோதரரை விட அழகற்றவராக இருந்தார். மூன்றாமவர் அவனை ஒரு கோட்டைக்குச் போகச் சொன்னார். அங்குள்ள அன்னங்களிடம் தன்னை ஏரியைக் கடந்து கோட்டைக்குச் சுமந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்; அக்கோட்டையை ராட்சதர்கள், சிங்கங்கள், கடல்நாகங்கள் காவல் காத்துக்கொண்டிருக்கும்; ஆனால் அவை தூங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக ஒரு மணிக்குக் கோட்டைக்குள் சென்று இரண்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும்; கோட்டைக்குள் சென்றபின் சில அழகான அறைகளையும் அடுத்து சமயலறையும் கடந்து தோட்டத்துக்குள் நுழைய வேண்டும்; அங்குள்ள மரத்திலிருந்து தங்க ஆப்பிள்களை பறித்துக்கொண்டு சென்றவழியாகவே திரும்பி கோட்டையைவிட்டு வெளியேற வேண்டும்; வெளியேறிய பின்னர் கோட்டையிலிருந்து அவனைத் துரத்தி வரலாமென்பதால், திரும்பிப் பார்க்கமால் வேகமாகப் பயணித்து மூன்றாவது முதிய சகோதரரின் வீட்டை அடைய வேண்டும் என்ற விவரங்களைக் கூறினார்.

அன்று இரவில் தூங்கும்போது எதுவும் தொந்தரவு செய்யாது என்றும் உறுதியளித்தார். அதேபோல எதுவும் தொந்திரவு செய்யவில்லை. காலையில், எந்தவொரு அழகான பெண்ணின் காரணமாகவும் அவன் வேலையில் தாமதித்து விடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.

இளவரசன் அன்னங்களின் உதவியால் கோட்டையை அடைந்தான். அங்கே ஒரு அழகான பெண்ணைக் கண்டு தனது அரசச்சின்னங்கொண்ட வார்க்கச்சை, தங்க கடிகாரம், கைக்குட்டையைப் அவளுடன் பரிமாற்றிக் கொண்டு அவளை முத்தமிட்டான். பின்னர் ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதால் வேகமாக ஓடிச் சென்று கோட்டையை விட்டு வெளியேறி முதியவரின் வீட்டை அடைந்தான்.

முதியவர் அவனை ஒரு கிணற்றுக்கு அழைத்து வந்து, அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசுமாறு வலியுறுத்தினார். அவ்வாறு செய்ததும் அவர் ஒரு இளைஞராகவும், அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது . இரண்டாவது சகோதரரின் வீட்டில், இளவரசனுக்குப் பாம்புகள் அல்லது தேரைகள் இல்லாத புதிய படுக்கை கிடைத்தது. இரண்டாவது முதிய சகோதரரும் அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசச் சொன்னார். அவ்வாறே செய்ததும் அவரும் அழகான இளைஞராகவும் அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது. இதேபோல மூத்த முதிய சகோதரர் இல்லத்திலும் நடந்தது.

இளவரசன் தங்க ஆப்பிள்களோடு தனது சகோதரர்களை மீண்டும் சந்தித்தான். அவர்கள் அவனுடைய தங்க ஆப்பிள்களைத் திருடிவிட்டுச் சாதாரண ஆப்பிள்களை வைத்துவிட்டு அவனுக்கு முன் அவர்களது வீட்டை அடைந்தனர். அவன் வீட்டை அடைந்ததும் அவனுடைய ஆப்பிள்கள் அவனுடைய சகோதரர்கள் கொண்டுவந்ததைப்போல நன்றாக இல்லை. அவனது தந்தை அவை விஷம் கலந்தவையென எண்ணி, அவனுடைய தலையை வெட்டச் சொல்லி உத்தரவிட்டார். காவற்தலைவன் இளவரசன் மேல் இரக்கப்பட்டு அவன் தலையை வெட்டாமல் அவனைக் காட்டிற்குள் விட்டுவிட்டான். அங்குவந்த கரடியிடமிருந்து தப்ப இளவரசன் மரத்தின்மீது ஏறினான். கரடி அவனைக் கீழே இறங்கிவரும்படிக் கூறி அவனை சில கூடாரங்களுக்கு அழைத்துச் சென்றது. அங்கு அக்கரடி ஜூபல் என்ற அழகான இளைஞனாக மாறியது. இளவரசன் வைத்திருந்தத் தங்கக் கைக்கடிகாரம் எங்கோ தொலைந்து போனது. ஆனாலும் அவன் அவர்களுடன் தங்கி மகிழ்ச்சியாக இருந்தான். ஒரு நாள் கரடியிடமிருந்து தான் தப்புவதற்கு ஏறிய மரத்தில் அது இருப்பதையறிந்து அம்மரத்தின் மீதேறினான்.

இதற்கிடையில், அரசரின் மகன்களில் ஒருவர் அங்கு இருப்பதை உணர்ந்த இளவரசி, படையுடன் புறப்பட்டாள். அவள் அரசரை அடைந்ததும், அவனுடைய மகன்களைப் பார்க்க வேண்டும் என்று கோரினாள். மூத்தவன் வந்தபோது, அவன் அவளுடைய கோட்டைக்கு வந்திருந்ததாகப் பொய் சொன்னான், ஆனால் அவள் கைக்குட்டையைக் கீழே எறிந்து அதன்மீது நடக்கச் சொன்னாள். அவன் அதன் மேல் நடந்தபோது அவன் கால் முறிந்தது; பின்னர் இரண்டாவது சகோதரனும் அதையே சொன்னான். அவனுடைய காலும் உடைந்தது. அரசருக்கு வேறு மகன்கள் இருக்கிறார்களா என்று அவள் கேட்டாள்; அரசர் காவல் தலைவனிடம் அனுப்பினார், அவர் இளவரசரைக் கொல்லவில்லை என்று ஒப்புக்கொண்டார். அரசர் இளவரசனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் காட்டுக்குள் சென்று ஜூபலைக் கண்டனர். அவன் . இளவரசன் இருந்த மரத்தை சுட்டிக்காட்டினான். இளவரசனும் அவளது கைக்குட்டைக்கு மேல் நடந்தபோது அவனது கால் உடையவில்லை. அதனால் அவன் தான் தன்னைக் கோட்டையில் முத்தமிட்ட இளவரசன் என்று இளவரசி அறிந்து கொண்டாள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு, அவளுடைய கோட்டைக்கு திரும்பிச் சென்றனர்.

கதை வகை தொகு

இந்தக் கதையானது சர்வதேச ஆர்னே-தாம்சன்-உதர் குறியீட்டில், "தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் உள்ள மகன்கள்" அல்லது "வாழ்க்கை நீர்" என ATU 551 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கதை வகையானது, "இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும், அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் உள்ளது.[3][4]

தழுவல்கள் தொகு

ஆங்கில எழுத்தாளர் ஆலன் கார்னர் "மேல்வால்சின் கோட்டை" (The Castle of Melvales) என்ற தலைப்பில் இதன் தழுவலாக ஒரு கதையைத் தந்திருக்கிறார். அவரது "ஆலன் கார்னரின் பிரித்தானிய விசித்திரக் கதைகள்" என்ற புத்தகத்தில் அது காணப்படுகிறது. அவரது கதையில் வரும் அரசனின் மகன்களின் பெயர்கள்: ஆலிவர், வாலன்டைன்.[5]

குறிப்புகள் தொகு

  1. Joseph Jacobs, More English Fairy Tales, "The King of England and his Three Sons" பரணிடப்பட்டது 2010-04-27 at the வந்தவழி இயந்திரம்
  2. Groome, Francis Hindes. Gypsy Folk-Tales. London: Hurst & Blackett. 1899. pp. 220-232.
  3. Aarne, Antti; Thompson, Stith. The types of the folktale: a classification and bibliography. Folklore Fellows Communications FFC no. 184. Helsinki: Academia Scientiarum Fennica, 1961. pp. 195, 197.
  4. Uther, Hans-Jörg (2004). The Types of International Folktales: A Classification and Bibliography, Based on the System of Antti Aarne and Stith Thompson. Suomalainen Tiedeakatemia, Academia Scientiarum Fennica. பக். 320–321. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-951-41-0963-8. 
  5. Garner, Alan. Alan Garner's Book of British fairy tales. New York: Delacorte Press, 1984. pp. 146-158, 160.